6.11.2012

என் சகோதரியை நான் மெச்சுகிறேன்... -பரீட்சார்த்தப் பதிவு


 என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை
அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும்
நான் நினைக்கவில்லை
அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்
அப்பாவையும் போலத்தான்
அவரும் கவிதைகள் ஏதும் எழுதவதில்லை
என் சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான்
மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன்
எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட
செத்துப் போவதையே விரும்புவார்
இது - ஏற்கெனவே நிலவும் ஒரு கவிதையைப் போல
எனக்குத் தோன்றுகிறது - எனது சொந்தக்காரர்கள்
எவரும் கவிதை எழுதுவது இல்லை என்பது..

எனது சகோதரியின் காகிதக் கட்டுக்களினிடையில்
ஏதும் பழைய கவிதைகள் காணப்படவில்லை
அவளது கைப்பையிலும் கூட
புதிதாக எழுதப்பட்ட கவிதைகள் ஏதும் இல்லை
எனது சகோதரி என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டபோது
அவள் கவிதைகளை எனக்கு வாசித்துக் காண்பிக்கிற
திட்டமேதுமில்லை என்பதையும் நான் அறிவேன்
அவளது சு+ப்புகளில் அற்புதமாக ருசி கூடியிருக்கிறது
அவளது கையெழுத்துப் பிரதிகளில்
காபியின் சிதறின சொட்டுகள் ஏதுமில்லை

நிறைய குடும்பங்கள் இருக்கின்றன 
எவருமே கவிதைகள் எழுதாமல்
அப்படியே எங்கேயேனும் எழுதுபவரிருப்பாரானால்
அநேகமாக ஒரே ஒருவராகத்தான் இருப்பார்
சிலவேளை கவிதை தலைமுறைகளினிடையே அருவியாகத் 
தெளித்துக் கொண்டிருக்கும்
பரஸ்பர அனுபவத்தில் பெருநீர்ச்சுழிப்பாய்த் தங்கியிருக்கும்

எனது சகோதரி அற்புதமான பேச்சுநடை கொண்டவள்
அவளது கருத்துகள் விடுமுறை காலத் தபால் கார்டு
எழுதுவதற்கு அப்பால் போனதில்லை
ஒவ்வொரு வருடமும் மாறாமல் அதே வாசகங்கள்தான்
இருக்கும்
ஆனால், அவள் திரும்பவும் என்னிடம் வரும்போது
அவள் சொல்வாள்
அனைத்தும் பற்றி
அனைத்தும் பற்றி
அந்த எழுத்துக்களிலிருக்கும் அனைத்தும் பற்றி.

-விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

'ஹிட்லரின் முதல் புகைப்படம்' தொகுப்பிலிருந்து....
தமிழில்: ஆர்.பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்

4 comments:

தமிழ்நதி said...

'ஒன்றை இழக்கும்போதே அதன் அருமை தெரியும்'என்பதை நேற்று உணர்ந்துகொண்டேன். இருந்தாற்போல எனது தளத்தில் பதிவுகள் தெரியவில்லை. அழுத்தினால் வேறு பக்கத்திற்குச் சென்றது. ஏறத்தாழ முழுநாளை, சரிப்பண்ணுவதில் இழந்தேன். ஆனால், இன்று மீண்டும் வழக்கம்போல அதுவாகவே இயங்குகிறது. அருகில் இருக்கின்ற எல்லாவற்றிலும், எல்லோரிலும் கரிசனையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று இன்று நினைத்துக்கொண்டேன். நினைப்பதற்கு என்ன... காசா... பணமா:)))

தனிமரம் said...

கவிதை வலிமை மிக்கது!ம்ம்

நந்தினி மருதம் said...

கவிதை அழுத்தமானது
உள்ளே இறங்கிவிட்டு வெளியே வரமுடியாதபடி

தமிழ்நதி said...

நன்றி நந்தினி, தனிமரம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இந்தக் கவிதை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.