
கையிலொரு மதுக்குவளையுடன்
தாவரங்களுடனும்
தத்தும் அணில்களுடனும் பேசுகிறவன்
புனித பீடங்களின் மீதெல்லாம்
சிறுநீர் கழிக்கிறவன்
புனையப்படும் தேவதைகளில்
பச்சை இறைச்சி வாடையடிக்குதென
உரத்த சிரிப்புடனே எள்ளுபவன்
துணுக்குறும்படியான கெட்டவார்த்தைகளை
வாசிப்பிற்கிடையில் இயல்பேயெனப் போட்டு
அடுத்த வரியில்
அன்றைய காலநிலை குறித்துப் பேசிச்செல்பவன்
இன்னபிற விதங்களில்
கலகக்காரச் சட்டகத்துள் அடைபட்டிருந்தவனை
பன்றிகள் சேறுழன்று திரியும் தெருவொன்றில்
தற்செயலாகச் சந்தித்தேன்
குனிந்து தலையிடிபடாமல்
குடிசையினுள் வரச்சொன்னான்
தூளி நனைத்த மூத்திரம்
எங்களை நெருங்குவதற்கிடையில்
துடைத்துவிடும்படி
மற்றொரு மூலையில் சுருண்டிருந்த மனைவியை
கெட்டவார்த்தை இணைப்புடன் ஏவியபின்
இலக்கியம் பேசினான்
விடைபெறும்போது
தொய்ந்திருந்த சட்டைப்பையைத் தட்டி
பசிக்குதென்று இருநூறு ரூபா கடன்கேட்டுத் தாழ்ந்த
விரல்களைப் பார்த்தேன்
எரவாணத்தில் இடித்துக்கொள்ளாமலே
கண்கள் கலங்கிவிட்டதெனக்கு.
பிற்குறிப்பு: இப்படியொரு கவிதையை எங்கோ வாசித்த நினைவு... உங்களில் யாருக்காவது வேறேதாவது கவிதை ஞாபகம் வருகிறதா?