11.16.2006

உறவுகள் உறைந்த தேசம்விமானநிலையம் - ஏ.சி. குளிர் - கண்ணாடிச் சுவருக்கப்பால் இறக்கை விரித்தபடி உறைநிலைக்குச் சென்றுவிட்ட பிரமாண்டமான பறவைகள்போன்ற விமானங்கள். வெண்மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து பறத்தலின் பிரமிப்புகள் அற்றுப் போனவனாக அவன் காத்திருக்கிறான். விடியற்காலையில் எழுந்த அயர்ச்சி இழுக்க, தன்னைப் போல காத்திருப்போரில் கண்களை ஓட்டுகிறான். பார்வையில் தட்டுப்படுகிறது அந்த முகம். நடுத்தர வயதைக் கடந்த அந்தப் பெண் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

“எங்கோ பார்த்திருக்கிறேன்”

தலையைக் குனிந்தபடி ஞாபக இடுக்குகளில் தேடுகிறான். கிடைக்கவில்லை. கையிலிருந்த ஆனந்த விகடனில் ‘தேசாந்திரி’யைப் பிரித்து அதில் அமிழ்ந்து போகிறான். தான் அலைந்த கிராமங்களில், நகரங்களில், கோயில்களில் வாசிப்பவர்களையும் கொண்டு போய் நிறுத்துகிற ராமகிருஷ்ணனின் எழுத்தில் காலம் மறக்கிறது.

மீண்டும் நிமிர்ந்து பார்க்கும்போது அந்தப் பெண் புன்னகைக்கிறாள். அவனும் புன்னகைக்க முயற்சி செய்கிறான். இப்போது எழுந்து அவனை நோக்கிவர ‘உதவி ஏதும் கேக்கப் போகிறாவோ…’கேள்வியோடு எழுந்திருக்கிறான்.

“நீ ராஜேஷ்…?”

“ஓம் அக்கா…” குழப்ப அலை ஒன்று அடித்து மனசின் கரை கழுவிப் போகிறது.

‘அக்கா…’என்ற சொல் மனசின் எந்த மூலையில் தூசிபடிந்து கிடந்ததோ… இயல்பாய் வந்தது.

“எப்படி மறந்தேன்…?” குற்றவுணர்வில் திடுக்குறுகிறது நெஞ்சு. கூடப் பிறந்தவளின் முகத்தையுமா காலநதி அள்ளிப்போகும்…!

“பாத்தியாடா எப்பிடிச் சந்திக்கிறோமெண்டு… பதினைஞ்சு வருசம் இருக்குமா உன்னைப் பாத்து…”

அவர்கள் அடுத்து என்ன பேசிக்கொள்வார்களென்பதைச் சொல்லவேண்டியதில்லை. கோயில் திருவிழா தொட்டு கொழுந்திமார் சண்டை வரை நீண்டுபோகும் அதன் அந்தத்தை யாரறிவார்…?

அக்காவையும் தம்பியையும் விமானநிலையத்தில் விட்டுவிட்டு வெளியே வந்து சற்றே உரத்துச் சிரியுங்கள். அந்தச் சிரிப்பில் கொஞ்சம் வருத்தம் தொனிக்கட்டும்.

உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டதாம். ‘மௌஸ்’என்ற எலியில் ஏறி உலகையே வலம் வந்துவிடலாமாம். பேசிக்கொள்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், கூடப் பிறந்தவர்களே ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் கடந்துபோய்விட நேர்வதுதான்.

இயந்திர வாயுள் அரைபட்டுக்கொண்டிருக்கிறது மனித வாழ்வு.

“உங்கடை அண்ணையின்ரை ரெலிபோன் நம்பரை எங்கையோ மிஸ் பண்ணீட்டன். தாறீரோ…?” சகோதரனின் நண்பர் கேட்கிறார்.
“எனக்கும் தெரியாதண்ணை… அவரோடை கதைச்சு ஏழெட்டு மாசமிருக்கும்”நண்பர் ஆச்சரியம் காட்டாமல் போகிறார்.

---

“பிள்ளை இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே… இண்டைக்காவது கொண்ணை வீட்டை கூட்டிக்கொண்டு போறியா…” ஒரு முதிய தாயின் குரல்.
“இண்டைக்குத்தானேம்மா எனக்கும் லீவு… சாப்பாட்டுச் சாமான் வாங்கவேணும்… உடுப்புத் தோய்க்க வேணும்… நிறைய வேலை கிடக்கம்மா… வாற கிழமை கட்டாயம் கூட்டிக்கொண்டு போறன்”

அந்த வயோதிபத் தாய் எதிர்பார்ப்பு வற்றி ஏமாற்றம் நிழலாட தனது அறைக்குத் திரும்புகிறாள்.

ஊரின் ஞாபகங்கள் மீது உதிர்கிறது கண்ணீர்.

வருஷம் முழுக்கப் பூமலரும் தோட்டம். வந்து வந்து போகும் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், வேப்ப மரத்தோடு உல்லாசமாகப் பேசிக்கொண்டிருக்கும் காற்று, கட்டணம் கொடுக்காது போனாலும் கற்பூரம் காட்டித் தொட்டு வணங்கத் தரும் குருக்கள், அழகிய பெண் வாழும் தெருவால் ஆயிரம் தடவை போய்வரும் விடலைகள்… காதலர்களை இணைக்கும் கோயில் திருவிழாக்கள்… காற்றுக்கு சிலிர்த்தடங்கும் வயல்கள்…
போரில் இழந்தவை அநேகம். உயிர்களை மட்டுமல்ல, ஊரை மட்டுமல்ல புலம்பெயர்ந்தபின் வாழ்வின் உயிரையும் இழந்தோம்.

வாழ்வை நாம் துரத்திக்கொண்டிருக்கிறோமா… வாழ்வு எம்மைத் துரத்துகிறதா… சிந்திக்க நேரமற்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பி.டி. உஷாவையே பின்தள்ளிவிடும் ஓட்டம்!

அலாரம் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட அதிரடியாய் விடியும். இருக்கவே இருக்கிறது ‘சான்ட்விச்’- ரூனாவோ மீனாவோ அகப்படுவதை அடைத்து எடுத்துப் போவோம். என்றைக்கும்போல் பிள்ளை இன்றைக்கும் அம்மாவோடு இருக்கும் நப்பாசையில் அழுதுபார்க்கும். மூச்! பிள்ளைக்கும் தாய்மைக்கும். அவசரமாய் முத்தம் எறிந்து அம்மா ஒரு பக்கம் அப்பா மற்றப் பக்கம் பறப்பர். தற்காலிகத் தாய் இடுப்பை உதைத்து அழும் பிள்ளை சற்றைக்கெல்லாம் சோர்ந்து உறங்கிக் கிடக்கும் ‘கிறஷின்’மூலையில். அதன் கனவில் சாமி வந்தால் கையசைத்துப் பறக்காத அம்மா வேண்டுமென்று வரம் கேட்குமோ என்னவோ…

பேரங்காடியொன்றில் சந்திக்கும் சகோதரர்கள் பேசிக்கொள்வதைக் கேளுங்கள்.

“என்ன பிள்ளையடா…?”“ஆம்பிளைப் பிள்ளை… ரெலிபோனிலை சொன்னனே அண்ணை… அண்ணி சொல்லேல்லையா…”“எங்கையடா சொல்லுறது… நான் வேலைக்கு வெளிக்கிடேக்கை அவ நித்திரை… நான் நித்திரை கொள்ள வரேக்கை அவ வேலைக்கு”

தம்பியின் பிள்ளையின் பெயரை ‘பெரியப்பாக்காரன்’அறிந்துகொள்ள எப்படியும் ஆறுமாதங்கள் ஆகும். ஞாபகத்தில் வைக்க சிரமப்பட வேண்டியதில்லை. எப்படியோ ‘ஷா’வெழுத்து (சாவெழுத்து?) அல்லது ‘ஜா’ வரப்போகிறது-முன்னே பின்னே தமிழ் எழுத்துக்கள் போட்டுக்கொண்டால் சரி. ஆங்கிலத்தின் மீது எவ்வளவு அபரிமித ஆசையோ அவ்வளவிற்கு வடமொழியின்பால் வாஞ்சை!

பயமாக இருக்கிறது, பூக்கள் உதிர்வதைப் போல ஓசையற்று உதிர்ந்துகொண்டிருக்கும் உறவுகளை நினைத்து.

உறவுகள் எதற்கு…பணத்தினால் எதையும் வாங்கிவிடலாமென்ற மமதையின் மேல் விழுகிற முதல் அடிதான் நோய்ப்படுக்கை.

காசு… காசு… என்று பறந்துகொண்டிருக்கிற பட்டத்தை வாலறுத்துத் தரையிறக்கும் வேலையை நோய் செய்கிறது.

மெல்லக் கைபிடித்து கழிப்பறைக்குக் கூட்டிப்போய் நீர்பிரியக் காத்திருந்து கழுவிக் கைபிடித்துக் கூட்டிவந்து படுக்கையில் சாய்த்து தலைதடவிக் கதைசொல்ல காசுக்குத் தெரியாது.

மரணம் மயிரிழையில் கத்தியைப்போல் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும்போதுதான் முகங்கள் ஒவ்வொன்றாக நினைவில் வரும்.
‘அகதியாய் அடிபட்டு வீடு தேடி வந்தபோது இடமில்லை என்று விரட்டினேனே… அந்தத் தம்பி இப்போது எங்கிருப்பான்..?

’‘எதைக் கொடுத்தாலும் ‘அண்ணாவுக்கு’என்று மறு கையை சிறுவயதில் நீட்டிய தங்கையின் ஏழ்மையைப் பிறிதொருகாலம் ‘வக்கில்லாதவள்’என்று ஏளனம் செய்தேனே…

‘அப்பருக்குக் காசனுப்பி எத்தினை வருஷம்… அந்தாளோடை ரெலிபோன் எடுத்துக் கதைக்கிறதே இல்லை’

மரணம் சத்தமில்லாமல் நெருங்கிக்கொண்டிருக்கிறது… நம் ஒவ்வொருவரையும்.

மௌனமும் விசும்பலும் இறந்தவரின் வெற்றிடத்தை நிறைத்திருக்கும் மரண வீடுகளிலிருந்து வெளியேறும் போது நாம் என்ன நினைத்துக்கொள்கிறோம்…

“ச்சாய்… எல்லாரும் இதுபோலை சாகப்போறோம்… ஏன் மற்றாக்களிலை கோவம் கொள்ள வேணும்… வாழும்வரைக்கும் ஒற்றுமையாய் இருந்திட்டுப்போவம்”

அந்த மயான வைராக்கியம் காரெடுத்துப்போய் வீதியை அடையும்வரைதான்.

இடம் கொடுக்காமல் முன்னேறிப் போகிற கார்க்காரனுக்கு நடுவிரலைக் காட்டுவதிலும் அவனது பிறப்பைச் சந்தேகிக்கிற வாக்கியங்களை எறிவதிலும் மீண்டும் தொடங்குகிறது முடிவற்ற வாழ்வு.

இருதய நோய், டயபடீஸ், கொழுப்பு (கொலஸ்ரோலைச் சொன்னேன்) இவையெல்லாம் வெளிநாடு வாழ் தமிழர்களின் உடம்பில் கணவன்-மனைவிபோல அல்லது சமறிக்காசு ஒழுங்காகத் தருகிற அறைத்தோழன்போல ஒட்டிவாழ்பவை. அழிச்சாட்டியம் பொருந்திய குடித்தனக்காரனாய் என்னதான் தலைகீழாக நின்றாலும் உடலைவிட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடிப்பவை. “என்ரை குஞ்சல்லோ” என்றாலும் போகாது. “இருந்த இடம் தெரியாமல் ஆக்கிப்போடுவன்”என்றாலும் மசியாது. ஆனால், சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி கொஞ்சம் அடக்கிவைக்கலாம்.

ஆனால் ‘தனிமை’நோய் உருக்கொள்ளும்போது அதை அடக்க, உறவு என்ற வேப்பிலையைத் தவிர எதனாலும் இயலாது.

தனிமை இருண்ட முகமுடைய பேய். அந்தப் பேயை விரட்ட நாம் விரும்புவதில்லை. உறவுகள் என்பவை எதிர்பார்ப்புகளைக் கொண்டவைதாம். சிலசமயம் முதுகின் பின் பேசுபவைதாம். பொறாமைப்படுவதையும் விலக்க முடிவதில்லை.ஆனாலென்ன… குறைகளோடும் சேர்த்து உறவுகள் வேண்டும். திருமண, பூப்புனித, பிறந்தநாள் வீடுகளில் சந்தித்து ‘ஹாய்… ஹாய்…’ என்று அகவுதலோடு நிறைவு பெற்றுவிடுவதுதான் உறவா…? சேலையை, நகையைத் தொட்டுப் பார்ப்பதோடு நின்றுவிடுகிறோம். மனசைத் தொட மறந்துபோகிறோம்.

உலகம் சில மனிதர்களாலும் ஆனது.

சிரித்தபடி யார் வந்தாலும் ‘என்னமோ கேக்கப் போறான் பார்’என்ற எச்சரிக்கை மணி அடிக்கிறது.

இருளும் பகையும் அச்சுறுத்தும் இரவுகளில் மரத்தின் மீது சாய்ந்து காவலிருக்கும் அந்த இளைஞன் என்ன எதிர்பார்ப்போடு அங்கிருக்கிறான்…?

தாக்க வரும் குண்டைத் தானேந்தித் தோழியைக் காத்துக் கண்மூடிய பெண் போராளி இறுதிக்கணத்தில் என்ன நினைத்தாள்…?

எங்கோ வயல்வெளிக்குள் சிறுகுடிசை. மங்கிய மண்ணெண்ணெய் விளக்கு. இன்றைக்கும் பிள்ளைகள் வந்தால்… என்ற நினைவோடு பானையில் சோறு வைத்து இருள் வெறிக்கும் அந்த மூதாட்டி எதிர்பார்ப்பது என்ன…?

போரால் அக்கக்காகக் கிழிபடும் மண்ணில்தான் இன்னும் மனிதம் வாழ்கிறது.

அற்பக் காரணங்களால் ஒவ்வொருவராய் எட்ட நிறுத்தியாயிற்று. மெல்ல மெல்லத் தனிமை இருள் படர்கிறது. பகலில் உறங்கியிருக்கும் தனிமை இரவானால் விழித்தெழுகிறது.

தொலைக்காட்சி சலனங்கள் வெறுத்துப் போக அதை அணைத்துவிடுகிறீர்கள். மனம் வெறுமை கொண்டலைகிறது. ஓசைகளற்ற வீடு அச்சுறுத்துகிறது. எல்லாப் பக்கமும் சுவர்கள்… சுவர்கள்… கதவுகள் உள்ள வீடுதான். ஆனால், பெண்களால் இலகுவில் வெளியேற முடிவதில்லை. சாவைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். தன்னிரக்கம் உந்த வெளியேறுகிறது கண்ணீர்…!

பின்னிரவு வரை திறந்திருக்கும் உணவு விடுதி… அதன் மங்கிய விளக்கொளி… மெதுவாய் மிக மெதுவாய் கசியும் இசை… கையில் ‘பியர்’ போத்தல்… நீங்கள் அழ விரும்புகிறீர்கள்…ஆண்கள் அழக்கூடாது என்று யாரோ திரும்பத் திரும்ப காதருகில் சொல்கிறார்கள். ஆனால், உரத்து முதுகு குலுங்க அழுகிறீர்கள். உங்களை அழத் தூண்டுவது எது…?

விடை உங்களிடம்தான்!

பத்தாயிரம் டாலர்களுக்கு சவப்பெட்டி வாங்குவது வேண்டுமானால் பணத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம். எங்கள் உயிரற்ற உடலைக் கடந்து போகும் எத்தனை பேருக்கு அடக்கமாட்டாமல் விம்மல் வெடிக்கிறது என்பதில்தான் நாங்கள் வாழ்ந்த வாழ்வின் பொருள் இருக்கிறது.

பின்குறிப்பு: இப்பதிவு ‘அனுபவம்’ என்பதற்குள் அடக்கப்பட்டிருத்தல் வேண்டும். தவறுதலாக ‘சிறுகதை-கவிதை’க்குள் இடம்பெற்றுவிட்டது.

2 comments:

இளங்கோ-டிசே said...

நதி,
நெகிழவைக்கும் பதிவு.
....
மிகவும் நெருக்கத்தையும் அதேசமயம் பதட்டத்தையும் எனக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன உங்கள் அனுபவப்பபதிவுகளும், கவிதைகளும்.
.....
நன்றி.

தமிழ்நதி said...

டி.சே.,

நெருக்கம் சரி… அதென்ன பதட்டம்… பதட்டப்படும்படியாகவா எழுதுகிறேன். (சும்மா பகிடிக்கு) புரிந்துகொள்ள முடிகிறது நண்பரே! பின்னூட்டத்திற்கு நன்றி.