11.15.2006

நீயற்ற நான்
ஆவல் அனல் பொறிய
தொலைபேசியில் அழைக்கிறேன் உன்னை.
இருட்டறையில் மெழுகுவர்த்தியென
பிரவேசிக்கிறதுன் குரல்.

காதலும் காமமும்
போர்தொடுக்கும் பெருவெளியில்
நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்ட
கதையின் எச்சத்தை நினைவுகூரல்
இன்றைக்கும் தொடர்கிறது.
தனிமையின் தாபத்தில்
சொற்களைத் தீட்டுகிறேன்.

கருணையைக் குரூரம் வெல்ல
உனது தேவதை படியிறங்கிப்போகிறாள்.
முடியிழந்து தலைகவிழ வைத்ததில்
கடைவாய்ப் பற்களின் விஷமிறங்கிற்று.

மனதைக் கொன்று புசித்த திருப்தி
எனின் என்ன…
இன்னும் பசியாறவில்லை!

அன்பே! புத்தகங்கள் பேசக்கூடும்
முத்தமிட இயலாத உதடுகளால்.

எத்தனை காலந்தான் இருப்பது
அதன் வரிகளோடும் வலிகளோடும்
என்னைப்போல் அலையெறியும்
கடல் முன்னே…!

No comments: