11.13.2006

நினைவூட்டுகை

எத்தனை கவனமாயிருந்தும்
கருணையற்ற இரவு
கனவுகளை அழித்துவிடுகிறது.

வருந்தியதில்லை.

இரத்த அணுக்களில் நீந்திக்கொண்டிருப்பதாய்
ஒருபொழுதில் நினைத்த பெயர்
மூளையைக் கசக்கியும்
திகைப்பிருள் வீழ்த்தி
தள்ளி நின்று நகைத்தது.

பள்ளியில் மறந்து இழந்த
பென்சில்… செருப்பு… குடை
இன்னமுமா இருக்கின்றன வெற்றிடமாய்!

மாதத்தில் மூன்றுநாள் தனியறை
மாலையானதும் மறியல்
பழமொழிகள்
புராண உதாரணங்கள்
‘வெட்கம் பழகு’ எனும் வேதங்கள்
சமையல்… தையல்… தந்திரம்…
தலையணை மந்திரம்…
நீள்கிறது பட்டியல்.

மறதியல்ல
‘நீ பெண்’எனும் நினைவூட்டுகைதான்
நீங்கள் பயங்காட்டும்
இருளைவிட எப்போதும் அருட்டுகிறது.

No comments: