12.14.2006

மனிதர்கள் மீதான மீள்வாசிப்பு

உங்களில் எத்தனை பேருக்கு அறிவுரை கேட்கப் பிடிக்கும்…? எமக்குப் பரிச்சயமான வார்த்தைகளை மற்றொருவர் உதிர்ப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு அசாத்திய பொறுமை வேண்டும். ஆனால், தனது செவிகளைத் தாரை வார்க்க ஒருவர் கிடைத்துவிட்டாரெனில், பேச்சு என்பது பேரின்பம். இப்போது நீங்கள் செவிகளையல்ல, விழிகளைச் சற்றைக்கு இதை வாசிப்பதற்கு வியர்த்தமாக்குங்கள். (பொருள் புரிந்துதான் எழுதுகிறேன்) ‘ஆண்டவர் உங்களோடு இருப்பாராக’-‘உம்மோடும் இருப்பாராக’என்ற தொனியை நான் எழுதத் தொடங்கும்போதே உணர்கிறேன். நாமெல்லோரும் பொதுவாக என்ன பேசிக்கொள்வோம்….

“காலம் கெட்டுப்போய்விட்டது”

“உண்மையான அன்பு இருக்கிறதா என்ன… எல்லாம் பணந்தான்”

“வர வர மனிதாபிமானம் என்பதே இல்லாமற் போய்விட்டது”

“அவனிடம் கவனமாக இருங்கள்… ஏமாந்த ஆள் அகப்பட்டா பிரிச்சுப் பேன் பார்த்துவிடுவான்”

ஒருவரையொருவர் கோள்சொல்வதும் குற்றஞ்சாட்டுவதும் தாழ்த்திப் பேசுவதும் தரமிறக்குவதும் ஏமாற்றுவதும் இழிவுசெய்வதும் தொல்லை செய்வதும் துரோகம் இழைப்பதும் புண்படுத்துவதும் பொறாமைப்படுவதும் காழ்ப்புணர்வும் கரித்துக்கொட்டுவதும் வம்புபேசுவதும் வலுச்சண்டைக்கிழுப்பதும் என சக மனிதரின்மீது வெறுப்பைச் சுமந்துகொண்டு அலைகிறோம். மனம் வேண்டாதவைகளைக் கொட்டும் குப்பை வண்டியாகி நாற்றமடிக்கத் தொடங்கிவிட்டது.

நாங்கள் எல்லோரும் பேசிக்கொள்வது போல ‘மனிதம் செத்துவிட்டதா…?’ என்ற கேள்வி எழும்போது பயமாகத்தானிருக்கிறது. புத்தரும் காந்தியும் இயேசுவும் அன்னை தெரசாவும் இனி எந்த உருவத்திலும் திரும்பி வருவதற்கான எதிர்வுகூறலைக் கொண்டிராத சமூகத்தில் வாழ்வதென்பது நிச்சயமாக பயங்கொள்ளத்தக்கதுதான்.

அண்மையில் வலைப்பரப்பில் செய்தியொன்றை வாசித்தேன். நடக்க முடியாமல் வீதியோரத்தில் கிடந்த ஒரு முதியவரை பொலிஸ்காரர்கள் சுடுகாட்டில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டுப் போனதாகவும் அவர் சாவை எதிர்பார்த்து இலையான்கள் மொய்க்க முனகியபடி கிடப்பதாகவும் அந்தச் செய்தி சொன்னது. ‘சே!’ என்று மனம் வெறுத்துப் போயிற்று. முகம் தெரியாதவர்கள் மீதெல்லாம் கோபம் வந்தது. வழக்கம்போல வார்த்தைப் பிச்சை போட்டதோடும், யார்யாரையோ கோபித்துக்கொண்டதோடும் எனது மனிதாபிமானம் கண்ணை மூடிக்கொண்டுவிட்டது.

வெண்பஞ்சுப்பொதியான தலை கழுத்தில் நிற்கமுடியாமல் முன்னே சரிய மெலிந்து வற்றிய தோற்றத்தில் நாம் பேசுவதைக் கூட சரியாகக் கிரகித்துக்கொள்ள முடியாத தொண்ணூறைத் தாண்டிய மூதாட்டி ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் கிருஷ்ணன் கோயில் முன்னால் பூ விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடைய பிள்ளைகள் எங்கே…? உறவினர்கள் எவருமில்லையா…? மழையிலும் வெயிலிலும் கோயில் வாசலில்தான் ஒடுங்கிக் கிடப்பாரா…? கோயில் பிரகாரத்தைச் சுற்றும்போது கேள்விகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. விசாரித்தபோது, அவரது ஏனையோரில் ‘தங்கியிருக்க விரும்பாத் தன்மை’யே அதற்குக் காரணமென ஒருவர் சொன்னார். என்றபோதிலும், நிராதரவாகத் தோன்றிய அந்த மூதாட்டியை பல நாட்களுக்கு எனது ஞாபகத்தில் சுமந்துகொண்டிருந்தேன்.

‘யாழ்ப்பாணத்தில் பசியில் துடித்து முதியவர் மரணம்’என்றது மற்றொரு செய்தி: நோய் வந்து காலன் அழைப்பதும் ஷெல் விழுந்து இரத்தமும் சதையுமாய் சிதறிச் செத்துப்போவதும் கூட பரவாயில்லை என்று சிந்திக்குமளவிற்கு, எமது மென்மையான உணர்வுகளைப் போர் தின்றுவிட்டிருக்கிறது. பசி வயிற்றை முறுக்கிப் பிசைய, கைகாலெல்லாம் நடுங்க, உடல் முழுவதும் பசியின் வெம்மை பரவி எரிய, கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாப் புலன்களும் ஒடுங்கி உயிர் பிரிவது என்பது… ‘ஐயோ! ஐயோ!’ என்று நெஞ்சிலடித்துக் கதறவைக்கும் கொடுமை. அந்தக் கொடுமை நாளாந்தம் நடந்துகொண்டுதானிருக்கிறது. பசியாலும் போராலும் செத்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் அக்கறையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு அப்பால் நகர்ந்துவிடுகிறவர்களாகத்தான் நாம் இருக்கிறோம்.

கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது கடவுளால் கிறுக்கப்பட்ட ஓவியங்கள் போல கைகால்கள் அற்ற சில பிச்சைக்காரர்கள் பிண்டங்களாய் நிலத்தில் கிடந்தபடி குரல்கொடுக்கின்றனர். காசை எறிந்து காற்றாய் விரைகிறோம். குஷ்டத்தில் உதிர்ந்து போன விரல்களை துணிப்பந்துகளால் சுற்றி மறைத்துக்கொண்டு கக்கத்தில் இடுக்கப்பட்ட தகரத்தை முன்நீட்டி இறைஞ்சுபவர்களைத் தவிர்த்துப் பறக்கிறோம். தம்பியையோ தங்கையையோ இடுப்பில் சுமந்துகொண்டு கையேந்தும் சற்றே பெரிய குழந்தைகளிலிருந்து கண்களை அவசரமாக விடுவித்துக்கொண்டு தப்பியோடுகிறோம். கடந்துசெல்லும் வண்டிகள் சிதைத்துவிடுமளவிற்கு வீதிக்கு மிக அருகில் ஒரு உடல் கிடக்கிறது. உயிர் இருக்கிறதா இல்லையா என்றுகூட நின்று பார்க்கவொட்டாமல் சுயநலம் நம்மைச் செலுத்திவிடுகிறது. ஒட்டிய வயிற்றோடு குப்பை வண்டியைக் கிளறிக்கொண்டிருக்கும் நாய்… முழங்கையில் தோல்பட்டை கட்டி தவழ்ந்தே சிக்னலைக் கடக்கக் காத்திருக்கும் கால்களற்ற இளைஞன்… வாடிக்கை கிடைக்காமல் நள்ளிரவிலும் மல்லிகைப்பூ மணக்க நெடுஞ்சாலையோரத்தில் துக்கித்திருக்கும் பெண்… இவர்களிடமிருந்தெல்லாம் நாம் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறோம். வாழ்வு இதர மனிதர்கள் மீது எழுதிப்போகும் துயர்மிகு வரிகளை வாசிப்பதற்கு மறுத்துவிடுகிறோம்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு, படித்துக்கொண்டு பைத்தியம் பிடிக்காமல் மனம் பதைக்காமல் தொடர்ந்தும் வாழமுடிகிற எமக்கு உண்மையில் இரும்புமனந்தான். அந்த மனத்திண்மை இல்லாத காரணத்தால்தான், யசோதரையையும் அரசபோகத்தையும் துறந்து இரவோடிரவாக புத்தர் வெளியேறிப்போயிருக்க வேண்டும். என்ன விதமான உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சிந்திக்கவாரம்பித்தால் மனப்பிறழ்வில் கொண்டுபோய் நிறுத்திவிடுமளவிற்கு மோசமாயிருக்கின்றது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம். நோய்க்கூறுகளுடையதொரு சமூகத்தில் நொய்ந்த மனமுடையோர் தம்மை மாய்த்துக்கொள்வதொன்றே இவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க வழியோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ஆனால், ‘இந்த உலகம் பிடிக்காமல் செத்துப்போகிறேன்’என்றெழுதிவைத்துவிட்டு இறந்தவனின்-இறந்தவளின் கல்லறையில் வாரியிறைக்கப்படும் சொற்சகதிக்கஞ்சியோ என்னவோ பெரும்பாலோர் அவ்விதம் செய்வதில்லை.

‘தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னக்கதைகள் பேசி’வாழும் நாம், சின்னச் சின்னத் தருணங்களிலாவது மனிதராக வெளிப்படல் வேண்டும். பாதையில் கிடக்கும் ஒரு கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதற்கு எவ்வளவு செலவாகப்போகிறது? சாலையைக் கடக்கக் காத்திருக்கும் விழிப்புலனற்றவருக்கு உதவுவதில் எத்தனை மணித்துளிகளை நாம் இழக்கப்போகிறோம்? சுருங்கிய கைகளை விரித்து போவோர் வருவோரையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தபடி இருக்கும் மூதாட்டியின் முகத்தில் சிறுபுன்னகையை மலர்த்தலாகாதா? ‘இன்று நீ அழகாய் இருக்கிறாய்’, ‘மன்னித்துக்கொள்’, ‘உன்னை நான் நினைத்துக்கொண்டேன்’, ‘நன்றி’ இன்னவகைச் சொற்கள் மூலம் சக மனிதரிடம் மெல்லுணர்வைத் தூண்ட ஏன் மறுக்கிறோம்? தன்மீது வன்முறையைப் பிரயோகிக்கத் தூண்டுகிற குழந்தையிடம் ‘உன்னால் நான் வருத்தமடைந்திருக்கிறேன்’என்று அருகில் உட்கார்ந்து பேசி உணர்த்த முடியாதிருப்பது ஏன்?

சின்னச் சின்னச் செயல்கள் மூலம் சக மனிதரை மகிழ்ச்சிகொள்ளவைப்பதன் மூலமே ‘மனிதர்’என்ற சொல்லைப் பூரணப்படுத்துகிறோம். செலவில்லாத நேசத்தில்கூட நம்பிக்கையற்றவர்களா நாம்! ‘இந்த உலகத்தில் எனக்கென யாருமில்லை’-‘யாரையும் நம்ப முடிவதில்லை’என்ற சொற்களால் எமக்கு நாம் கல்லறை கட்டிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்புவரை எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்துக்கொண்டிருந்த என் தோழி இன்று சொல்லுகிறாள்: “உலகம் அத்தனை மோசமாக இல்லை. குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்ததில் நான் உறவுகளை இழந்துவிட்டேன்”என்று. நானொரு ஆன்மீக சொற்பொழிவாளரின் தொனிக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறேனோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், இந்தக் கணத்தின் அற்புதத்தை இழப்பதற்குள் நான் பகிர்ந்துகொண்டுவிடவேண்டும். எப்போதாவது உள்ளிருக்கும் மெல்லிய இதயம் பிறருக்காக விசும்பும். அந்தக் கண்ணீர்த்துளிகளால் அன்பின் இழையொன்றை நெய்துவிடும் சந்தர்ப்பத்தைப் புறங்கையால் ஒதுக்குவதுகூட யாருக்கோ இழைக்கிற துரோகமாகத்தான் படுகிறது.

பிடித்த ஒரு புத்தகத்தை மீள்வாசிப்புச் செய்கிறோம். அப்படி நாம் பழகும் மனிதர்களையும் அவர்களின் நடத்தைகளையும் மீள்வாசிப்புச் செய்தாலென்ன…?

தி.ஜானகிராமனின் மோக முள்ளை முதலில் வாசித்தபோது “ஐயோ… தன்னைவிட மூத்த பெண்ணில் ஒருவன் காதல் கொள்ளலாமா..”என்றிருந்தது. (அப்போது நான் பெரிய கலாச்சார காவற்காரியாய் இருந்தேன்) ‘மரப்பசு’அம்மிணி நீண்ட நெடுநாட்களாய் என்னுள் உறுத்திக்கொண்டேயிருந்தாள். ஊரில் வாழ்ந்த காலங்களில் விவாகரத்து என்று யாரும் பிரிந்துபோனால் பெரிய குற்றம்போல அலசப்பட்டது. பெண்ணும் பெண்ணும் கூடுவது பாவத்தில் பெரும் பாவம், வியத்தகு விசித்திரம் என்று முன்பொருநாளில் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. பெரியவர்கள் சொல்லித்தந்த மரபுசார்ந்த முன்தீர்மானங்களின் தடங்களின் மீதுதான் நாங்களெல்லாம் கால்பதித்துச்சென்றோம். வாய்ப்பாடு சொல்வதுபோல ஒரே பிற்பாட்டுத்தான். (“ஈரெண்டு நாலு”)இப்போது ‘மோக முள்’ தன் அழகிய சொல்லாடலால் நெஞ்சுள் பூவாகிவிட்டது. வீட்டிற்குள் கணவன்-மனைவி எதிரிகளாக வாழ்வதைவிட வெளியில் நண்பர்களாக இருப்பதே ஆரோக்கியமானதென நாம் பேசத் தொடங்கிவிட்டோம். ஒருபால் திருமணம் சில நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. காலம்தாழ்த்தி எனினும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படலாம்.

நம்மால் வியக்கப்பட்டவையும் கைநீட்டி விமர்சிக்கப்பட்டவையும் நமது வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிட்டன.

காலம் நிறையக் கற்றுத்தந்திருக்கிறது. பார்வைகளை மாற்றியிருக்கிறது. புதிய நிலங்களும், புதிய காலநிலை மாறுதல்களும், புத்தகங்களும், நண்பர்களும், தனிமையும்கூட எமக்குப் போதிமரமாயிருந்திருக்கின்றனர்-கின்றன.

கருத்துருவில் மாறுதல்களை ஏற்றுக்கொள்ள முடிகிற எம்மால், மீள்வாசிப்புச் செய்ய முடிகிற எம்மால், ஏன் மனிதர்கள் தொடர்பாக அவ்வாறு இயங்க முடிவதில்லை? இன்றிலிருந்து - எனது இரக்கத்தை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்துபவனை நான் தெரிந்து வைத்திருக்கிறேன். என்னைப் புறக்கணித்து ஓடுபவனின் பயத்தை நான் புரிந்துகொள்கிறேன். என்னைத் துன்பத்தில் தள்ளியவனை வெறுக்காமல் விலகிச்செல்கிறேன். வீட்டில், தெருவில், வேலைத்தளத்தில் நேசத்தை விதைக்கிறேன். கதைகளில் காட்டப்படுவதுபோல ஒரு திருடன், ஏமாற்றுக்காரன், கொலைகாரன், வன்புணர்ச்சி செய்தவன், துரோகி கூட ஏதோவொரு கணத்தில் மனிதனாகிறான். சுயநலத்தின் வழி செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமேயன்றி நாம் இன்னமும் கொடுமை செய்யத் துணியாதவர்கள். சின்னச் சின்ன வெளிப்பாடுகளின் மூலம் நாம் மனிதராவதற்கு ஒரு கணம் போதும். இன்றிலிருந்து மனிதர்களை மீள்வாசிப்பு செய்யமுடிந்தால்… இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களால் முடியும் என்றுதான் தோன்றுகிறது.

பி.குறிப்பு: பிரசங்கிக்கும் தொனியைத் தவிர்க்க வேண்டுமென்றிருந்தும், ஒரு பிடிவாதக்கார குழந்தையைப் போல அது கூடவே இழுபட்டுக்கொண்டிருந்ததை முடிவில் கண்டேன். அதனாலென்ன… ஒரு நாளைக்கு பிரசங்கியாக என்னைச் சகித்துக்கொள்ளுங்கள்.

7 comments:

நாமக்கல் சிபி said...

மீள் வாசிப்பு ஒருபுறம் இருக்கட்டும். இப்பதிவை முழுமையாய் வாசிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

:-)

நல்ல பதிவு!
சிந்தக்கத் தூண்டும் விதமான கருத்துக்கள். பாராட்டுக்கள் தமிழ்நதி!

குறைந்தபட்சம் சின்ன சின்ன புன்னகைகள் கூட பிறரின் இதயங்களில் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.

தமிழ்நதி said...

‘மீள்வாசிப்பு ஒருபுறம் இருக்கட்டும். இப்பதிவை முழுமையாய் வாசிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.’

சிபி, வாசித்த உங்களுக்கே இப்படியென்றால் எழுதிய எனக்கு எப்படி இருந்திருக்கும். நீங்களெல்லாம் பாவம் என்றுதான் தோன்றுகிறது.

நாமக்கல் சிபி said...

//எழுதிய எனக்கு எப்படி இருந்திருக்கும்//

எழுதுபவர் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட எழுதலாம் அல்லவா?

படிப்பவர்கள் ஒரு முறை பாதி படித்துவிட்டு மீதத்தை பிறகு படிக்கலாம் என்பது புத்தகங்களில் வேண்டுமானால் சரியாக வரும். பதிவுகளில் அப்படி அல்ல!

கிடைக்கும் நேரத்தில் தமிழ்மண முகப்புப் பக்கத்தில் தெரியும் பதிவுகளை மட்டும் படிக்கும் நபர்களுக்கு, பெரிய பதிவு என்றவுடன் பார்த்தவுடன் மலைப்புத் தோன்றிவிடும். உடனடியாக அடுத்த பதிவைப் பார்க்கச் சென்று விடுவர்.

தொடர்ந்து வாசிப்பவர் மட்டுமே முழுதாய்ப் படிக்க விரும்பக் கூடும். இப்படிப்பட்ட நல்ல பதிவுகள் பலராலும் படிக்கப் படாமல் போய்விடக் கூடாது அல்லவா?

பத்மா அர்விந்த் said...

//கருத்துருவில் மாறுதல்களை ஏற்றுக்கொள்ள முடிகிற எம்மால், மீள்வாசிப்புச் செய்ய முடிகிற எம்மால், ஏன் மனிதர்கள் தொடர்பாக அவ்வாறு இயங்க முடிவதில்லை? இன்றிலிருந்து - எனது இரக்கத்தை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்துபவனை நான் தெரிந்து வைத்திருக்கிறேன். என்னைப் புறக்கணித்து ஓடுபவனின் பயத்தை நான் புரிந்துகொள்கிறேன். என்னைத் துன்பத்தில் தள்ளியவனை வெறுக்காமல் விலகிச்செல்கிறேன். வீட்டில், தெருவில், வேலைத்தளத்தில் நேசத்தை விதைக்கிறேன். கதைகளில் காட்டப்படுவதுபோல ஒரு திருடன், ஏமாற்றுக்காரன், கொலைகாரன், வன்புணர்ச்சி செய்தவன், துரோகி கூட ஏதோவொரு கணத்தில் மனிதனாகிறான். சுயநலத்தின் வழி செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமேயன்றி நாம் இன்னமும் கொடுமை செய்யத் துணியாதவர்கள். சின்னச் சின்ன வெளிப்பாடுகளின் மூலம் நாம் மனிதராவதற்கு ஒரு கணம் போதும். இன்றிலிருந்து மனிதர்களை மீள்வாசிப்பு செய்யமுடிந்தால்… இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களால் முடியும் என்றுதான் தோன்றுகிறது// முயற்சிக்கிறேன்.

Anonymous said...

//பிடித்த ஒரு புத்தகத்தை மீள்வாசிப்புச் செய்கிறோம். அப்படி நாம் பழகும் மனிதர்களையும் அவர்களின் நடத்தைகளையும் மீள்வாசிப்புச் செய்தாலென்ன…?//

செய்யலாம்.செய்கிறேன்.அப்படி செய்கிற போது அவர்கள் பக்கத்து நியாயங்கள் சில, முதல் முறை காண கிடைக்காததை, புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால் அதற்குள் நான் அவர்களை
காயப்படுத்தி இருக்கவில்லை என்றால் இயல்புக்கு வர எளிதாக இருக்கும்.

sooryakumar said...

நீங்கள் சொன்ன அதே கருத்து மிக நீண்ட நாளாகவே என்னகத்திலேயும் இருந்து கொண்டிருக்கிறது.
feelings not for sale-என்று ஒரு நாடகம் என்னால் 2 ஆண்டுகளுக்கு முன்னர்..பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பின்னர்,,கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் மேடையேர்றப்பட்டது. நீங்கள் கூறிய அதே கருத்துத்தான்.
பார்ப்போம் தொடர்ந்து முயற்சிப்போம்.
மனிதம் உள்ளவரைதானே நாமும் வாழ்வோம்.
நீங்களும் பிரசங்கத்தனமாக எழுதிய படியால் நானும் ஒன்று சொல்கிறேன் பழைய பாணியில்...
,,,நல்லார் ஒருவர் உளரேல்..அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை..!
நிற்க,,,
தி.ஜா வைப் போல,,வைக்கம் முகம்மது பஷ்ஷீர் படித்துப் பாருங்கள் மனிதம் பெண்மை காதல் அழகாக எழுதுவார்.

செல்வநாயகி said...

தமிழ்நதி,

பிடித்தது இந்தப்பதிவு(ம்). நிறைய இடங்களில் ஒத்த அலைவரிசையாக இருக்கிறது எனக்கு உங்கள் எழுத்துக்கள். எனக்குள்ளிருந்தும் அவ்வப்போது இப்படி ஒரு பிரசிங்கி எழுந்துகொள்வதுண்டு:)) இப்போதெல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டேனும் அடக்கிவைக்க முயல்கிறேன் அவளை(அந்தப் பிரசங்கியை). சிலநேரங்களில் அவள் வெளிப்படுவதும் நன்றாக அமையுமோ? உங்களின் இப்பதிவு அப்படி எண்ண வைக்கிறது. நன்றி.