12.19.2006

தேசத்தின் குரலே! சென்று வருக!



ஒரு தேசத்தின் குரலை
ஏந்திவந்த காற்று இன்று மௌனித்தது
விடுதலையின் பொறியை
உலகமெங்கும் ஏற்றிவைத்த சுடரை
நோய் அணைத்தது.

கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த ஓரினத்தை
வார்த்தைப் படகேற்றி
விடியல் கரையோரம் கொண்டுவந்தாய்
இன்னும் சிலகாலம் இருந்திருக்கக்கூடாதா…
மண்ணில் ஒளிபடர்ந்த ஒருநாளில்
நீ மறைந்திருக்கக் கூடாதா…?

நேசித்த நிலத்திலே நீளுறக்கம் கொள்ளாமல்
நெடுந்தொலைவு நீ போனாய்
பொன்னுடலைக் காணாமல்
புலன்கள் அதை ஏற்கவில்லை.
இல்லாமற் போன அந்த இடைவெளியை
எதையிட்டு நிரப்புவது என்று
எங்கேனும் ஒரு நூலில்
எழுதி வைத்துப் போனாயா…?

மேலைத்தேசத்தின் மேட்டுக்குடிவாழ்வில்
சுயத்தைத் தொலைத்தவர்க்கு
சுட்டிருக்கும் உன் வாழ்வு.
நீயும் நினதினிய துணையும்
இந்த ஏழை தேசத்தில்
இடருற்று வாழ்ந்ததனை
சொல்லக் கேட்டிருந்தோம்.

தத்துவத்தில் வித்தகனாய்…
தலைவன் வாசித்து
நெகிழ்ந்த புத்தகமாய்…
கொள்கை வகுப்பதிலே ஆசானாய்…
அரசியல் களத்திலே
தர்க்கித்து வெல்லரிய சான்றோனாய்…
ராஜதந்திரியாய்
தம்பிக்கே மந்திரியாய்…
மனசைப் படித்தெழுதும்
மாயஎழுதுகோலாய்…
உலகின் மனச்சாட்சி உரசி
‘நாமும் மனிதர்களே’என
உறைக்கச் சொன்ன குரல்முரசே!
பன்முக ஆளுமையாய் பரிணமித்து நின்றவனே!
உன் அன்பில் திளைத்த அவன் குரலில் சொன்னால்
உன் இழப்பை எழுத
“மனித மொழியில் இடமில்லை”

நிராதரவு…
தனிமை…
துரோகம்…
பாராமுகம்…
எல்லாம் சூழ்ந்திருக்கும் ஒரு பொழுதில்
விழிகளை மூடிக்கொண்டபோது
இரவு எங்கள் மேல் கவிந்தது.
உன் உதடுகள் ஓய்வெடுத்துக்கொண்டபோது
மௌனமே எங்கள் மொழியாயிற்று.

ஆயினும் என்ன…
கண்ணீரிலிருந்து நெருப்பையும்
மௌனத்திலிருந்து சொற்களையும்
மரணத்திலிருந்து வாழ்வையும்
புதைகுழியிலிருந்து விதைகளையும்
இழப்பிலிருந்து இருப்பையும்
பெற்றுக்கொள்ள கற்றுத்தந்திருக்கிறது காலம்.

தேசத்தின் குரலே…!
சென்று வருக…!
விழிகள் கடலாக விடைதருகிறோம்
எங்கள் கண்ணிலிருந்தே மறைகிறாய்
இந்த மண்ணிலிருந்தோ
எங்கள் மனங்களிலிருந்தோ அல்ல!

3 comments:

Anonymous said...

superb

Anonymous said...

அழகு..!தமிழ் அழகு..!தமிழில் அழுவதுகூட அழகு...!!
அழும்பொழுதில் அழகை ரசிக்கவாமுடியும்???காற்றும் வானமும் இப் பிரபஞ்சவெளியும் பார்த்திருக்க போனான்காண்...! புலம்பியென்ன பயன்..போராளிகளுக்கு வீரமரணந்தானே பெருமை..!

Anonymous said...

இவர்
இறந்திருக்கவில்லை என்றால்
இந்த
இனிய தமிழ்
பிறந்திருக்காதே!

இறந்தபின்னும்
இவர் எங்கள்முன்
இதற்கு சாத்தியம்
இனிய
இக்கவிவரிகள்!
இலங்கையின்
இன்னல்களை
இவர் போயாவது
இறைவனிடம்
எடுத்துரைக்கட்டும்!
அன்றாவது
ஆண்டவனின்
அருள் கிட்டுதா பார்ப்போம்!