
கம்பி இழைத்த சிறு சதுரத்தின் வழி
உயிர்ப்பு உள்நுழைகிறது.
மழை பாடுகிறது அதனூடாக
திருப்தியுறாத ஓவியன்போல
அதன் வழியே வெயில்
வரைந்து வரைந்து அழிக்கிறது
யன்னலை அடைப்பதன் மூலம்
உலகத்தைத் துண்டிக்கிறோம்.
எங்கோ அசையும் தென்னங்கீற்று
உன்னறையில் கவிதையாகிறது
தொலைவில் தெரியும் கடல்
எனக்குப் போதிக்கிறது
மௌனத்தின் மகத்துவத்தை.
ஒவ்வொரு காலையிலும்
முகம் தெரியாத ஒருவரின் காதலை
எடுத்துவருகிறது தந்திகளின் அதிர்வு.
உள்ளே நுழையும்
ஒரு வண்ணாத்திப்பூச்சியால்
அழைத்துச்செல்ல முடிகிறது பால்யத்துள்.
பூட்டிவைக்கும் உனக்குள்ளும் எனக்குள்ளும்
எப்போதும் புகமுடியாது வெளிச்சம்!
3 comments:
ம்...ம்...அருமை.!
உணர்வுகளை மிக அருமையாக..எழுத்தில்..வடிக்கிறீர்களே..!எனது வலைப் பூவில் மூடமுடியாயன்னல் என்று இதே உணர்வை எழுத முயற்சித்தேன். உங்களது அருமையாக வந்திருக்கிறது
தமிழ்நதி அவர்களுக்கு,
தங்களுடைய blog-ஐ இன்றுதான் படிக்கும் வாய்ப்புக்கிடைத்தது. Amazing writing! உங்களுடைய எழுத்துக்கள் எல்லாமே மனதைத் தொடுகின்றன. வாழ்த்துக்கள்.
இந்தக் கவிதை மிகவும் பிடித்தது. இதே பொருளில் பேசும் சுந்தர ராமசாமியின் ஒரு கவிதையும் ஞாபகம் வந்தது.
"திருப்தியுறாத ஓவியன் போல்" "எங்கோ அசையும் தென்னங்கீற்று உன்னறையில் கவிதையாகிறது" "பூட்டிவைக்கும் உனக்குள்ளும் எனக்குள்ளும் எப்போதும் புகமுடியாது வெளிச்சம்" - மனதைக் கவர்ந்த வரிகள்.
Keep writing !!
-ganesh.
/
கம்பி இழைத்த சிறு சதுரத்தின் வழி
உயிர்ப்பு உள்நுழைகிறது.
மழை பாடுகிறது அதனூடாக/
/யன்னலை அடைப்பதன் மூலம்
உலகத்தைத் துண்டிக்கிறோம்./
நல்ல வரிகள். உயிர்ப்பு என்னும் சொல் மட்டும்தான் உறுத்தலாக கவிதையமைதியைக் குலைக்கிறது. நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டியது, /பூட்டிவைக்கும் உனக்குள்ளும் எனக்குள்ளும்
எப்போதும் புகமுடியாது வெளிச்சம்! / என்று வெறும் statement-ஆக முடிகிறது.
Post a Comment