11.10.2007

போலச்செய்தல்


ஒருபொழுதில் உக்கிரக்காளி
புயல்வழி மரமென்றாடுகிறாய்
தீ பொதிந்து நீயனுப்பும் வார்த்தைகளால்
தீய்ந்து கருகு மென் இதயம்
வெப்பம் காற்றை இடையறாது
வன்கலவும் இவ்வூரின்
ஆளரவமற்ற பின்னிராச் சாலைகளில்
நினைவு பிடரியுந்தி விரட்ட
என்னைக் கரைத்தலைவேன்.
சிகரெட்டின் நுனி தசை தீண்டுகையில்
உன் உதடு கவ்வும் உச்சமடி தோழி!
தேசாந்தரியாகி
உண்டக்கட்டிக்கு கோயில் வாசலிலே
காத்திருந்ததற்கு கைமேல் பலன்!

எனதிந்தக் காயங்களின் மீது
கண்ணீரை ஊற்றுகிறாய்
ஒரு கணத்தில் உயிர்பெற்றிணைந்தன
தீய்ந்த திசுக்கள்
காதல் மதுவருந்திக் கண்கிறங்கி
‘இந்தக் கணமும் இறப்பேன்’என்றேன்.
ஒரு குழந்தையென
மடிசுருளும் என்மீதில்
மென்முலை பொதியப் பொதிய
இறுக்குகிறாய்
இற்று மறைகிறது புறவுலகு

தாயே!நின் வயிற்றில்
ஒரு துளியாகிச்
சூல்கொள்ளும் வரமன்றி
இனி யாதும் வேண்டேன்!

என்னவிதுவென புருவம் நெரிக்கவேண்டாம். ஒருவர்போல் எழுதிப் பார்த்தேன். வேறொன்றுமில்லை.

15 comments:

பாம்பாட்டிச் சித்தன் said...

நட்புடன் நதி,வணக்கம்,நலம் வாழ ப்ரார்த்தனைகள்.

நீங்கள் கர்மசிரத்தையோடு எழுதியிருப்பினும் சரி,கிண்டல் தொனிக்க வரைந்திருப்பினும் சரி...வாசித்தவுடன்"நினைவிலுதித்த" மேற்கோள் இது.
"Imitation is the best form of Appreciation"
"போலச்செய்தலுக்கு" நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? வாழ்த்துக்கள் :)

Anonymous said...

"போலச்செய்தல்" கலக்கல் :-)

மு. மயூரன் said...

பாவம் அந்த முதியவர். ஏன் அவரை இந்தப்பட்டு படுத்துகிறீர்கள் ;-)

தெரிந்த கள்ளன்களை விட தெரியாத கள்ளன்கள்தான் ஆபத்தானவர்கள்!!

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//வெப்பம் காற்றை இடையறாது
வன்கலவும் இவ்வூரின்
ஆளரவமற்ற பின்னிராச் சாலைகளில்
நினைவு பிடரியுந்தி விரட்ட
என்னைக் கரைத்தலைவேன்//

நல்லாருக்கு....

மு. மயூரன் said...

ஏன் நல்லா இருக்கு வியாபகன்?

தமிழ்நதி said...

வாங்க சித்தரே! போலச் செய்தலை மற்றவர்கள் கண்மறைத்துச் செய்தல் தவறு... ம்... அதுவும் தவறல்லவோ...? நீங்கள் யாரை உங்களது பிதாமகரெனக் கருதுகிறீர்களோ அவரது சாயல் உங்களில் படிதல் இயல்பாய் நிகழும். இல்லையா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புள்ள அனானி! (அனானி எவ்விதம் அன்பாயிருக்க முடியும்?) 'கலக்கல்'என்ற வார்த்தை நானறிந்த ஒருவருடைய சிறப்புப் பிரயோகம். நீங்கள் அவர்தானா அறியேன்.

மயூரன்! அவர் முதியவர் அல்ல; முப்பத்தைந்து வயது இளைஞர். என்னால் மதிக்கப்படும் கவிஞர். சும்மா அவரைப்போல எழுதிப் பார்த்தேன். நான் 'போலச் செய்தலை'சரியாகச் செய்யவில்லையோ...? அதனால்தான் ஆளடையாளம் தவறாயிருக்கிறது. நீங்கள் சொல்லும் 'முதியவரை' நான் அறியேன்:)

வியாபகன்!நீண்டநாட்களாகக் காணவில்லை. நீங்கள் நன்றாயிருக்கிறதென்றால் உண்மையில் மகிழ்வாய்த்தானிருக்கிறது. ஆனால், இனி என்ன கண்டுபிடித்து வருவீர்களோ என்று பயமாகவும் இருக்கிறது. புது வாழ்க்கையின் பூரிப்பில் வலைப்பூவை மறந்துவிட்டீர்களா என்ன...? நீங்கள் சர்வ வியாபகன்தான்... அதற்காக... :)அவ்வப்போது வந்து போங்கள்.

"ஏன் நல்லா இருக்கு வியாபகன்?"

மயூரன்! ஆரம்பிச்சிட்டீங்களா...? ரெண்டு பேரும் ஒரே 'இடந்தானே...' என்னமோ நடத்துங்கள்.

cheena (சீனா) said...

தமிழ் நதி, எனக்கு ஒன்றும் புரிய வில்லை. ஆராயவும் இல்லை.

சிகரெட்டின் நுனி தசை தீண்டுகையில், உன் உதடு கவ்வும் உச்சமடி தோழி - வித்தியாசமான சிந்தனை.

ஒரு குழந்தையென மடி சுருளும் என் மீதில், மென்முலை பதியப் பதிய - பொதியப் பொதிய இறுக்குகிறாய்.

தோழியின் நட்பு, தாய்மையின் அணைப்பு - நன்று நன்று

வாழ்க - வளர்க - வாழ்த்துகள்

soorya said...

இந்தக் கவிதைக்கு எவ்வாறு பின்னூட்டமிடாலாம்....
யோசித்து யோசித்துக் கடைசியில்..
பிளேட்டோ தனது கற்பனைக் குடியரசு என்ற நூலில் சொல்கிறார்,,தனது ராச்சியத்தில் முதலில் நான் செய்யப்போவது இந்தப் போலிகளின் போலியை நாடுகடத்துவதுதான் என்று.
நன்றி பிளேட்டோ.
நன்றி நண்பி.

தமிழ்நதி said...

சீனா!இன்று எனது வலைப்பூவின் பக்கம் பேருலா வந்திருக்கிறீர்கள் போல... அண்மைய பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டம் விட்டிருக்கிறீர்கள். யாரோ என் எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் நிறைவைப் பின்னூட்டங்கள் எப்போதும் தந்து வருகின்றன.நன்றி.

"முதலில் நான் செய்யப்போவது இந்தப் போலிகளின் போலியை நாடுகடத்துவதுதான்"

சூர்யா!ஏற்கெனவே நாடுகடத்தப்பட்டவர்களை மீண்டும் எப்படி நாடுகடத்தவியலும்...?உங்கள் பிளேட்டோவிடம் கேட்டுச் சொல்லுங்கள்.:)'போலச் செய்தல்'எனக்குச் சரியாக வரவில்லை. நான் யாரைப் போல செய்தேனோ, அவரே "அந்தக் கவிதை அப்படியே உங்கள் பாணிதான்"என்றுவிட்டார். என்ன செய்வது...? நான் என்னைப் போலவே எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

LakshmanaRaja said...

//தீ பொதிந்து நீயனுப்பும் வார்த்தைகளால்
தீய்ந்து கருகு மென் இதயம்
வெப்பம் காற்றை இடையறாது
வன்கலவும் இவ்வூரின்
ஆளரவமற்ற பின்னிராச் சாலைகளில்
நினைவு பிடரியுந்தி விரட்ட
என்னைக் கரைத்தலைவேன்.
சிகரெட்டின் நுனி தசை தீண்டுகையில்
உன் உதடு கவ்வும் உச்சமடி தோழி!///

நன்றாக உளது

//எனதிந்தக் காயங்களின் மீதுகண்ணீரை ஊற்றுகிறாய்ஒரு கணத்தில் உயிர்பெற்றிணைந்தனதீய்ந்த திசுக்கள்காதல் மதுவருந்திக்//

அப்பா..உணர்வுபூர்வமான வார்த்தைகள்..

விமலா said...

யாரென்று மண்டை குடைந்து
கொண்டு தானிக்கிறது..இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆயினும் கவிதையை மிகவும்
ரசித்தேன்..

தமிழ்நதி said...

லஷ்மணராஜா!அண்ணனோடு காட்டுக்குப் போயிருந்தீர்களா? சிலநாட்களாக ஆளையே காணவில்லை:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

"இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை."

விமலா!அவர் நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்தவரல்ல. கண்டுபிடிக்கவே முடியாது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான். ஆனால், என் பாணியின் சாயலை ஒளிக்க முடியவில்லையே!முதற்தடவையாக வந்திருக்கிறீர்கள். நன்றி.

நளாயினி said...

நான் கண்டு பிடிச்சிட்டனே. (ம்.. சரியோ என பாருங்கள். அந்த கவிஞனுக்கு நான் பின்னூட்டமிட்டிருந்தேன்.)

தமிழ்நதி said...

இல்லை நளாயினி!நீங்கள் வியாபகனைத்தானே சொல்கிறீர்கள். அவரில்லை:) இப்படி ஒளித்துப் பிடித்து விளையாடுவது நன்றாகத்தானிருக்கிறது.

நளாயினி said...

இல்லையே...... அவருடையது மாதிரி எனக்கிருந்தது வாசித்துக்கொண்டு போகும் போது. ஆனாலும் உங்கடை இயல்பு கடைசியில் கவிதையில் வந்து ஒட்டிக்கொண்டு விட்டது. அதனால் தடம் மாறிவிட்டமாதிரியான ஒரு உணர்வு. சரியாகவே எழுதி இருக்கிறீர்கள் நெற்றியை சுருக்கிறம் எண்டதை. ம் ஒளிச்சு விளையாட நல்லாத்தானிருக்கு. 1,8,9,3,4,5,8,9,10 15,16,22,28,38,39,40,45,50
பழைய நினைவுகளிற்கு அழைத்துச்சென்றீர்கள்.