3.20.2008

நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா - பேசியதும் கேட்டதும்

ஆசிரியர்:ஆதவன் தீட்சண்யா
தொகுப்பு:க.பிரகதீஸ்வரன்
வெளியீடு: பூபாளம் புத்தகப் பண்ணை

ஐந்தரை மணியாகியும் அடங்காமல் வெயில் சுளீரிட்டுக்கொண்டிருந்த தெருக்களினூடே தேவநேயப் பாவாணர் நூலக அரங்குநோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நேரமாகிவிட்டதே என்ற பதைப்பு மிகுந்திருந்தது. ஆறேகால் மணியளவில் அரங்கிற்குள் நுழைந்தபோது இருபத்தைந்து பேர்வரை ஆங்காங்கே சாவதானமாக உலவிக்கொண்டிருந்தார்கள். நேரம் குறித்த தமிழர் ‘பாரம்பரிய’த்திலிருந்து யாரும் (நான் உட்பட)வழுகியதேயில்லை.

அரங்கின் முதல் நிகழ்வாக, ஆதவன் தீட்சண்யாவின் நேர்காணல்களை உள்ளடக்கிய ‘நான் ஒரு மநு விரோதன்’என்ற நூலை, தேர்ந்த ஆய்வாளரும்,பெண்ணியச் சிந்தனையாளருமாகிய வ.கீதா அவர்கள் வெளியிட்டுவைக்க, புதுக்கோட்டை மருத்துவர் ஜெயராமன் பெற்றுக்கொண்டார். ஆதவன் கீற்று.காம் மற்றும் பூபாளம் புத்தகப் பண்ணையால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த விழாவிற்கு நாடகவியலாளரான பிரளயன் தலைமை தாங்கினார்.

கீற்று.காம் சார்பில் மினர்வா வரவேற்புரை நிகழ்த்தியபோது, ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தாளுமை பற்றிக் குறிப்பிட்டார். சிறுகதை,கவிதை போன்ற வடிவங்கள் ஊடாக அரசியலைப் பேசும் திறன் ஆதவன் தீட்சண்யாவிற்கு நன்கு வாய்த்திருப்பதாகச் சொன்னார். மேலும்,தலித் இலக்கியம் என்று வரும்போது, ஒப்பாரி இல்லாமல் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்க்குணம் பொருந்திய எழுத்தாக அவருடையதை அடையாளம் காணமுடிகிறது என்றார். பெண்களைக் குறித்து கழிவிரக்கத்துடன் நோக்கும்,எழுதும் பெரும்பாலான படைப்பாளிகளிலிருந்து மாறுபட்டு அவர்களை உயர்ந்தேத்தி எழுத்தில் அணுகும் பாங்கினையும், கீற்று.காம் இற்கு அளித்த நேர்காணல் முழுவதிலும் தொனித்த நேர்மையையும் குறிப்பிட்டுப் பேசினார். இறுதியாக,பாரதி பற்றிய கேள்விக்கு மட்டும் ஆதவன் பதிலளிக்காமல் அதைக் கடந்துசென்றுவிட்டது ஏனென்று தனக்குப் புரியவில்லை- ஒருவேளை அவர் சார்ந்த அமைப்பு விதிகள் குறித்த தயக்கத்தினால் மௌனித்திருந்தாரோ என்று ஐயம் எழுப்பினார்.

வ.கீதா பற்றி முன்பே அறிந்திருந்தபோதிலும் மேடைகளில் பேசிக் கேட்டதில்லை. செறிவார்ந்த உரைவீச்சும்,தமிழ்ப்பெருக்கும் நிறைந்த பேச்சாக அது அமைந்திருந்தது. வரலாற்று நினைவுகளை மீளக்கொணரும் ஒரு பதிவாக ஆதவன் தீட்சண்யாவின் நூலைக் கொள்ளலாம் என்றார். வர்க்க எதிர்ப்புக்கு சாதி எதிர்ப்பே வழிகோலுமென வலியுறுத்தினார். சாதிப்பாகுபாடு என்பதை வேலைப்பிரிவினையாக மட்டும் நாம் பார்க்கக்கூடாது; அது உழைப்பாளிகளைப் பிரிக்கும் ஒரு தந்திரம் என்றதானது சிந்திக்கத் தூண்டியது. சாதி மற்றும் மூடச்சிந்தனை பழக்கவழக்கங்களைப் பற்றி பெரியார் எவ்விதம் பகடி பண்ணினாரோ அந்த மரபின் நீட்சியை ஆதவன் தீட்சண்யாவின் இந்நூலில் காணமுடிந்ததாகச் சொல்லிய கீதா, இந்நூலில் பேசப்பட்டிருக்க வேண்டிய-கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, மூளை உழைப்பு எவ்விடங்களிலும் தூக்கிப்பிடிக்கப்படுவதும் உடல் உழைப்பு புறந்தள்ளிக் கவனத்திற்கெடுக்காது செல்லப்படுவதும் வருத்தந்தரத்தக்கதொன்று-அது குறித்தும் பேசியிருக்கவேண்டுமென்றார்.

‘மநு விரோதனாய்’இருப்பது உள்ளுணர்வில் படிந்துள்ள அடிப்படைகளுக்கு ஏற்புடையதல்ல போலும். மருத்துவர் ஜெயராமனும் ‘நான் ஒரு மநு விரோதன் அல்ல’என்றே நூலின் பெயரைக் குறிப்பிட்டார். சபையில் சிறு சலசலப்பு எழுந்து அடங்கியது. ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தாளுமை பற்றிப் பேசும்போது, தலித் என்ற சிமிழுக்குள் இவரை அடைத்து வைக்க முடியாது என்றார். எல்லாவிதமான சிக்கல்களுக்கும் மூலகாரணமாயிருக்கும் சாதிய வேறுபாடுகளே முதலில் களையப்படவேண்டும் என்பதை புத்தகம் நெடுகிலும் காணமுடிந்ததாகச் சொன்னார். குடும்பம் என்ற அமைப்பானது சாதியைப் பேணுவதில் முதனிலை வகிப்பதாகவும், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தீண்டாமை இருப்பதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். மிகப்பெரிய சிந்தனையாளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவார்த்தமான தொகுப்பு என ‘நான் ஒரு மநு விரோதன்’ஐப் பரிந்துரைத்தார்.

அடுத்து பெரியார் திராவிடக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி பேசுகையில், ஆதவன் தீட்சண்யாவின் ‘இட ஒதுக்கீடு அல்ல மறு பங்கீடு’என்ற புத்தகம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகச் சொன்னார். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம் என சங்க இலக்கியங்களில் வகைப்படுத்தப்பட்டிருப்பதுபோல, ‘நான் ஒரு மநு விரோதன்’இன் ஆசிரியர் தனது வாழும் பிரதேசத்தை ‘ரோடும் ரோடு சார்ந்த இடமும்’ என அடையாளப்படுத்தியிருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் மதிப்பு ஒருபடி உயர்ந்தது. ஏனென்று எவராவது கேட்பின், பதிலாக கொஞ்சம் சுயபுராணம் பாடவேண்டியிருக்குமென்பதால் உங்கள் கற்பனைக்கேற்றபடி விரித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ‘இந்த சமூகத்தை ஒரு அருந்ததியப் பெண்ணின் கண்களால் பாருங்கள்’என்று கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்தார். மனிதருக்குள் பால்,சாதி வேறுபாடுகளை அதிகமும் பேசுகிற,தூண்டுகிற மநுநீதிக்கிணங்கவே இந்தியாவின் குற்றவியல்,குடியியல் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்ற அபத்தத்தை விமர்சித்தார். மருத்துவர் ஜெயராமன் சொன்ன அதே கருத்தை, அதாவது குடும்பந்தான் சாதியைப் பேணுகிற நுட்பமான கருவி என்பதை வலியுறுத்திப்பேசினார். ஆக,சமுதாயத்தில் இருக்கும் சாதி வேறுபாடுகளைக் களைவதொன்றே சகல மேம்பாடுகளுக்குமான திறவுகோல் என்ற, ஆதவன் தீட்சண்யாவின் நூல் வழியான குரலை கொளத்தூர் மணியும் வழிமொழிந்தார்.

பூனைகளோடு அதிகமும் பழகிப் பழகி எப்போதும் அடங்கிய குரலில் பேசிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு, ‘தலித் முரசு’ சஞ்சிகையின் ஆசிரியரான புனிதபாண்டியனின் கணீரென்ற குரல் இலேசான பொறாமையைத் தூண்டுவதாயிருந்தது. ‘நான் ஒரு பார்ப்பனனல்ல’என்று பெரியார் அறிவித்துக்கொண்ட அதே தொனியில்- ‘நான் ஒரு மநு விரோதன்’என்று ஆதவன் பிரகடனப்படுத்தியிருப்பதாகக் கூறினார். குறிப்பிட்ட நூலிலிருந்து சில மேற்கோள்களைக் காட்ட விளைந்ததாகவும், ஈற்றில் ஆதவனது நேர்காணலின் எல்லா வரிகளையுமே சுட்டுவதில் கொண்டுசேர்க்கும் என்பதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் புனிதபாண்டியன் சொன்னார். ஒரு நீதிபதியாக இருப்பவர்கூட தான் சார்ந்த இனம்,சாதி,பால் சார்புநிலைகளுக்கேற்பவே இயங்கும் நிலை குறித்து வருந்தினார். ‘சட்டம் நீதிக்குக் கட்டுப்பட்டது. ஆனால், நீதியோ சாதிக்குக் கட்டுப்பட்டது’என்றார். பௌத்தம் ஒரு கோட்பாடுதானேயன்றி அதுவொரு மதமாகாது என்ற அவர், தனது உரையின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டது ஒரு கேள்விக்காகவே. அதாவது, ‘சாதிக்கெதிராக,வர்க்க ஆதிக்கங்களுக்கெதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவரும் எழுதியவரும், அதற்கிணங்க வாழ்ந்தவருமாகிய டாக்டர் அம்பேத்காரை ஏன் விவாதத்திற்கெடுத்துக்கொள்வதில்லை?’என்பதே அந்தக் கேள்வியாகும். ‘இந்த ஜாதீய சமூகம் ‘காங்கிரீட்’பாவிய தளம்; இங்கு எதுவும் பூக்காது’என்ற அவர், ‘இவன் தலித் எழுத்தாளன்’என்று பிற்படுத்தப்பட்டவர்களை மட்டும் சுட்டுவது பொருள்திரிபுடையது எனவும், சமுதாயத்தை நேர்செய்ய விரும்பும் எவரும் தலித் எழுத்தாளரே எனவும் விளக்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், மார்க்சிஸ்டுகள்,பெரியாரிஸ்டுகள் என்று நாம் பிரித்துப் பேசிக்கொண்டிராமல், நாமெல்லோரும் இணையும் புள்ளி எதுவென்பதைப் பற்றியே இனி நாம் பேசவேண்டும் என்றார். ஆதவன் தீட்சண்யாவின் நூலிலுள்ள வார்த்தைகள் ஆதிக்க மனோபாவத்தின் மீது சவுக்கடிகளாக இறங்குவதாக வியந்துபேசினார். சாதி போன்றவற்றுக்கெதிரான போராட்டங்களில் பார்ப்பனர்களையும் இணைத்துக்கொள்வதே முறை எனக் கூறிய தமிழ்ச்செல்வன், சாதியைப் பேணிக்கொண்டிருக்கும்,இயக்கிக்கொண்டிருக்கும் நுட்பமான கருவி குடும்பந்தான் என முன்னர் பேசியவர்களிலிருந்து மாறுபட்டு ‘குடும்பம் சாதியை மட்டும் பாதுகாக்கவில்லை. அது வேறு பலவற்றையும் காக்கிறது’என்று குடும்ப அமைப்பிற்குச் சார்ந்துரைத்தார். ஆதவன் தீட்சண்யாவைப் போல சமூக அநீதிகளுக்கெதிராகக் குரல்கொடுக்க படைப்பாளிகள் பலர் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ‘பாரதி பற்றிய கேள்விக்கு ஆசிரியர் பதிலிறுக்காமற் போனதற்கு அமைப்பின் விதிகள், கட்டுப்பாடுகள்தான் காரணமா?’ என்று ஆரம்பத்தில் கீற்று.காம்மின் சார்பில் தோழி மினர்வா எழுப்பிய கேள்வியை நினைவிற்கொணர்ந்து பேசிய தமிழ்ச்செல்வன், அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் படைப்பாளிகளுக்குக் கிடையாது என்றார்.

அடுத்து கருத்துரையாற்ற வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளராகிய பி.சம்பத் ‘நான் ஒரு மநு விரோதன்’இல்தான் ஆரம்பித்தார். ஆதவன் தீட்சண்யா ஒரு தலித் எழுத்தாளரல்ல;இடதுசாரி எழுத்தாளர்,
முற்போக்கு எழுத்தாளர் என்றார். நேரம் ஆக ஆக அதுவொரு கட்சிக் கூட்டம்போன்றதொரு தோற்றம் காட்டும்படியாக அவரது பேச்சு வளர்ந்தது. சகல விடயங்களிலும் பெரியாரிஸ்டுகள், மாக்ஸிஸ்டுகள் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். வர்க்கத்தை ஒழிப்பதன் வழியாக சாதியை ஒழிப்பதா? அன்றேல் சாதியை ஒழிப்பதன் வழியாக வர்க்க வேறுபாட்டை ஒழிப்பதா? என்றொரு கேள்வி எழுமெனில் நிச்சயமாக சாதிதான் முதலில் ஒழிக்கப்படவேண்டியது என்று அடித்துச்சொன்னார். அரசுக்கட்டிலேறிய தன்னுடைய மகனிடம் மொகலாய மன்னர்களில் ஒருவன் ‘இந்தியா பிளவுண்டிருப்பது சாதியமைப்பினாலேயே. அதில் மட்டும் கைவைத்துவிடாதே’என்று அறிவுறுத்தியதிலிருந்து சாதியின் ஆதிக்கம் எவ்வாறு மேலோங்கியிருந்தது என்பதை எடுத்துரைத்தார். மேலும், இந்து மதத்தை ஈவிரக்கமில்லாமல் தோலுரித்துக் காட்டியது அம்பேத்கார்தான் என்றார். அவ்வப்போது சுற்றிவந்து ‘நான் ஒரு மநு விரோதன்’இல் தொட்டதானது, 'தென்னை மரத்தில் மாட்டைக் கட்டிய கதை'யை நினைவுறுத்தியது.

நேரமாகிக்கொண்டிருந்தது. வீட்டிற்கும் எனக்கும் ஒருமணித் தொலைவு. எனக்கு எந்த ‘யிஸ்ட்’கள் மீதும் கோபம் கிடையாது.(ஒரு இசமும் தெரியாது என்றெப்படிச் சொல்வது…?)‘ராமராஜ்ய'த்தின் சாயல் கூட தெரியாத நிலையில் நான் நேரத்திற்கு வீடுதிரும்பவேண்டியிருந்தது. சம்பத் அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையை வற்புறுத்திப் பேசிக்கொண்டிருக்க, அரங்கிலிருந்து மெதுவாக வெளியேறினேன். (நழுவினேன் என்பதே சரி)வெளியேறும்போது ஏறக்குறைய அரங்கு நிறைந்திருந்ததைக் கவனித்தேன். ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பேர் வந்திருந்து பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தது வியப்பளிப்பதாக இருந்தது. ஆதவன் தீட்சண்யாவின் ஏற்புரையைத் தவறவிட்ட கவலை இருளினூடே வீடுவரை தொடர்ந்தது. அண்ணாசாலைக்கும் நீலாங்கரைக்கும் இடையிலான தூரம் ஒரு தார்மீகக் கோபக்காரனின் உரையைச் செவிமடுப்பதிலிருந்து விலக்கிவைத்துவிட்டது. ‘நான் ஒரு மநு விரோதன்’மீது முன்தீர்மானங்கள் பல உருவாகிவிட்ட நிலையில் அதை எப்படிக் கையிலெடுப்பது என்று தயக்கமாக இருக்கிறது. எனினும், இடைக்குரல்களை ஒதுக்கிவிட்டு அதைத்தான் முதலில் வாசிப்பதற்காக எடுத்துவைத்திருக்கிறேன்.

8 comments:

ஜமாலன் said...

நண்பருக்கு...

உங்கள் பதிவு அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தியது.

போராட்ட உணர்வுள்ளவர்களுக்கு எந்த இஸமும் தேவையில்லை. போராட்ட வழிமுறையே உங்கள எதாவது இஸத்தில் கொண்டு விட்டுவிடும். தவிரவும் இஸம் என்பது ஒரு விலக்கப்பட்ட சொல் அல்லதானே?

அது என்ன சென்னையில் மட்டுமே உரித்தானதா? ராமராஜ்யம். உலகில் எங்குமே இல்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்ல பறி நாடுகளை வளரவிடாத நாடுகளின் நிலையும் இததான். இது பெண் உடல் ஒரு நுகர்வுப் பண்டமாக இருப்பதிலிருந்து மீட்பதே அதற்கான ஒரே வழி.

பதிவு அருமையாக இருந்தது. இக்கூட்டம் குறித்த அறிவிப்பு எனது பதிவில் இட்டிருந்தேன். கூட்டததை உங்கள் பதிவில் பார்த்துவிட்டேன்.

நன்றி

மு. மயூரன் said...

நன்றி தமிழ்நதி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

கூட்டம் பற்றிய ஜமாலனின் பதிவைக்கண்டிருந்தாலும் போக வேண்டும் என்ற அவா எழவில்லை என்பதால் முயற்சிக்கவில்லை. தங்கள் பதிவைக்கண்டபின் ஒரு நல்ல மூன்றாவது பார்வைக்குண்டான தருணத்தை தவரவிட்டுவிட்டோனோ என்று தோன்றுகிறது. புத்தகத்தை படித்துவிட்டு எழுதுங்கள்.

தமிழ்நதி said...

நண்பர் ஜமாலனுக்கு,

பொதுவில் எனக்கு இந்த இஸங்களின்பால் பிடிப்பில்லை. ஒரு மனிதரை ஒரு குறிப்பிட்ட சட்டகங்களுள் அடைத்துவிடும் ஒன்றாகவே தோன்றியிருக்கிறது. சமூகத்தை மேன்மைசெய்யும் கோட்பாடுகளை அறிந்துகொள்வது வேறு. நான் 'இன்னார்'என அறிவித்துக்கொள்வது வேறு இல்லையா? யாவற்றிலும் முக்கியம் நம்மைச் சுற்றியுள்ள எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காதிருப்பது.

'சென்னையில் ராமராஜ்யம்'என்ற பிரயோகம் தவறுதான். எழுத்தின் ஓட்டத்தில் ஒவ்வொரு வார்த்தையாக சீர்தூக்கிப் பார்க்க முடிவதில்லை. பெண்ணுடலை நுகர்வுப்பொருளாகப் பார்ப்பதனோடு நலிந்தவள் என்றெண்ணும் காரணத்தால் வேறு வன்முறைகளையும் இருட்டியதும் பெண் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
'கூட்டத்தை உங்கள் பதிவில் பார்த்துவிட்டேன்.' எழுத்து காட்சியானதில் மகிழ்ச்சி.

நன்றி மயூரன்:) (மு.போட வேண்டுமோ...)

கிருத்திகா!புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதச்சொல்லிக் கேட்டிருந்தீர்கள். முடிந்தால் எழுதுகிறேன். சாதியமைப்பின் கொடுமை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுமென்பதை கூட்டத்தில் பேசியவர்களின் வாய்மொழி மூலம் அறிந்துகொண்டேன். நேர்காணல் வடிவில் அமைந்திருப்பது வாசிப்பிற்கு உகந்த கூடுதல் சிறப்பெனலாம்.

சுகுணாதிவாகர் said...

நன்றி தோழர்.போகவிரும்பிய கூட்டம். ஊரில் இருப்பதால் போக முடியாது போயிற்று. விவரணைக்கு நன்றி.

Anonymous said...

அருமையான ஒரு பொன்மாலைப் பொழுதினை தவற விட்டு விட்டேன். இனிய நண்பர் ஆதவன் அவர்களின் புத்தக வெளியீட்டினை விலாவாரியாக விளக்கியமைக்கு நன்றி நதி!

செல்வநாயகி said...

விவரணைக்கு நன்றி நதி!

Anonymous said...

இன்று தேசவிரோத சக்திகள் கைகோர்த்து முற்போக்கு/சாதி எதிர்ப்பு முகமூடியணிந்து உலாவுகின்றன.இதன் இன்னொரு வெளிப்பாடுதான் இந்தக் கூட்டமும், நூலும். அருணாசலப்பிரதேசம்
எங்களுடையது என்று சொல்லும்
திபெத்தில் கலாச்சார,இன ஒழிப்பு
செய்யும் சீனாவை எதிர்த்து இவர்கள்
வாயைத் திறக்கமாட்டார்கள்.தஸ்லீமா
விற்கு ஆதரவாக புது விசையில் ஒரு
கட்டுரை கூட வராது.