5.14.2010

காணக் கிடைக்காத யாழ்ப்பாணம்


இலைகளில் படர்ந்துகொண்டிருந்த வெள்ளிவெயில் கண்களைக் கூசவைத்தது. என்னோடு பயணித்துக்கொண்டிருந்த உறவுக்காரப் பிள்ளைகள் இருவரும் தங்களுக்குள் கலகலத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு தனியான வாகனத்தில் தொலைதூரப் பயணம் என்பது அவர்களளவில் ஒரு ஊருக்குள் சிறைப்பட்டிருந்த உற்சாகத்தின் விடுதலை. வெளிக்காற்றின் மலர்ச்சியில் விகசித்துக்கொண்டிருந்தன அவர்களது இளம்முகங்கள். ஏ-9 வீதியின் இரு கரையும் இராணுவப் பச்சையும் மரப்பச்சையுமாய் நீண்டிருந்தது. ஒரு துளிப் பசுமையுமற்ற வனாந்தரத்தினூடாகப் பயணிப்பதுபோன்ற வரண்ட மனநிலையை என்னால் தவிர்க்க முடியவில்லை. மனதின் புழுக்கம் என் கண்களுக்கு ஏறியிருக்கலாம். கூரையும் கதவுகளுமற்ற சில வீடுகளில் அகதியாக விதிக்கப்பட்ட-விரட்டப்பட்ட மனிதர்கள் எண்ணெய் காணாத தலையோடு அமர்ந்திருந்தார்கள். அவர்களது விழிகள், எங்களைப் போன்றவர்களால் எக்காலத்திலும் உணர்ந்துகொள்ளப்பட முடியாத துயரத்தோடு ஏதோ ஞாபகத்தில் இலக்கின்றி நிலைத்திருந்தன. பாதையை அண்மித்திருந்த பகுதிகளில் மஞ்சள் நிற நாடாக்கள் கண்ணிவெடி அபாயப் பகுதிகளைப் பிரித்துக் காட்ட, குப்பை விறாண்டி போன்ற கருவியினால் இராணுவத்தினர் மண்ணைக் கிண்டி அபாயக்கிழங்குகளைத் கல்லிக்கொண்டிருந்தார்கள்.

“இந்த வீதி எத்தனை பேரை-போரைக் கண்டிருக்கும்!”என்று நினைத்துக்கொண்டேன். ஜெயசுக்குறு நினைவில் வந்தது. வரலாறு எல்லாவற்றையும் பதிவுசெய்து வைத்திருக்கிறதாமே… எழுத்தில், கல்வெட்டில், சுவடிகளில், வாய்ப்பேச்சில், மனிதர்களில் வரலாறு வாழ்கிறதென்கிறார்கள். வீதிகளும் வரலாற்றைப் பதிவுசெய்துவைத்திருக்கின்றன. ஆனால், அவை மௌனசாட்சியங்களாக மிதிபட்டும் சிதையுண்டும் நீளநெடுகக் காலகாலமாகக் கிடக்கின்றன.

ஓமந்தையில் வாகனப் பரிசோதனைக்கென நிறுத்தப்பட்டோம். ஆட்களை இறக்கவில்லை. பொதிகளைக் கிளறவில்லை. கடந்த தடவையைப் போல் மோப்பநாய் எதுவும் எனது புகைப்படக்கருவியினுள் குண்டு இல்லையென்று உறுதிசெய்யவில்லை. அசிரத்தையான, சோம்பல் படிந்த கேள்விகளும் என்னை நோக்கி எறியப்படவில்லை. அடையாள அட்டையை மட்டுமே காட்டவேண்டியிருந்தது. “வேலைக்குப் போகிறீர்களா?”என்றொரு இராணுவத்தான் கேட்டான். “இல்லை”என்றேன். “போகாவிட்டாலென்ன”என்பதுபோன்ற கனிந்த புன்னகையை அவன் தனது முகத்தில் தவழவிட்டான். ‘ஒத்துழைப்பிற்கு நன்றி’என்று வழியனுப்பிவைத்தவர்களைக் கொஞ்சம் வியப்போடு கவனித்தோம். “நன்றாகத்தானே இருந்தார்கள்… திடீரென என்னவாயிற்று!”என்றாள் சித்தியின் மகள்.
தமிழர்கள்பால் ‘அன்பு’ செலுத்தப்படவேண்டுமென்று அவர்களுக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது. ‘பிளாஸ்டிக்’கருணைகளை எப்போதும் தாங்கமுடிவதில்லை. ‘பிளாஸ்டிக்’புன்னகைகளையும். அந்தப் பரிவின் வழி அவர்கள் சொல்ல நினைக்கும் சேதிதான் என்ன? “விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள். இனி நீங்கள் நிம்மதியாக வாழலாம்”என்பதா? “உங்களவர்களை நாங்கள் கொன்றுவிட்டோம்தான்… இனி அது தொடராது”என்ற குற்றவுணர்விலிருந்து பிறந்த குழைவா? எதுவானாலும், எங்களால் திடீர் தோசை மாவு போன்ற திடீர் அன்பைத் தாங்கமுடியாமலிருந்தது.

தென்னிலங்கைச் சிங்களவர்களுக்கு புதிதாக ஒரு சுற்றுலாத் தலம் கிடைத்திருக்கிறது. அது யாழ்ப்பாணம்! அங்கே புத்தம் புதிதான விகாரைகள் முளைத்திருக்கின்றன. அவற்றை வழிபடுவதற்காக நாளாந்தம் ஆயிரக்கணக்கில் சிங்களச்சனங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போகிறார்கள். ஹைஏஸ் வாகனங்களிலும், பேருந்துகளிலும் விறகுகள், சட்டிபெட்டிகள், குழந்தைகள் சகிதம் அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கொள்ளளவை மீறி அன்னாசிப்பழங்கள் நிறைக்கப்பட்ட வாகனமொன்று மூச்சுத்திணறியபடி நகர்ந்தது. ‘இந்திய மக்களின் அன்பளிப்பு’என்று எழுதப்பட்ட வெள்ளை பாலித்தீன் பொதிகளடங்கிய வாகனமொன்று கடந்துபோனது. கிலுகிலுப்பை, காப்புகள், ஒப்பனைப் பொருட்கள் இன்னபிற பிதுங்கிவழிய சிற்றூர்தியொன்று கடந்து விரைந்தது. யாழ்ப்பாணத்திற்கு அவர்கள் நாகரிகத்தைக் கொண்டுபோனார்கள். நீலப்படங்கள், களியாட்டங்கள் வழியாக அங்குள்ள இளைஞர்களது உணர்வுகள் திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருப்பதாக நான் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் ஆதங்கப்பட்டார். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். குறிப்பாக விடுதலையை. அதன் பொருட்டான உடமை, உயிரிழப்புகளை. வழியில் வாகனம் நிறுத்தப்பட்டிருக்க, தலைவாரிக்கொண்டிருந்த சிங்கள இளம் பெண்ணொருத்தி மெதுவாகக் கடந்த எங்கள் கண்களை உற்றுநோக்கினாள். அவள் எதையோ சொல்லவிழைவதுபோலிருந்தது. அது எனது பிரமையாகவுமிருக்கலாம். அவர்கள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாங்கள் உண்மையில் தெரிந்துகொள்ள விரும்பினோம். சாதாரண சிங்களச் சனங்கள் தமிழர்களின் ‘வீழ்ச்சி’யைக் கொண்டாடுகிறார்களா? எங்களுக்காக அவர்கள் எப்போதாவது துயருற்றார்களா?

‘எங்கள் மண்ணை நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்ற நினைவு நெருடிக்கொண்டேயிருக்கிறது. ‘இருந்துவிட்டுப் போங்கள் நாய்களா!’என்று அவர்கள் யாசகம் இட்ட நிலத்தில் வாழ்வதைப் போன்ற கூச்சத்தை தோலில் உணரமுடிந்தது. துட்டகைமுனு-எல்லாளன் வரலாறு திரும்பியதைப் போல… ச்சே! இந்தப் புளித்த உதாரணங்களால் புண்ணை நக்கிக்கொள்வதை முதலில் நிறுத்தியாகவேண்டும். முன்னர் விடுதலைப் புலிகளின் சோதனைச்சாவடி இருந்த இடத்தில் ஒரு சுவடுமில்லை. எல்லாம் தலைகீழாகிவிட்டது. காற்று மட்டும் உலவிக்கொண்டிருக்கும் வெற்றிடத்தைக் கடந்துசெல்கையில் உரத்து விம்மியழவேண்டும் போலிருந்தது. கடல்கோள் கொண்ட கிராமத்திலாவது எச்சங்கள் மீந்திருக்கும்.

பிரதான வீதி திருத்தப்படும் இடங்களை, உள்நோக்கி இறங்கும் உப பாதைகள் நிவர்த்திக்கின்றன. அந்தப் பாதைகளில் ஓயாத வாகனப் போக்குவரத்து நிகழ்ந்துகொண்டிருக்க, செம்மண் புழுதியேறி சிவந்த தலைகளோடும் உடலோடும் நின்ற பனைமரங்கள் காட்சிப்பிழைபோல தோன்றின. பயண நெடுகிலும் அபத்த நாடகமொன்றில் தவறிப்போய் வந்தமர்ந்து எழுந்தும்போகவியலாமல் அலங்கமலங்க விழித்துக்கொண்டிருக்குமொருத்தியைப் போலிருந்தேன். நான் கிளம்பும்போதே அம்மா கேட்டா. “இப்ப ஏன் யாழ்ப்பாணத்துக்குப் போறாய்?” “சும்மா பாக்க”என்று சொன்னேன். பழகிய, அறிந்த, உறவு மனிதர்களே ஊரெனப் பொருள் கொண்டால், நான் யாழ்ப்பாணத்திற்குப் போயிருக்கவேண்டிய அவசியமில்லை. நானறிந்த, பழகிய, உறவு மனிதர்களில் அநேகர் தொலைநகரங்களுக்கும் தேசங்களுக்கும் பெயர்ந்து போய்விட்டார்கள். அந்த அநிச்சய அமைதியை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். இனியொருபோதிலும் அங்கு போக வாய்க்காது என்று பயந்தேன். இறந்தகாலத்தை மீள்சேகரிக்கும் பேராவலே அந்தப் பயணத்தை நோக்கி என்னைச் செலுத்தியது.

நீலநிறக் கூடாரங்கள் சீன எழுத்துக்களுடன் காற்றுக்குப் பழிப்புக் காட்டிக்கொண்டிருந்தன. கூரையைப் பிரித்து கூடாரத்தை வழங்கியிருக்கும் சீனபகவானுக்கு நன்றி.


முறிகண்டிப் பிள்ளையாரைச் சுற்றிவந்தபோது அதுகாறும் அடக்கிவைத்திருந்த கண்ணீர் பெருகியோடியது. எத்தனைதான் நடந்தபோதும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் கல்லுப் பிள்ளையார்களிடத்தில் நமது கண்ணீரைக் கொட்டித் தீர்ப்பதன்றி வேறு போக்கிடந்தான் ஏது? ஏதேதோ ஞாபகங்கள்… பழகிய போராளிகள், முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், சிதைந்து சதைக்கூழாய்க் கிடந்த உடல்கள், வைத்தியசாலைகளில் இரத்தக்கட்டோடு வலியில் கதறிக்கொண்டிருந்த குழந்தைகள், ‘எங்களைக் காப்பாற்றுங்கோ’என்று இரக்கமில்லாதவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட- பின் அனைவராலும் கைவிடப்பட்ட கண்ணீர் முகங்கள். வாழ்க்கை மிகக் குரூரமானது! அதிகாரங்களைச் சுண்டுவிரலில் வைத்திருக்கும் அரசாங்கங்களே முதலில் தூக்கிலிடப்பட வேண்டியவை. சாதாரண சனங்களின் துரதிர்ஷ்டம், பயங்கரவாதிகளால் ஆளப்பட்டுக்கொண்டிருப்பதே!

கிளிநொச்சி சிதைந்துபோய்க் கிடக்கிறது. சமாதான காலத்தில் (?) கண்ட கிளிநொச்சி நகரத்தை தலைகீழாகத் தூக்கி விசுக்கியெறிந்தாற்போலிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் அகதிகள் இருக்கிறார்கள். நீதிமன்றக் கட்டிடத்தை ஊகிக்க முடிந்தது. ஒரு பெரிய காங்கிரீட் மலை சாய்ந்து கிடப்பதைப்போல தண்ணீர்த்தொட்டி விழுந்துகிடக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் ‘பாஸ்’போன்ற விடயங்களைக் கவனித்த ‘நந்தவனம்’இப்போது இராணுவ நிலையமாகியிருக்கிறது. ‘அறிவமுது பொத்தகசாலை’யைத் தேடினேன். காணவில்லை. பேருந்து நிலையமும் பெயர்க்கப்பட்டுவிட்டது. அநேகமாக அனைத்துக் கட்டிடங்களும் கூரையிழந்திருக்கக் கண்டோம். ‘த’என்று தொடங்கும் இலக்கத்தகட்டினையுடைய வாகனங்கள் ஒருபுறத்தில் தகரக்குவியல்களாகக் கிடப்பதைப் பார்த்தோம். கரடிப்போக்குச் சந்தியருகில் புதிதாக ஒரு புத்தர் கருணைபாலித்தபடி எழுந்தருளியிருக்கக் கண்டோம். நம்புதற்கியலாத கனவைக் கண்டுகொண்டிருப்பதைபோன்றிருந்தது.


கரடிப்போக்கு சந்தியினைக் கடந்து உப்பளப் பிரதேசத்தினுள் வாகனம் போய்க்கொண்டிருந்தது. உப்பு வாடை மூக்கில் அறைய, அந்த இடத்தில் அலைந்துகொண்டிருந்த வரட்சி மனதில் மேலும் முள்பரத்தியது. இதே ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதும், இராணுவச் சமநிலையில் அந்த வெற்றியானது அந்நாளில் ஏற்படுத்திய மாற்றமும் ஞாபகத்தில் வந்தது. ‘பொய்யாய் பழங்கதையாய் போயினவே’என்ற அரதப்பழசான புலம்பலும்கூடவே. ஆனையிறவினருகில் உப்புக்காற்றால் துருவேறிய ஒரு கவச வாகனம் கிடந்தது. அதன்மீது ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருக்க, இளஞ்சிவப்பு பூக்கள் அதனடியில் கிடந்தன. தொலைவில் இருந்து பார்க்கும்போது அது ஒரு இராணுவத்தானுடையதைப் போலிருந்தது. அதைச் சுற்றி நின்று சில இளம் புத்த பிக்குகள் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள். இராணுவத்தைச் சேர்ந்த யாரோ ஒருவரின் வெற்றியை ஞாபகங்கொள்ளும் சின்னமாக அங்கே அந்தக் கவசவாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்பதை ஊகிக்க முடிந்தது.
“இறங்கிப்போய் நீங்களும் அதைப் பார்த்துவிட்டுச் செல்லலாம்”என்று பரிந்துரைத்தான் வழியில் நின்ற அந்தச் சீருடைக்காரன். அவனது உதடுகளில் சிநேகிக்கும் புன்னகை இருந்தது. ஆனால், கண்களில் வன்மமோ எகத்தாளமோ எதுவோ ஒன்று மறைந்திருந்ததாகத் தோன்றியது. எதையும் சந்தேகிக்கவே போர் கற்றுத்தந்திருக்கிறது. வெள்ளந்தியான புன்னகையோடு ‘நாங்கள் இப்போது அவசரமாக விரைந்துகொண்டிருப்பதாக’ப் பொய் சொல்லவேண்டியிருந்தது.

இயக்கச்சி, பளை, கொடிகாமம், சாவகச்சேரி எங்கெங்கிலும் இராணுவப்பச்சையால் வேலியமைத்திருக்கிறார்கள்.“விடுதலைப் புலிகள் வெற்றிகொள்ளப்பட்டு போர் உண்மையாகவே முடிந்துவிட்டதெனில், மக்களைக் காட்டிலும் அதிகப்படியான இராணுவம் வழியில் குவிக்கப்பட்டிருப்பது எதனால்?”என்ற கேள்வி அந்த வழியாகச் செல்லும் எவருக்கும் எழவே செய்யும்.
பனையோலைகளாலும் கிடுகுகளாலும் அடைக்கப்பட்ட வேலிகளை நெடுநாட்களுக்குப் பிறகு கண்டபோது, மனதுக்குள் ஞாபகஅலை புரண்டது. இறந்தகாலத்தின் மக்கிப்போன ஆனால் பிடித்தமான வாசனை வீசியது. கட்டிலுக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொம்மை பால்யத்தின் நினைவுகளைத் தூண்டுவதைப்போலவும், பழைய பாடலொன்று அதைக் கேட்டபோது நின்றிருந்த நிலத்தின் வாசனையோடு காற்றில் மிதந்து வருவதைப்போலவும் விசித்திரமான உணர்வெழுச்சியை அடைந்தேன். இறந்தகாலமும் பிறந்தமண்ணுந்தான் எத்தகைய கிளர்ச்சியூட்டுவனவாக இருக்கின்றன!

'ஆயுபோவன் வெல்கம் ரூ JAFFNA' என்ற வாசகத்தைத் தாங்கிய வரவேற்புப் பலகை ஆரவாரமாக யாழ்ப்பாணத்தினுள் வரவேற்கிறது. கைதடி-நாவற்குழிப் பாலத்தில் சிங்கக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. ராஜபக்ஷே இங்கும் அகலமாகச் சிரித்தபடி நிற்கிறார். என்னவொரு வாஞ்சை வழியும் புன்னகை! டக்ளஸ் தேவானந்தாவும் ‘கட் அவுட்’களில் தன் பங்கிற்கு அளவாகப் புன்னகைக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக ‘டயலொக்’தொலைபேசியின் விளம்பரப்பலகைகளிலும் கடைகளின் பெயர்ப்பலகைகளிலும் ஒரு பெண் தீராத சிரிப்புடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறாள். ‘ஒரே நாடு ஒரே மக்கள்’இன்னபிற ஐக்கியத்தைக் கோரும் வாசகங்கள் புளகாங்கிதமடையத் தூண்டுகின்றன. ‘நல்லாப் பண்றாங்கய்யா காமெடி’என்று வடிவேலு குரலில் யாரோ பின்னணி பேசுவது கேட்காமல் கேட்கிறது.

“பழைய யாழ்ப்பாணம் இல்லை அக்கா”என்கிறாள் தங்கை. அந்த அகன்று விரிந்த வீதிகளைக் காணவில்லை. ஆனால், அவை உண்மையில் அப்படியேதானிருந்தன. யாழ்ப்பாணத்தை நாங்கள் பிரிந்துசென்றபிற்பாடு கண்ட வீதிகளின் கண்களால் நாங்கள் அவற்றைப் பார்த்தபோது அவை ஒடுங்கியிருக்கக் கண்டோம். கட்டிடங்களும் அவ்விதமே. ‘கண்டி வீதி இவ்வளவு சிறிதாயிருந்ததா?’ என வியந்துபார்த்தோம். ஏனைய வீதிகள் குச்சொழுங்கைகளாக எங்களுக்குத் தோன்றின என்பதே உண்மை. ஆனால், அவைதாம் எங்களது இளமைக்காலத்தில் எத்தனை விரிந்திருந்தன. வயோதிபத் தாயை நீண்டநாட்களின் பின் பார்ப்பதைப் போலிருந்தது. அவளது சுருக்கம் நிறைந்த முகத்தில் உள்ளொடுங்கிய கண்களிலிருந்து சொட்டிய கண்ணீர் குற்றவுணர்வைத் தூண்டுவதாக இருந்தது. யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியை இலங்கை அரசாங்கத்தின் கருணைக்கண்கள் சென்றடையவேயில்லைப் போலும். அதே பழைய கட்டிடங்கள். அரசாங்க ஆஸ்பத்திரிகள் ஏன் எல்லாவிடங்களிலும் மரணத்தை ஞாபகப்படுத்துகின்றன என்று தெரியவில்லை. மேலும் அந்த வாசனை… அரசாங்க அலுவலகங்களுக்கும் அந்தச் செத்த சாயல் இருக்கவே செய்கிறது. அரசாங்க அலுவலகங்களுக்கென்று ஒரு சிறப்பு நிறம் இருக்கிறது. அது பிணவறையை நினைவூட்டுவது. காவிக்கலர் சுவர்கள், சாம்பல்நிறச் சட்டங்களையுடைய சன்னல்கள். ஓடுகளோவெனில் எப்போது யார் தலையில் பொறிந்துவிழுமோவென்ற அச்சத்தைக் கிளர்த்துவன.


சுபாஷ் ஹோட்டலுக்குச் செல்லும் வழி மூடப்பட்டிருந்தது. அதற்கு எப்படிப் போவதென்று ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டபோது, காலந்தப்பி நகரத்தில் நுழைந்துவிட்டவர்களைப் பார்ப்பதுபோல அவர் ஒரு பார்வையை எறிந்தார். பிறகு சொன்னார்: “சுபாஷ் ஹோட்டலை எப்பவோ மூடியாச்சு”. வேறு ஏதாவது நல்ல தங்கும் விடுதிகள் உண்டாவென விசாரித்தோம். ‘பிள்ளையார் இன்’என்றொரு விடுதி இருப்பதாகச் சொன்னார். அது மானிப்பாய் வீதியில் இருந்தது. அது சகல வசதிகளோடுமிருந்தது. அங்கே இடமில்லை என்று கைவிரித்துவிட்டார்கள். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சனங்கள் போவதும் வருவதுமாய் ஒரே நெரிசல். வெயில் நெருப்பெனக் காய்ந்தது. என்னோடு வந்திருந்த பிள்ளைகள் களைத்திருந்தார்கள். நாங்கள் நின்றிருந்த இடத்திற்கருகில் ‘முஸ்லிம் ஹோட்டல்’என்ற பெயர்ப்பலகையைக் கொண்ட உணவகமொன்று அமைந்திருந்தது. அந்தப் பெயர்ப்பலகை ஏதோவொரு வரலாற்றுக் குறியீடு போலிருந்தது. பல்வேறு இணைய விவாதங்கள் நினைவில் வந்து தொலைத்தன.


பயணம் குறித்த கிளர்ச்சி ஏறத்தாழ தீர்ந்துவிட்டிருந்தது. உண்மையில் அந்த நிமிடமே நானும் திரும்பிச்செல்ல விரும்பினேன். ஏதோவொரு விசித்திரமான உணர்வு என்னைச் சூழ்ந்துகொண்டிருந்தது. அந்நிய மனிதர்கள் சாரைசாரையாகச் செல்வதைப் பார்த்தபடி அந்நிய நகரமொன்றில் எரிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். ‘ஊர் என்பது மனிதர்களே’என்பதை இத்தனை தூரம் வந்து தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது.
கடைசியில் நாங்கள் ஒரு சுமாரான விடுதியைக் கண்டுபிடித்தோம். ஒரு கட்டிலைப் போட்டு, குளிரூட்டியையும் முடுக்கிவிட்டால் அது வசதிபொருந்திய தங்குமிடமாகிவிடுமென்பது அந்த விடுதிக்காரர்களின் கணிப்பாயிருந்தது. கழிப்பறையின் கதவு உள்நோக்கித் திறக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. கதவைத் திறந்தால் உள்ளேயிருப்பவர் பின்வாங்கி கழிப்பறைப் பீங்கானில் முட்டிக்கொள்ளவேண்டியதாயிருக்கும். பீங்கானை உரசி இடமேற்படுத்தி வெளியில் வந்துசேர்வது அவரவர் கெட்டிக்காரத்தனத்தையும் உடல்பருமனையும் பொறுத்தது.

சற்று ஓய்வெடுத்துக்கொண்டபின் நாங்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் போய்ப் பார்ப்பதாகத் தீர்மானித்தோம். நாலரை மணியளவில் நூலக வாசலைச் சென்றடைந்தோம். வாசலில் ஒரே கூட்டமாயிருந்தது. ‘பார்வையாளர் நேரம் பிற்பகல் 5-6 வரை என்று வாயிலில் எழுதப்பட்டிருந்தது. தென்னிலங்கையிலிருந்து சுற்றுலா வந்திருந்த சிங்களச்சனங்கள் நிறையப்பேர் வாசலில் காத்திருந்தார்கள். “இவர்கள் திரும்பவும் எதற்காக வந்திருக்கிறார்கள்?”என்று என் தங்கை கேட்டாள். ‘திரும்பவும்’என்ற சொல்லில் கசப்பு வழிந்தது. பெறுமதி மதிப்பிடவியலா இலட்சக்கணக்கான நூல்களை தீக்கிரையாக்கத் துணிந்த அந்த கொடிய இரவும் அதன்வழி உமிழப்பட்ட காழ்ப்புணர்வும் இனவெறியும் மறக்கப்படக்கூடியனவல்ல. உயிர், உடமையழிப்பினைக் காட்டிலும் அறிவழிப்பு என்பது மிகக் கீழ்த்தரமான படுபாதகம்.

நூலகம் அதற்கேயுரிய அமைதியுடனும் காகிதவாசனையுடனும் பிரமாண்டமாய் இருந்தது. தூசிபடிந்த பெரிய பெரிய கோப்புகளில் காலம் அடங்கியிருந்தது. புராதனத்துள் நடந்துதிரிவது போன்ற மாயத்தோற்றம் திடீரென எழுந்துமறைந்தது. குட்டி ரேவதி, சுகுமாரன், அய்யப்ப மாதவன், சல்மா, லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி ஆகிய கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் அங்கே இருந்தன. எனதூர் என, மனப்பழக்கம் காரணமாக நான் நினைக்கிற ஓரிடத்தில் எனக்கு நேரடிப் பரிச்சயமான நண்பர்களின் புத்தகங்களைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சஞ்சிகைப் பகுதியில் பழைய காலச்சுவட்டினையும் யுகமாயினியையும் பார்த்தேன். சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட சுற்றுலாப் பயணியொருவர் நூலகத்தின் வரலாறு பற்றி அங்கு வேலை செய்த ஊழியரிடம் உடைந்த தமிழில் வினவிக்கொண்டிருந்தார். அதற்குப் பதிலளித்தவர் நிறையப் பகுதிகளைச் சிரிப்பினால் நிரவிக்கொண்டிருந்தார். உயிரெனப்படுவது வெல்லத்தினும் இனிது!


பூங்கா, கடற்கரை இவற்றை எமது உல்லாசப்பயணப் பட்டியலிலிருந்து நீக்குதல் சிரமம். சுப்பிரமணியம் பூங்காவுக்குப் போனோம். புகைப்படக்கருவிக்கு 250 கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது, பல்நிற குரோட்டன்களையும் தண்ணீரற்ற சிறுதடாகத்தையும் பார்த்தோம் என்பதற்கப்பால் அதைக்குறித்து எந்த நினைவுமில்லை.
வெயில் மேற்கில் சரிந்துகொண்டிருக்கும் மஞ்சள்பொழுதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைப் போய்ச்சேர்ந்தோம். வழியெல்லாம் பழைய ஞாபகங்கள் சிந்திக்கிடந்தன. வாயிற்காப்பாளர் உடனே உள்ளே விடமறுத்தார். “முன்னொரு காலத்தில் நான் இங்கே படித்தேன். பழைய ஞாபகங்கள்… பார்க்கவேண்டும்”என்ற வார்த்தைகள் கதவைத் திறந்தன. “நீங்கள் இங்கே படித்தீர்கள் என்பதை முதலிலிலேயே சொல்லியிருக்கலாமே…”என்ற வாசகத்தை குறைந்தபட்சம் நான்கு தடவையாவது சொல்லியிருப்பார். “படிக்கவில்லை… சும்மா வந்துபோனேன்”என்று சொல்ல நினைத்தேன். நமது குசும்புகள் சில சமயங்களில் வம்பாகிவிடுவதுண்டு என்பதனால் நன்றி கூறி உள்ளே போனோம். அப்பர் தேவாரம் பாடித் திருக்கதவை (கதவில் என்னவாம் திருக்கதவு) திறந்தது உண்மைதான் போலும். நானும் எனது தோழியும் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிய கைலாசபதி கலையரங்கின் பின்புறப் படிக்கட்டைக் காணோம். அதையும் விழுங்கியபடி கட்டிடங்கள் நெருங்கியிருந்தன. பல்கலைக்கழக நூலகம் பூட்டப்பட்டிருந்தது. சருகுகள் பறந்துகொண்டிருந்த மரங்களினடியில் கொஞ்சநேரம் நின்றிருந்தேன். காலம் மீள்திரும்பிவருகிறாற் போலிருந்தது. நெஞ்சுக்குள் நினைவுக்குட்டைகள் தளம்பி தளம்பியடங்கின. மனந்தான் எத்தனை நொய்மையானது! இறந்தகால ஞாபகங்களில் ஆடிப்போகும் இந்தப் பூஞ்சை மனத்திற்குள் தினந்தோறும் எத்தனையெத்தனை போர்க்களங்கள்!

யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்களில் சிலர் எஞ்சியிருந்தார்கள். அவர்களது தொலைபேசி இலக்கங்களும் என்னிடமிருந்தன. ஆனால், அவர்களைச் சந்தித்து என்ன கதைப்பது என்று தெரியவில்லை. உண்மையில் நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். எதையும் கேட்க விரும்பவில்லை. நான் எனக்கே எனக்கேயான நம்பிக்கைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவை சிதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆதர்ச மனிதர்களும் ஆதர்ச உலகமும் என்றென்றைக்குமாக எனக்குள் வாழ்ந்துகொண்டிருக்கட்டும்.
கோண்டாவிலில் எனது தோழியின் வீட்டுப் பக்கம் வாகனத்தைச் செலுத்தப் பணித்தேன். அங்கே அவளில்லை என்பதை நானறிவேன். புகைப்போக்கியிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்த புகைச்சுருள் அங்கே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிவித்துக்கொண்டிருந்தது. மனதின் நீர்ப்பரப்பில் காட்சியலை எழுந்தடங்கிற்று. வாகனத்திலிருந்து கீழிறங்காமலே நோட்டமிட்ட எங்களை முற்றத்தில் நின்ற கறுப்புநிற நாயொன்று ‘என்ன பிரச்சனை?’என்பதாக ஏறிட்டுப்பார்த்தது. சந்தேகமில்லாமல் முன்னெச்சரிக்கையுள்ள நாய்தான்.

நல்லூர்க்கோயில் பூட்டப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணியோடு பூட்டப்பட்டுவிடுவதாக அங்கே நின்றிருந்த ஒருவர் தெரிவித்தார். ‘திலீபன் இந்த இடத்தில்தான் உண்ணாவிரதமிருந்து மறைந்தார்’ஓரிடத்தைக் காட்டி தங்கையிடம் சொன்னேன். திலீபன் பசியில் கருகியபோது அவள் மூன்று வயதுக் குழந்தையாயிருந்தாள். (சித்தியின் மகளுக்கும் எனக்குமிடையில் பல்லாண்டுகள் வயது வித்தியாசம்) ஆலய முன்புறத்தில் மத்திய கல்லூரி மாணவர்கள் ஏதோவொரு நிகழ்வை முன்னிட்டு பறையினையொத்த மேளமொன்றை அறைந்துகொண்டிருந்தார்கள்.


“இன்றைக்கே வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாம்”என்றாள் தங்கை. எனது எண்ணமும் அதுவாகவே இருந்தது. உண்மையைச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் முகத்தை எங்களால் பார்க்கமுடியவில்லை. ஏதோவொரு மாயக்குரல் என்னை அழைத்தது. பிறகு அது மெல்ல மெல்லத் தேய்ந்து அடங்கிப்போயிற்று.
ஏ-9 பாதையில் அவரவர் நினைவுகளில் ஆழ்ந்த முகங்களுடன் இருளை ஊடறுத்தபடி திரும்பிக்கொண்டிருந்தோம். பரந்தன்-கிளிநொச்சியைக் கடந்தபோது பெரும்வலியொன்று வாள்போல நெஞ்சைக் கீறிப்பிளந்தது. ஆங்காங்கே மினுங்கிக்கொண்டிருந்த வெளிச்சப்பொட்டுக்கள் இராணுவ முகாம்கள் என்பதை நாங்களறிவோம். அதற்குமப்பால் இருளுக்குள் காடுகளுக்குள் எத்தனையெத்தனை ஈரக்கண்கள் நிராதரவாய் காத்திருக்கின்றனவோ என்ற ஞாபகம் உயிரைத் தின்றது. கடவுள் என்ற ஒருவர் இருப்பாராகில், அவரிடம் கேட்பதற்கென்றொரு கேள்வியுண்டு.

“இவ்வளவு கேவலமாக நாங்கள் கைவிடப்படுவதற்கு அப்படியென்ன பாவம் செய்தோம் ஆண்டவரே…!”

குறிப்பு: கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திரும்பிய பிறகு எழுதியது.


நன்றி: அம்ருதா

44 comments:

தமிழ்நதி said...

நண்பர்களே,

வழக்கம்போல ஏதோ பிரச்சனை. (நான் பாவிக்கும் எழுத்துருவில்) தமிழ்மண முகப்பில் ஆங்கிலத்தில் தெரிந்தாலும் பதிவு தமிழில்தர்ன் உள்ளது. இருப்பது போதாதென்று இதுவேற...:(

ஆதிரை said...

நீண்ட காலத்தின் பின்னர் யாழ். சென்ற போது இதே கலவை உணர்வு. :-(

chandra said...

சிதைந்த யாழ்ப்பாணம் கடும் மன உளைச்சலைத் தருகிறது தமிழ்நதி. சிநேகித்த ராணுவவீரர்களின் வார்த்தைகளும் பார்வையும் அழித்தொழித்த அகங்காரத்தின் மிச்சமாகவே எண்ணத் தோன்றுகிறது. யாழ்ப்பாண பயணத்தில் நினைவில் ஞாபகங்களின் வலிகளை மட்டுமே சுமந்து வந்திருக்கிறீர்கள்.யாழ்ப்பாணத் தெருக்களில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவதாகவே கற்பனை செய்ய முடிகிறது.சிங்களர்கள் குருதி நீரினை பருகி மகிழட்டும்.

ஈரோடு கதிர் said...

வாசித்து முடிக்கும் போது “பெரும்வலியொன்று வாள்போல நெஞ்சைக் கீறிப்பிளந்தது”

கதறியழும் போது சிந்தும் கண்ணீர்த் துளியை படம் பிடிப்பவனாய் உங்கள் எழுத்தையும் மனசு வலியோடு ரசிக்கத்தான் செய்தது

தமிழ்நதி said...

ஆதிரை,

ஆம்... யாழ்ப்பாணத்தை முன்பு நெருக்கமாக உணரமுடிந்தது. அதற்கு நாமும் நமது வாழ்முறை மாறிவிட்டதும் ஒரு காரணம்.

வருகைக்கு நன்றி சந்திரா,

'சாந்தாமணி'படிச்சீங்களா:) யாழ்ப்பாணம் சிங்களவர்களின் சுற்றுலாத்தலம் ஆகிவிட்டது. ஆனால், அங்கே அவர்கள் பார்க்க என்னதான் இருக்கிறது? நமது சிதைவுகளையன்றி? மிகவும் மனவருத்தமாக இருந்தது.

நன்றி கதிர்.

பேருந்து விபத்து பதிவு படித்தேன். வலியை வெளித்தள்ளும் வழியாக எழுத்து இருந்துவிட்டுப் போகட்டுமே...:)

senthil said...

ஒவ்வரு வரியும் நெஞ்சில் முள்ளென தைக்கிறது .....
யாழ்பாணம் மட்டும் அல்ல மொத்த ஈழமுமே நாங்கள்
புத்தகங்களில் தான் படித்து கற்பனை செய்துகொண்டோம் ...
போராட்டம் நிரந்த அந்த பூமியில் காலடி வைபதென்பது
எனக்கொரு கணவாய் இருந்தது ...
இழந்த இழப்புகளுக்கு கண்டிப்பாய் காலம் பதில் சொல்லும் .........

நேசமித்ரன் said...

உங்களுக்கேனும் நினைவுகள் மீதமிருக்கின்றன நாளைய தலைமுறைக்கு ?

வழமைப் போல் மொழி... அமுதம்!

padmanabhan said...

i did read the article in "amrutha"magazine also. good.

Jerry Eshananda said...

கூடவே பயணித்த உணர்வு...வாசித்து முடிக்கையில் வலி மட்டும் மிச்சமிருக்கிறது.

கவிஞர் இசை said...

tamil eappa katturai thokkupu varuthu........... pinnuuttam alla.

shortfilmindia.com said...

:(

கேபிள் சங்கர்

ராஜ நடராஜன் said...

மௌனம்!

S.S JAYAMOHAN said...

இழப்பின் வலி உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது..

காலச் சக்கரம் சுற்றிக்கொண்டுதானே
இருக்கிறது..

காத்திருப்போம் !

சின்னப்பயல் said...

//கதவைத் திறந்தால் உள்ளேயிருப்பவர் பின்வாங்கி கழிப்பறைப் பீங்கானில் முட்டிக்கொள்ளவேண்டியதாயிருக்கும். பீங்கானை உரசி இடமேற்படுத்தி வெளியில் வந்துசேர்வது அவரவர் கெட்டிக்காரத்தனத்தையும் உடல்பருமனையும் பொறுத்தது.//

நல்லாருக்கு,,

மற்ற அற்றவைகளைப்பற்றி
கூற மனமில்லை..

பதி said...

:(

குசும்பன் said...

பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை! படிக்கும் எனக்கே இப்படி என்றால்..:(

மனதின் எங்கோ ஒரு மூலையில் திரும்பவும் இழந்தது அனைத்தும் வரும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது!

உண்மைத்தமிழன் said...

முழுவதையும் படிக்க முடியவில்லை. தங்களுடைய எழுத்து கதையுடன் சோகத்தையும் சேர்த்தை தருவதால் மனம் கனக்கிறது மேடம்..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஊர் என்பது மனிதர்கள் தானே..
:( வலிந்து மாற்றப்படும் இடம் பார்த்து வலியில் எழுதி இருக்கிறீர்கள்.
கலங்கவைக்கிறது பதிவு.. சோக ஸ்மைலி போடாமல் போக எங்கே விடுகிறீர்கள்.
உங்களுக்காக சிரித்தே ஆகவேண்டுமென்றால்... அந்த ’சும்மா வந்துபோனேன்’ க்கு சிரித்து வைக்கிறேன் :)

soorya said...

அன்புத் தோழிக்கு,
ஒன்றுமே எழுதாமல் (கண்ணீர்) விடுவோமோ என்று யோசித்தேன்.
தங்களைப் போலவே எனக்கும் எழுதாமலிருப்பது அல்லது ஏதாவதொன்று சொல்லாமலிருப்பது மிகக்கடினம்.
தங்கள் பதிவைப் படித்து முடித்துப் பெருமூச்செறிந்த வேளையில்..
தா.பாலகணேசன் தன் நீண்ட கவிதையைத் தொலைபேசி மூலம் படித்துக் காட்டினான்.
தங்களது உரைநடை.
அவனது கவிதை.
நீங்கள் போய்வந்து எழுதினீர்கள். அவன் மனக் கண்ணில் எழுதினான். கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
தனி மடல் அனுப்புங்கள் அவன் எண் தருகிறேன்.
.....
தங்கள் பதிவில்
ஓரிடத்தில் என்னையும் அறியாமல் நெஞ்சு விம்மி வெடித்தது. முறிகண்டிப் பிள்ளையாரைச் சுற்றி வந்தபோது என்று எழுதினீர்களே..!
ம்...
எனக்கு முறிகண்டிப் பிள்ளையாரைப் பிடிக்கும்.(தனிப்பட்ட காரணமும் ஒன்றுண்டு).
மற்றையது,,
எங்களது ஆட்சிக் காலத்தில், அந்தக் கோவிலில் வரும் அவ்வளவு வருமானமும் ..சந்தோசம் இல்லம்..எனும் மனநலம் குன்றியவர்களைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றது. அது பற்றி நான் ஓர் விவரணப் படமும் எடுத்திருந்தேன்.
எனது நெஞ்சு வெடித்தது பிள்ளையாருக்காகவல்ல.
அந்த மனநலங் குன்றிய அத்தனை நோயாளிகளும் இப்போ எங்கே..?
என்ன ஆகியிருக்கும் அவர்களுக்கு..?
தெரிந்தால் சொல்வீர்களா........
...
இன்னுமோர் இடத்திலும் என் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
அறிவமுது பொத்தக சாலை பற்றியது.
புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு..மற்றும் புதிய நூல்கள் பற்றிய தேர்வு இவற்றில் என் கண்மணிளுடன் என் பங்கும் கணிசமாகவே இருந்தது.
...
இறுதியில் நீங்கள் எழுதியது போலவே..
என்ன பாவம் செய்தோம் ஆண்டவரே...............!

K.P.Suresh said...

அன்புள்ள தமிழ்நதி,



யாழ்பாணத்தை என்றைக்கும் பார்த்திராத என் போன்றவர்களுக்கு, அன்றைய மற்றும் இன்றைய யாழ்பாணத்தை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள். இழப்பின் வலியை சுமந்துகொண்டே பயணித்து இருக்கின்றீர்கள்.



//‘இந்திய மக்களின் அன்பளிப்பு’என்று எழுதப்பட்ட வெள்ளை பாலித்தீன் பொதிகளடங்கிய வாகனமொன்று கடந்துபோனது.//

இவை மட்டுமா இந்தியா வழங்கியது?



நெஞ்சம் கனக்கின்றது.



அன்புடன்

கே.பி. சுரேஷ்

யாசவி said...

மனம் கனக்கிறது

கடைசியான வார்த்தைகள் நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் கடவுளிடம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

இந்தியாவில் சொந்த ஊருக்கு போகையில் சில நேரங்களில் இதில் சில உணர்வுகள் எனக்கும் வந்ததுண்டு.

விடிவுகளின் நம்பிக்கையில் இருளை சமாளிப்போம்

க. தங்கமணி பிரபு said...

வணக்கம்!

நேரடியாக ஈழம் வந்து கண்டதில்லை நான். நினைவு தெரிந்து கேட்டதெல்லாம் போர் குறித்தும், நம் தமிழ் மக்கள் அவலப்படும் துயர் பற்றியும்தான்.

வருடங்கள் தொடர போரும் அமைதியும் மாறி மாறி இறுதியாய் கடந்த வருடம் போரில் நாம் வீழ்ந்த போதும் மனதின் உள்ளே துயரைக்காட்டிலும் வலுகட்டாயமாக கொடுஞ்சினத்தை மட்டுமே குடிவைத்துள்ளேன்.

300வருடம் உரு பலவாய் நீண்ட இந்திய விடுதலைப்போரே நான் கொள்ளும் உதாரணம் - வீரசுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர் வேறெதும் கொள்வாரோ! என்பதை திட்பமாக நம்புகிறேன், கண்ணிரிலும் வலிதாய் சினம் வளர்க்கிறேன்!

ஆயினும் உங்கள் யாழ்பாண பயணகட்டுரையில் முன்னம் இருந்த நகரைப்பற்றி குறிப்பிடுகையில் அப்போதிருந்த தமிழர் ஆளுகையும் மனதில் காட்சியாக தெரிந்து என்னையறியாமல் வெளிப்பட்ட கண்ணீரில் மறைகிறது!

நீங்கள் இப்போது கண்டது நிரந்தரம் இல்லை! இந்த இடைவேளையில் தமிழ் வீரத்தின் சூழ் முற்றி எதிர்க்கப்பெறா பெரும் சக்தியாய் எழும் விரைவில்!

தமிழ் ஈழத்தை சுற்றிப்பார்த்தபின்தான் என் மரணம் எனச்சொல்லும் என் உள்ளுணர்வையே உங்களுக்கு பதிலாகவும், கருத்தாகவும் பகிர்கிறேன்!

பாலகிருஷ்ணன் said...

வாசிப்பின்போதே மனம் சித்தரவதையை அனுபவித்தது.
எங்கே தவறு நிகழ்ந்தது? எங்களை எந்த சக்தி மெளன சாட்சியாக்கியது? காலம் உடற்புண்ணை ஆற்றலாம். மனச் சித்யவதையால் ஏற்படுத்த புண்ணை ஆற்ற இயலுமா?

கலகலப்ரியா said...

தொண்டை அடைத்துக் கொள்கிறது..

Thenammai Lakshmanan said...

உண்மைதான் தமிழ்நதி.. வாசிக்கும்போதே வாளால் அறுப்பது போலிருக்கிறதே..வாழ்பவர்களுக்கு ??

KarthigaVasudevan said...

மனசை கிணத்துக்குள்ள கல்லைக் கட்டி தூக்கிப் போட்டு ஆழத்துல மாட்டவச்சிட்டு வெளில வர வழி கிடைக்காத உணர்வு தமிழ்நதி.மனசை மட்டும் தான் சொல்றேன்,உடல் வெளிலையும் மனசு கிணத்துக்குள்ள மீட்டெடுக்க முடியாமையும் மாட்டிகிட்ட அந்த அவஸ்தையை என்ன சொல்ல!அவ்ளோ கனம் ;எப்பவும் போல நாடு வீடுன்னு எழுதும் போது உங்க உணர்வை எழுத்தில் கரைத்து அழ வைக்கறிங்க.

நிலாமதி said...

பாராடுக்கள் உங்கள் சிறந்த எழுத்து நடைக்கு. மீண்டும் என் நினைவுகளை யாழ் மண்ணில்...நிலைக்க விட்டு இதயம் மீண்டும் ..ரத்தக் கண்ணீர் வடிக்க மெளனமாய் விம்முகிறேன் . நட்புடன் நிலாமதி

vinthaimanithan said...

’ஒரு சகாப்தம் முடிந்து போனதா?’ என்று மனம் பதைக்கிறது. மனமெங்கும் வெறுமை, அந்தகாரம், வெறுப்பு, நடந்துமுடிந்த எதையும் நம்பவியலாத் தனிமை.... சொல்ல ஏதுமின்றி தவிக்கிறேன் சகோதரி

Unknown said...

நான் செழிப்பாயிருந்த யாழ்ப்பாணத்தையும் பார்த்ததில்லை. இப்போது ஒடுங்கிப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தையும் பார்த்ததில்லை.

ஆனால் உங்கள் எழுத்து எனக்கு சொல்லமுடியாத ஒரு வலியை உணர வைக்கிறது. படித்த எனக்கே இப்படியிருக்கும்போது பார்த்த உங்களுக்கு.. (நன்றி குசும்பன்)

ஜோதிஜி said...

மறுபடியும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அமைந்தால் இடைவெளி விட்டு போய் விட்டு வாருங்கள். அப்போது நீங்கள் எழுதும் எழுத்தை வாசிக்கும் போது ஏன் தமிழீழம் முக்கியம் என்பது அறிவுஜீவுகளுக்கு புரிய வாய்ப்புண்டு.

காரணம் இனி தான் நிறைய " மாறுதல்" உருவாகப் போகிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கண் முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள் தமிழ்நதி.

இழப்பை, வலியை, மக்களின் அவல நிலையை, வாழ்ந்த நகரை.. என எல்லாவற்றையும் படிக்கும் பொழுது.. வலிக்கிறது. :((

ஹேமா said...

இது எங்கள் பழைய
யாழ்ப்பாணம் இல்லை.
என்றாலும் வாசனை.நன்றி.

Anonymous said...

//வாகனத்திலிருந்து கீழிறங்காமலே நோட்டமிட்ட எங்களை முற்றத்தில் நின்ற கறுப்புநிற நாயொன்று ‘என்ன பிரச்சனை?’என்பதாக ஏறிட்டுப்பார்த்தது. சந்தேகமில்லாமல் முன்னெச்சரிக்கையுள்ள நாய்தான்.//

எதுவும் முடிந்துவிடுவதில்லை.. முழுவதும் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டாலும்...
பந்து எகிறித் திரும்பும்..
ஒரு நாள்..
நாம் உயிர் வாழாதிருந்தாலும்..
------

அன்புடன் நான் said...

நான் அந்த மண்ணை பார்த்தவன் இல்லை. படித்தவன்.

அங்கே வாழ்ந்த உங்களின் இன்றைய வலியை அப்படியே உணர்ந்தேன்....

என் இதயத்திலும் சிங்களவன் ஏரோட்டிய வலி
உங்க கட்டுரையை உணரும் போது......

arul said...

வார்த்தைக‌ள் இல்லை எழுதுவ‌த‌ற்கு.
க‌ட‌வுள்!! இருக்கின்றாரா என்ற கோப‌ம் தான் வ‌ருகிற‌து.
ம‌னித‌னாய், த‌மிழ‌னாய், கையாலாக‌த‌வ‌னாய் இருப்ப‌த‌ற்கு ம‌ன‌ம் வேத‌னை கொள்(ல்)கிற‌து.
"வ‌லிய‌து வாழும்" என்ற தத்துவ‌த்தை விட‌ "ஒவ்வொரு செய‌லுக்கும் அதற்கு இனைணயான எதிர் விசை உண்டு" என்ற த‌த்துவ‌த்தில் அதிக‌ ந‌ம்பிக்கை கொண்டு காத்திருக்கிறேன் க‌ண்ணீரோடு!! நிச்ச‌ய‌ம் ம‌னித‌ம் வெற்றி பெறும்.

அருள் நித்தியாந்த‌ம். செ

VijayaRaj J.P said...

உங்கள் சோகங்கள் மாறட்டும்...
ஆனால் கோபங்கள் ஆறவேண்டாம்

க ரா said...

மனசு கனத்து போகிறது உங்களது இந்த இடுக்கையை படித்து முடிக்கும் போது.

Unknown said...

தமிழ்நதி..
என்ன சொல்ல? அழுகை முட்டுகிறது கோபம் கொப்பளிக்கிறது...காலம் இப்படியே இருக்காது தோழி...புரட்சியாளர்கள் மடிவதுண்டு ஆனால் பரட்சி என்றுமே மடிந்ததுயில்லை...

தமிழ்நதி said...

வந்து வாசித்து கருத்துரையிட்ட - (இடாமல் கண்கலங்கித் திரும்பியவர்களுக்கும்) அன்பு நண்பர்கள் ஆதிரை, சந்திரா, செந்தில், நேசமித்ரன், பத்மநாபன், ஜெரி ஈசானந்தன், இசை, கேபிள் சங்கர், ராஜ நடராஜன், ஜெயமோகன், சின்னப்பயல், பதி, குசும்பன், உண்மைத்தமிழன், முத்துலெட்சுமி, சூரியா, கே.பி.சுரேஷ், யாதவி, தங்கமணி பிரபு, பாலகிருஷ்ணன், கலகலப்பிரியா, தேனம்மை லக்ஷ்மண், கார்த்திகா வாசுதேவன், விந்தை மனிதன், முகிலன், ஜோதிஜி, செந்தில்வேலன், ஹேமா, அம்பேதன், கருணாகரசு, அருள், விஜயராஜ், இராமசாமி கண்ணன், தோழர் மோகன் அனைவருக்கும் நன்றி.

இந்தப் பதிவைத் தமது வலைத்தளத்தில் ஏற்றி வலிகடத்திய நண்பர்கள் ஈரோடு கதிர், குசும்பனுக்கும் நன்றி.

அனைத்து நம்பிக்கைகளும் அற்றுப்போன நிலையில், இதுநாள்வரை பற்றுக்கோடாக இருந்த எழுத்தின்பாலான ஈர்ப்பும் விட்டுப்போய்க்கொண்டிருக்கிறது.

இத்தனை உயிர்களை இழந்து மீண்டும் முன்னரிலும் கேவலமான கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டானபிறகு இந்த வாழ்வின் நிச்சயமற்ற, பொருளற்ற தன்மை குறித்து கேள்வி எழுகிறது. படித்து என்ன செய்யப்போகிறோம்... எழுதி என்ன கிழிக்கப்போகிறோம்... அப்புறம்... அப்புறம்... வாழ்ந்து என்ன...மயிரே போயிற்று என்ற மனநிலை வளர்ந்துகொண்டிருக்கிறது.

மேலும், எல்லாவற்றையும் சுயநல,அற்ப, காழ்ப்புணர்வுக் கண்களோடு உற்றுநோக்கி- மற்றவர்களின் உணர்வுகளை மலினப்படுத்தும், கொச்சைப்படுத்தும் சில மனிதவிலங்குகள் தரும் மனவுளைச்சலும் விலகுதலுக்கு ஒரு காரணமாயிருக்கலாம்.

ஆனால், சிதறிய என்னை மீட்டெடுக்கவே முயற்சிக்கிறேன். எழுதுவதும் அற்றுப்போயிற்றெனில் இல்லாதொழிவதன்றி வேறொன்றும் செய்வதற்கில்லை.

Sundar சுந்தர் said...

மொழி வழி உள்ள வலியுணர்த்தி விட்டீர்கள்.
இதற்க்கு முன், இவ்வளவு சுருக்கமாக இவ்வளவு பெரிய தாக்கத்தை தூண்டும், சொந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆழ்ந்த எழுத்தை படித்ததாக எனக்கு நினைவில்லை.

K.P.Suresh said...

அன்புள்ள தமிழ்நதி,

உங்களை போன்றவர்களின் எழுத்தில் தான் நாங்கள் ஈழத்தை புரிந்து கொள்கிறோம். உங்களின் எழுத்தில் நேர்மையும், ஜீவிதமும் இருக்கிறது. எழுதுவதை தொடருங்கள்....
சுயநலம், துரோகம், இழப்பு கண்டு விரக்தியுற்றுவிடாதீர்கள். காலம் வரும், மனிதம் வெல்லும்.
நாம் தோற்கமாட்டோம்.

அன்புடன்
கே.பி. சுரேஷ்

vasan said...

த‌மிழ்ந‌தி,
பாழ்ப‌ட்ட‌ யாழ்பாண‌ ப‌ய‌ண‌ம் பற்றிய‌ ப‌திவு
தாலியில‌ந்த‌ கைம்பெண், த‌ன் த‌ந்தையின் சாவுக்கு
ம‌ருத்துவ‌ச் செல‌வுக்காய் விற்றுவிட்ட‌ ப‌ர‌ம்ப‌ரைவீட்டின்,
ப‌க்க‌த்திலுள்ள வாட‌கை வீட்டிற்கு போவ‌தை விட‌ சோக‌மாய்.

பாவ‌ம் செய்த‌து ஆண்ட‌வ‌ன்தான்,
பூஜிக்க‌க்கூட‌ ஆளின்றி, இதில் போட்டிக்கு
புத்த‌ன் வேறு புதுசாய்.

balavasakan said...

பல இடங்களில் என் உணர்வுகளை பிரதி எடுத்தது போல் இருக்கிறது... ம்..ம்.. வலிக்கிறது...

ARV Loshan said...

இன்று தான் எனது யாழ் பயண உணர்வை சுருக்கமாகப் பதிவிட்டேன்..
ஆனால் உங்கள் பதிவு விரிவானது.. எனது அதே உணர்வுகளை அப்படியே இன்னும் உருக்கமாக சொல்கிறது..
கண்கள் கலங்கி விட்டன..
உங்கள் மனதில் எழுந்த அதே உணர்வுகள்..
இது 'எனது' யாழ்ப்பாணம் இல்லை.

இவ்வளவும் பார்த்த பிறகும் கடவுள் இருக்கு என நம்புகிறீர்களா?