9.15.2006

சாயல்

‘பனிபொழியும் இராக்கால வீதியாய்
வெறிச்சிட்டதேன் உள்ளம்…?’
இதில் எந்தச் சொல்லுக்கும்
நீ உரிமை கொண்டாடலாம்.

‘பின்னிராக்காலம்’எழுதித் தேய்ந்த சொல்
இன்னும் இருக்கிறது அதற்கு
எழுத்தில் வாழ்வு.

ஓடும் நதியில் நகரும் ஒற்றைப்பூவை
நானும் நீயும் பார்த்தோம்.

உன்னையும் என்னையும் உறுத்துகிறான்
எழுந்து வந்து பிச்சை கேட்க இயலாதவன்.

கண்ணாடி சொல்கிறது
‘நீ அம்மாபோல் இருக்கிறாய்’என.
எனது பிள்ளையில் எவரும் காணலாம்
எனது சாயலை

கவிதை மட்டும் சாயலற்றதாய் இருக்க
கண்டுபிடிக்கவேண்டும் புதிய மொழியை.

6 comments:

deep said...

நல்ல கவிதை :-)
க.வா: நான் என்ன நினைக்கிறேன் என்றால், "எழுத்து" என்கிற வடிவம் வந்த பிறகு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் எமக்கு முன்பிருந்தோர் பார்த்த அதே மரங்கள் நதிகள் - இருப்பினும் ஒவ் அக் காலங்களின் மொழியும் வேறுபட்டதாய், ஒவ்வொரு மனிதருடைய வெளிப்பாடும் மாறுபட்டதாய் - அமைந்திருக்கிறதே.. அதே நான்-குடும்பம்-பிள்ளை என்கிற "சுழல்" வாழ்க்கையை வாழ்ந்துகொண்டும், அனேகமாய் ஒரே கதைகளைத்தான் வைத்திருந்தாலும், எங்கள் சொல்லும் முறைமைகள் மாறுபட்டதாய் இருக்கிறதே..
//கவிதை மட்டும் சாயலற்றதாய் இருக்க
கண்டுபிடிக்கவேண்டும் புதிய மொழியை.//
இந்தப் "பழைய" வாழ்க்கையை சற்றேனும் புதிதாய்க் காணும் விழைபு எம்மிடம் இருக்கும்வரை, புதிய மொழியும் கண்டுபிடிக்கப்பட்டே வரும்!!

தமிழ்நதி said...

வாங்க தீபா…!

கருத்துக்கு நன்றி. சாயலற்றதாக இருக்க வேண்டுமென்ற அவா. நான் வாசித்தவற்றின் நிழல் உள்ளிருந்து படிந்திடுமோ என்னும் பயம். சொற்கள் ஒன்றெனினும் வெளிப்படுத்தும் விதத்தால் வேறுபடும் என்பது உண்மை. நீங்க கருத்துச் சொல்லாம….

தமிழ்நதி

கார்திக்வேலு said...

//ஓடும் நதியில் நகரும் ஒற்றைப்பூவை
நானும் நீயும் பார்த்தோம்.//

//உன்னையும் என்னையும் உறுத்துகிறான்
எழுந்து வந்து பிச்சை கேட்க இயலாதவன்.//

இன்னுமொரு நல்ல கவிதை.

தனேஸ் said...

அழகான கவிதை! வாசிக்கும் கவிதைகளின் தாக்கம் நிச்சயமாக இருக்கும் எனவே நானும் எண்ணுகின்றேன். இருப்பினும், சிந்தனை/கற்பனை என்று வரும்போது ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் ஒர் தீவு தான். அந்தத் தனித்துவம் கவிதைகளில் பேணப்படும் என்பதே என் கருத்தும்.

Ayyanar Viswanath said...

//கவிதை மட்டும் சாயலற்றதாய் இருக்க
கண்டுபிடிக்கவேண்டும் புதிய மொழியை.//

இந்த உறுத்தல் எல்லோருக்கும் பொதுவானது...:)

cheena (சீனா) said...

//கவிதை மட்டும் சாயலற்றதாய் இருக்க
கண்டுபிடிக்கவேண்டும் புதிய மொழியை.//

படிக்கும், கேட்கும் கவிதை வரிகளின் தாக்கம் இல்லாத கவிதைகள் புனைய முடியாது. சிந்தனை, எண்ணங்கள் வேறுபட்டாலும் சொற்கள் தாக்கத்தின் விளைவாக, மனதிற்கு பிடித்த சொல்லாக ஆன படியாலே, அச்சொல்லே பயன்படுத்தப்படும்.
கற்பனை என்பது மாறு பட்டாலும் வர்ணனை என்பதில் ஒற்றுமை இருக்கலாம். தவறில்லை.