7.14.2007

போலிப் பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு,

எனது கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணத்தால் முன்புபோல் தங்களது பக்கங்களுக்கு வந்து பின்னூட்டமிடுவதில்லை. தமிழ்மணம் பக்கமும் முன்போல வர நேரமிருப்பதில்லை. இந்தச் சந்தடி சாக்கில் யாரோ 'தமிழ்நதி'யாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, எனது பெயரில் பின்னூட்டங்கள் வருவதாக அறிகிறேன். சற்றுமுன் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அழைத்து 'என் மேல் ஏனிந்தக் கோபம்...?'என்று கேட்டபின்னரே விழித்துக்கொண்டேன். 'சீதாபாலம்'என்ற அவரது கவிதைக்கு எனது பெயரில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டம் என்னுடையதல்ல. அந்தப் பின்னூட்டத்தைத் தொடர்ந்து போனால் எனது பக்கத்தையே வந்தடைகிறது. இதனைச் செய்பவர் யாரென்று என்னால் ஊகிக்க முடிந்தாலும், நேரடியாகக் கடிந்துகொள்வதற்கில்லை. தன்னை 'எல்லாம் தெரிந்த' மேதாவியாகக் காட்டுவதற்காக ஏனையோரைப் பற்றிக் கதைகளைத் திரித்துப் பரப்பிவரும் அவரிடம் நாகரிகத்தை எப்படி எதிர்பார்க்க இயலும்? நரிகளிடம்கூட தந்திரத்தைப் பிரயோகிக்க முடியாத என் போன்றவர்கள் ஒதுங்கிக்கொள்வதே நன்று.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதன் முன் தயவுசெய்து என்னை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

தமிழ்நதி

18 comments:

சிவபாலன் said...

ம்ம்

உங்கள் பேரிலும் போலிப் பின்னூடங்களா? ம்ம்ம்

எங்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றி

Ayyanar Viswanath said...

தமிழ் அந்த பின்னூட்டம் எனக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது உங்களின் நடையை ஒத்திருந்தது.ஐ.பி அட்ரெஸ் எங்கிருந்து வந்திருக்கிறதென கண்டுபிடியுங்கள் இதுபோன்ற விஷமிகளை ஆரம்பத்திலியே கண்டறிவது அவசியம்

தென்றல் said...

/எனது கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணத்தால்/

வாழ்த்துக்கள், தமிழ்நதி!

/இதனைச் செய்பவர் யாரென்று என்னால் ஊகிக்க முடிந்தாலும், நேரடியாகக் கடிந்துகொள்வதற்கில்லை/

ம்ம்ம்... :(

மு. மயூரன் said...

வீணான சிக்கல்களில் மாட்டிவிடக்கூடும் தமிழ்நதி.

உங்கள் மின்னஞ்சல் கடவுச்சொல்லை (கூகிள் கணக்கு) மாற்றிக்கொள்ளுங்கள்.

இது முதல்கட்ட பாதுகாப்பு.
அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று தனியே உரையாடுகிறேன்.

தாக்குதல் உத்திகள் இருக்குமானால் எதிர்த்தாக்குதல் உத்திகளும் இருக்கத்தானே செய்யும்?

-/பெயரிலி. said...

தமிழ்நதி
அநாமதேயங்களாகப் பதில்களை எழுதிக்கொள்வது ஒன்று. ஆனால், மற்றவர்களின் பெயர்களிலே பதில்களை எழுதிக் குழப்பம் விளைவிப்பது இன்னொன்று.
இந்த இடங்களிலேதான் நண்பர்களிடையேனும் புரிதல் கெட்டுப்போகாமலிருக்க ஓரளவுக்கு இப்படியான விஷமத்தனம் செய்யும் ஆட்களைப் பிடித்துக்கொள்ளவேனும் IP முகவரிகளைக் கண்டுகொள்கின்ற வசதியைப் பொருத்திக்கொள்ளவேண்டும்.
இணையத்திலே நீங்கள் சொல்வதுபோலவே ஒருவரின் பெயரைத் திரித்துக் கெடுப்பது மிகவும் இலகு. அநாமதேயமாகத் தாக்கும்போது, ஓரளவுக்கு விலத்திப்போக வசதியிருக்கின்றது. ஆனால், அறியப்பட்டவர்களின் பெயர்களை வைத்துக்கொண்டு பதியப்படும்போது, அவை தரும் சிக்கல் மிக அதிகம். இயன்றவரை அதைத் தவிர்த்துக்கொள்ள முன்னேற்பாடுடன் இருக்கவேண்டும்.

Anonymous said...

ரசிகர்மன்றம் கொஞ்ச நாள் அப்படி இப்படின்னு கவனம் கலைஞ்ச நேரத்துல சிந்து பாடீட்டாய்ங்களா....

ம்ம்ம்ம்ம்....

சரி அதவுடுங்க...பொஸ்தகம் எப்ப கடைக்கு வருது...நல்ல சேதிய சீக்கிரம் சொல்லுங்க

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு, உங்கள் அக்கறை மற்றும் ஆதூரத்திற்கு நன்றி. நான் தேவையற்ற பிரச்சனைகளுக்குள் பிரவேசிப்பதில்லை. தனிப்பட்ட வாழ்வு தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. என்னை எதற்காக இந்த விளையாட்டுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எனக்கு இரண்டு பேர்களில் சந்தேகம். ஒருவர் சுகுணா திவாகரைப் பிடிக்காத நபர். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரில், அவருடைய எழுத்தில் மதிப்புண்டு. திவாகரைத் திட்டுவதற்காக எனது பெயரை அவர் பயன்படுத்துவது அறமாகாது (அவர் அதைச் செய்திருந்தால்)என்பதை இந்தப் பின்னூட்டத்தின் வழியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மற்றவர், பொய்களைப் போகுமிடங்களெல்லாம் காவித் திரிபவர்.பொய் பேசாதிருந்தால் தலை வெடித்துச் சிதறிவிடும். மற்றவர்களைப் பற்றிய கதைகளைத் திரித்து பரவவிடுவதன் மூலம் தனக்கு எல்லாம் தெரியும் என்றொரு மாயபிம்பத்தை நண்பர்களிடையே தோற்றுவிக்க முற்படுபவர். அவர் என்னைப் பற்றிச் சொன்ன ஒரு அபாண்டமான பொய்யை அறிந்து அதிர்ந்துபோனேன். அதன்பிறகு அவரோடு பேசுவதில்லை. அந்தக் கோபத்தில் இப்படியொரு விளையாட்டை ஆரம்பித்திருப்பார். இந்த இருவரன்றி வேறு எவர் மீதும் எனக்குச் சந்தேகமில்லை.

நாம் மனிதர்கள். அனுபவங்கள் மற்றும் புத்தகங்கள் வழியாக வாழ்வை உணர்ந்தவர்கள். ஓரளவுக்கு யாவற்றையும் உள்ளாய்ந்து பார்ப்பவர்கள். எதற்காக சகமனிதரைக் காயப்படுத்தும் வக்கிரமான செயலைச் செய்து திருப்தியடையவேண்டும்... தீங்கிழைக்காமலிருப்பது அத்தனை கடினமானதா என்ன... என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருந்தவேண்டுமென்பதே எனது அவா.

பங்காளி!எனது தொகுப்பு ஆகஸ்ட் 10இல் மதுரை புத்தகக் கண்காட்சியில் வைக்கப்படவிருக்கிறது.

Anonymous said...

மதுரை - தமிழ் - தமிழ்நதி - முதல் புத்தகம்....

ஆஹா....காம்பினேஷன் எல்லாம் நல்லா வொர்க்கவுட் ஆகுதே....

மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள்...

இளங்கோ-டிசே said...

நதி, இரமணி மற்றும் மயூரன் கூறிய விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஆகக்குறைந்தது எங்கிருந்து இவ்வாறான பின்னூட்டங்கள் வருகின்றன என்றாவது இவற்றைக்கொண்டு கண்டுபிடிக்கமுடியும். இப்படிப்பட்டவர்களோடு நாங்கள் எதிர் ஆட்டங்கள் ஆடத்தொடங்கினால், எமக்கு விருப்பமானதைச் செய்வது எல்லாம் தேங்கிப்போய்விடும்.
.....
உற்சாகத்துடன் தொகுப்பு வேலையிலும் எழுத்திலும் ஈடுபட வாழ்த்து!

சினேகிதி said...

கொஞ்சநாளுக்கு முதல் எனக்கும் இதான் நடந்திச்சு....ஆள் திடிரென்று காணாமல் போறீங்களே என்று யோசிச்சன் இதான் காரணமா..

வடுவூர் குமார் said...

அட! உங்களுக்குமா?
கொடுமை.

பாரதி தம்பி said...

உங்களுக்குமா இந்த போலி பஞ்சாயத்து..? அறிவித்த வரைக்கும் நல்லது. எச்சரிக்கையோடு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

கானா பிரபா said...

என்னக் கொடுமை சார் இது !!!!!

கொண்டோடி said...

கடவுச் சொல்லை மாற்றுவதால் இது தீரப்போவதில்லை. ஏனென்றால் இன்னொருவரின் கணக்கு மூலம் இவை இடப்படுவதில்லை. சுகுணா திவாகரின் வலைப்பதிவில் அனாமதேயமாகப் பின்னூட்டமிடும் வசதியுள்ளது. அந்த வசதியுள்ள எந்த வலைப்பதிவிலும் யார் வேண்டுமானாலும் யாருடைய பெயரில் வேண்டுமானாலும் (அதைச் சொடுக்கினால் எங்கே போகவேண்டுமோ அங்கே போகக் கூடியவாறு) பின்னூட்டமிடலாம்.

அனாமதேயப் பின்னூட்ட வசதிகள் முடக்கப்பட்டிருக்கும் ஒரு வலைப்பதிவில் இப்படியான போலிப் பின்னூட்டங்கள் வந்தால்தான் கடவுச்சொல் மாற்றுவதுகுறித்து யோசிக்க வேண்டிய தேவையுள்ளது.

பொன்ஸ்~~Poorna said...

கொஞ்சம் கவனமாகவே இருங்கள் நதி... என் பக்கத்துக்கு வந்தால் ஐப்பி பார்த்து எடுத்துக் கொடுக்கிறேன்.. (WordPress இல் இது ஒரு வசதி.. )

புத்தகம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் ;)

தமிழ்நதி said...

அன்பு நண்பர்கள் சிவபாலன்,அய்யனார்,தென்றல்,மயூரன்,பெயரிலி,பங்காளி,டி.சே.தமிழன்,சினேகிதி,வடுவூர் குமார்,கானா பிரபா,கொண்டோடி,பொன்ஸ் அனைவருக்கும் நன்றி. இணையத்தில் எழுத வருவதற்கு அசாத்திய நெஞ்சுரம் இருக்க வேண்டும் என்று சில சமயங்களில் நினைத்துக்கொள்வதுண்டு. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி எவர் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரியிறைத்துவிடக்கூடிய நெகிழ்தன்மை அதற்கிருப்பது எரிச்சலையும் ஊட்டுகிறது. ஆனால்,இழப்பதன் மூலமே பெற்றுக்கொள்கிறோம் என்ற சமன்பாட்டிற்கிணங்க சில சமரசங்களைச் செய்யவே வேண்டியிருக்கிறது. நண்பர்கள் நீங்கள் பரிந்துரைத்த முறைகளில் இதனைத் தடுக்க முடியுமா என்று பார்க்கிறேன். இக்கட்டு என்று வந்தபோது ஆலோசனைகளுடனும் அன்புகனிந்தும் வந்த உங்கள் பின்னூட்டங்கள்,தனிமடல்களுக்கு உளமார்ந்த நன்றி.

Anonymous said...

கடைசியில உங்க பேர்லயுமா??? இதை இப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்க. ஓரளவு உங்களுக்கு யாருன்னு தெரியும் போது IP Tracker வைத்து கண்டுபிடித்து அவரது மட்டமான உணர்வுகளை எல்லோருக்கும் தெரியச்செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

இல்லையேல் இது போன்றவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இனி உங்கள் முடிவு.

இவனுங்க எல்லாம் சில்லறைப்பயலுங்க. ஊதி எரிஞ்சுட்டு புத்தக வேலைகளைப் பாருங்க.

ரவி said...

புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்...!!!

தொடர்ந்து உயரம் போங்கள்...இது போன்ற சில்லறைகளை அலட்சியப்படுத்துங்கள்...