9.19.2007

மஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்


நூலாசிரியர்: யூமா வாசுகி

காதல் என்பது வலியும் சுகமும் இணைந்ததொரு அற்புத உணர்வென்றே இதுவரை வாசித்த நூல்களும் சந்தித்த மனிதர்களும் பேசக் கேட்டிருக்கிறோம். அது ஒருதலையாக அமையுமிடத்தில் குரூரமானதும், ஒரு மனிதனை மிகக்கொடுமையான பிறழ்நிலைக்கு இட்டுச்செல்லத் தக்க சக்தி வாய்ந்ததும்கூட என்ற அயர்வு ‘மஞ்சள் வெயிலை’ வாசித்துமுடித்து மூடிவைத்தபோது ஏற்பட்டது. மூடிவைத்தபிறகும் வலியின் வாசல்கள் பக்கங்களாக விரிகின்றன.

இந்நாவலைப்பற்றி அறிந்திராத சில வாசகர்களால் இப்பதிவின் உட்செல்லமுடியாதிருக்கும் என்பதனால் கதையைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

தினச்செய்தி என்ற பத்திரிகையில் ஓவியங்கள் வரைபவனாகப் பணியாற்றும் கதிரவன் என்பவனுக்கு அதே அலுவலகத்தின் மற்றோர் பிரிவில் வேலை பார்க்கும் ஜீவிதா என்ற அழகிய பெண் மீது காதல் மேலிடுகிறது. காதலென்றால்… அவள் காலடி மண்ணைக் கண்ணில் ஒற்றிச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்ளத்தக்கதான, அவனால் மகோன்னதம் எனக் போற்றப்படும் காதல். அவளும் அவனைக் காதலிப்பது போன்றே ஆரம்பத்தில் தோன்றுகிறது. சின்னச் சின்ன உரையாடல்கள், கண்களுக்குள் பார்த்துக்கொள்வது இவ்வளவிற்குமேல் போகவில்லை. அவளுடைய ஒரு பார்வைக்கு ஓராயிரம் பொருள்பொதிந்து பேதலித்துப்போய்த் திரிகிறான் கதிரவன். காதலின் சன்னதத்தைத் தாளமுடியாத கதிரவன் ஒருநாள் தொலைபேசியில் அவளை அழைத்து அனைத்தையும் கொட்டிவிடுகிறான். அவளோ தான் அவனைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள். உலகத்தின் துயரங்கள் அனைத்தும் தன்மீது கொட்டப்பட்டதாக உணர்கிறான் அவன். வாழ்க்கை முழுவதும் அவளது ஞாபகத்தைக் கொண்டலைவேன் என முடிகிறது கதை. அல்லது கதைபோல புனையப்பட்ட யாரோ ஒருவருடைய வாழ்க்கை.

‘மஞ்சள் வெயிலை’ இவ்வளவு எளிதாக சில வரிகளுக்குள் அடக்கும் எவருக்கும் குற்றவுணர்வே மிகும். ஏனெனில் கதிரவன் என்ற அவனுடைய துயரம், ஆற்றாமை, அச்சம், பதட்டம், ஆதங்கம், காதல், கழிவிரக்கம், சுயபச்சாத்தாபம், குமுறல், கொந்தளிப்பு, தாபம், தனிமை, ஆராதனை, அயர்ச்சி, நிராதரவான தன்மை… என மாறி மாறித் தோன்றும் முகமானது புத்தகத்தை வாசிக்கும் எவரையும் அலைக்கழிக்கும் தன்மையது.

ஜீவிதாவை விளித்து கதிரவன் எழுதும் நெடுங்கடிதமாக விரிகிறது மஞ்சள் வெயில். இந்நாவல் தன்னிலையில் எழுதப்பட்டிருப்பதானது வாசிக்கும் மனங்களுக்கு கூடுதல் நெருக்கத்தை அளிக்கிறது. தவிர, கடிதவடிவில் எழுதப்படும் நாவல்கள் அடுத்தவரின் அந்தரங்கங்களுள் இயல்பாக நழுவிச்செல்வது போன்றதொரு இரகசியக் குறுகுறுப்பை அளிக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 133 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இதைக் குறுநாவல் என்றும் சொல்லலாம். நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கவித்துவச் சரடொன்று ஓடிக்கொண்டேயிருக்கக் காணலாம்.

“நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ரோஜாவின் இதழ் முகட்டில் வந்திருக்கிற பனித்துளி அசைவில் சரிந்து உதிர்ந்து விடாதபடி மெதுநடையில் உங்களிடம் சேர்க்கிற ஆழ்ந்த கவனத்துடன் - மூளையில் அதிநுட்ப அறுவைச் சிகிச்சை நடத்துகிற மருத்துவனின் சிரத்தையுடன் - தொலைவான ஓரிடத்திலிருந்து கலைந்து கலைந்து வரும் அழைப்புச் சமிக்ஞையைத் தவிப்புடன் கிரகிக்கிற குருடனின் தீவிரபாவத்துடனும் இதைச் சொல்கிறேன். சொல்லுகையில், இந்த வார்த்தைகள் ஆணிகளாக என் இதயத்தில் இறங்குகிற வேதனையோடு… ‘உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது’”

மஞ்சள் வெயிலின் ஆசிரியர் யூமா வாசுகி ஒரு கவிஞராகவும் இருப்பதனாலோ என்னவோ நாவலின் சில இடங்கள் கவிதைகளைக் காட்டிலும் அழகியலோடு அமைந்திருக்கின்றன.‘நீள விழிகள்’-‘கனிந்து சிவந்த உதடுகள்’ என்ற வர்ணனைகளையே வாசித்துச் சலிப்படைந்திருக்கும் வாசகர்களுக்கு கீழ்க்காணும் வார்த்தைகள் வியப்பளிக்கலாம்.
பச்சைக்கிளிகளை அடைத்த கூண்டுகளான உங்கள் முலைகளிலிருந்து வரும் இடைவிடாத கொஞ்சல் பேச்சரவம் கிரகித்தேன் நான் மட்டும். குடம் ததும்புவதைப்போல உங்களைச் சுற்றிக் குளிர்தெறிக்கிறது. எப்போதும் கூட்டின் இடுக்குகளிலிருந்து பறவைக் குஞ்சுகள் அலகு நீட்டிப் பார்க்கும் சுபாவத்தோடு மணிக்கட்டிலிருந்து பிரிந்த விரல்கள் உங்கள் தொடைமீது கிடந்தன………..”

மஞ்சள் வெயிலை வாசித்த பிற்பாடு ‘காதலின் இருண்ட பக்கங்கள் என்னை அச்சுறுத்துகின்றன’என்றொரு நண்பர் சொன்னார். அது உண்மையிலும் உண்மை. சில நாட்களாக ஜீவிதா அலுவலகத்திற்கு வரவில்லை; காரணமும் தெரியவில்லை. புறக்கணிப்பின் வேதனையோடு ஜீவிதாவிற்காகக் காத்திருக்கும் கதிரவன், காதலின் பாடுகள் தாளாமல் தன்னைச் சுயவதை செய்துகொள்ளுமிடத்தை வாசித்தபோது நண்பர் சொன்னது சரியெனவே உணர்ந்தேன்.

“சிகரெட்டின் தீக்கங்கை எனது இடதுகையில் குத்தி அணைத்தேன். திடுக்கிடும் கடலைக் கண்டு உரக்க நகைக்கிறேன். அழுத்தும் தீக்கங்கில் தசை கரிகிறது. போதையைத் தகர்க்கும் எரிச்சல். நெருப்பு தசைக்குள் ஊடுருவுகிறது. கைவிரித்து அழைக்கிறது பேரலை. மீண்டும் பற்றவைக்கப்பட்டது சிகரெட். நாலைந்து இழுப்புகளுக்குப் பிறகு இடக்கையில் மற்றுமொரு சூடு. கடல் பதறுகிறது. அவசர அவசரமாக வேகத்தை அதிகப்படுத்தி என் கால்களைச் சமீபிக்கிறது. பொறுப்பதற்கியலாத வலி, ஜீவிதா அருவருப்படையாதீர்கள், முகம் சுளிக்காதீர்கள். அடுத்தடுத்துப் புகைத்த பத்து சிகரெட்டுகளையும் எனது இடக்கரத்தில் குத்தி அணைத்தேன். தலைக்குள் பிசைந்தது மயக்கம்”

தன்னை வதை செய்யும் இந்தக் காதல் உண்மையில் அச்சமூட்டுகிறது. ‘கடவுளே… இது என்ன?’என்று பதறவைக்கிறது. பரிதாபத்திற்குப் பதிலாக கோபமற்ற கோபத்தையும் கிளறுகிறது. கடற்கரையில் வைத்து சிகரெட்டுகளால் தன்னைச் சுட்டெரித்தது போதாதென்று, அறைக்குள் மீண்டும் ஆரம்பமாகிறது காதலின் களரி. தாண்டவம்.

“கண்ணாடிக்கு முன் நின்று பென்சில் சீவும் கத்தியால் என் முகத்தில் கோடு கிழிக்கிறேன். நெற்றிக்கோட்டில் ரத்தம் நுண்புள்ளிகளாக முகிழ்ந்து துளிகளாகக் கனக்கிறது. இரு கன்னங்களில் - தாடையில் - நெற்றியில் ஆழ உழுகிறது கத்தி. புதுமணமுடைய ரத்தம் என் விரல்களில் பட்டுப் பிசுபிசுக்கிறது. ஜீவிதா! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்….? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்….?”

உண்மையில் வாசிப்பவனின் மேல் இரத்தத்தை விசிறியடிக்கும் எழுத்துத்தான் அது. சுயவதையைக் காணச் சகியாமல் தப்பித்து ஓடிவிடும் அச்சமும், அடுத்து நிகழவிருப்பதன் மீதான ஆர்வமும் இணைந்தே வாசிப்பை நடத்திச்செல்கின்றன.

ஒரே வாசிப்பில் முடித்துவிடக்கூடிய நாவல் என்பதற்கு அதன் குறைந்தளவிலான பக்கங்கள் மட்டும் காரணமில்லை. நிராகரிக்கப்படுவேனோ என்ற அச்சமும் இயல்பாகவே கூச்சமும் நிறையப்பெற்ற கதிரவன், ஏறக்குறைய நாவலின் கடைசிப் பகுதியிலேதான் தனது காதலை வெளிப்படையாகச் சொல்கிறான். காதலை வெளிப்படுத்தும் தருணத்தை நோக்கி பரபரப்புடன், நெஞ்சு பதைக்க வாசகர்களை நகர்த்திச் செல்லும் உத்தியை ஆசிரியர் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

“அப்படியா நான் அப்படிப்பட்ட நினைப்பில் எல்லாம் உங்களைப் பார்க்கவில்லையே…”என ஜீவிதா கதிரவனின் காதலை நிராகரிக்கிறாள். அதீதமான துக்கம் மூடுகிறபோது எங்கிருந்தோ வந்து படிந்துவிடுகிற பொய்யான நிதானத்தையும் அமைதியையும் வாழ்வின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாமும் உணர்ந்திருப்போம். சலனமற்ற கடல்போலாகிவிடுகிறது மனம். ஆனால், உள்ளே அசைவொன்றுமில்லையா என்ன?

“மறைந்துவிட்டன போலிருந்தன புலன்கள். பிரிக்கப்படாத ஒரு கடித உறையாக என் முன்னே நான் கிடந்தேன். வேற்றுலகிலிருந்து வந்து வீழ்ந்த பொருளைப் பார்வையிடுவதாக, புரியாமல் தெரியாமல் உற்றுக் கவனிக்க முற்பட்டேன் என்னை. என் மோனத்தின் மறைவில் அபாயகரமான விபரீதமான அம்சம் நிலவியதாகப்பட்டது. மனம் துக்கித்துப் புலம்பவில்லை. அரற்றவில்லை. ஒரு துளிக்கண்ணீரில்லை.”

இந்த இடத்தில் வாசிப்பு மனமோ சோர்ந்துபோய் நின்றுவிடுகிறது. ‘சரி அவ்வளவுதான். எல்லாம் ஆயிற்று’என்று நாம் நினைக்கும்போதும் கதிரவன் தளர்வதாயில்லை. கடைசி நம்பிக்கையாக அவளை நினைத்துத் தான் எழுதிய கவிதைகளை இரவிரவாகப் படியெடுத்துக் கொண்டுபோய் அலுவலக வாசலில் காத்திருக்கிறான்.

“அனாதி காலந்தொட்டுக் காத்திருக்கிறேன். மாயம் போல மந்திரம் போல உங்கள் பெயர் கிடந்து பேதலிக்கிறது என்னுள்ளே. எனக்கு நீங்கள் பங்கிட்டுக் கொடுத்தது பெரிய பாகம். சுமக்க இயலவில்லை. மோகாவேசம் மூண்டெரிகிறது. நீங்கள் என் நடனப்பண். உங்கள் குரலின் மென்தூவிகள் திசைகளெங்கிலும் மிதக்கின்றன. அனந்த காதலின் கிளர்ச்சி நீங்கள். அழகு திகழும் மினுமினுப்பான என் மரணம்”

அவள் வரவில்லை! அவனை வரச்சொல்லிவிட்டுக் காத்திருக்க வைத்த அன்றைக்குத்தான் நல்ல வேலையொன்றில் சேர்வதற்காக அவள் அமெரிக்காவுக்குக் கிளம்பிப்போயிருக்கிறாள். ஒரு பூத்தூவலென அவன்மீது புன்னகையைச் சிந்தி நகர்ந்த ஜீவிதாவிற்கும் ஆரம்பத்தில் கதிரவன் மீது காதல் இருந்ததென்றும் வசதியான வாழ்வினைக் கருதி அவள் அவனைவிட்டு நீங்கிவிட்டதாகவும் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கதிரவனின் வார்த்தைகளில் கோபமில்லை. வாசிக்கிறவர்கள்தான் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

கவிதைகளுட் சில உரைநடையாயிருக்கின்றன. இந்நாவலின் உரைநடையோ கவிதையாயிருக்கிறது. யூமா வாசுகியின் விரல்கள் வழியாக துயரமே எழுதிச்செல்வது போலிருக்கிறது. தான் உணர்ந்த துயரை மற்றவருள் கடத்துதல் இவர் போல எல்லோருக்கும் சாத்தியமல்ல.

இப்போதெல்லாம் வாசிப்பிற்கு இணையாக தனது முன்தீர்மானங்களையொட்டிய துணைவாசிப்பொன்றை மனம் நிகழ்த்திக்கொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், மஞ்சள் வெயிலின் கவித்துவ வரிகளில் அந்தக் குரல் தீனமாகி வலுவிழந்து எங்கோ ஆழத்தில் சென்றொளிந்துகொண்டது.

பல இடங்களில் இது நாவல் என்பது மறந்துபோகிறது. பாடகன் கான் முகம்மது, இரவுக் காவலர் பாலகிருஷ்ணன், அவரது நாய்க்குட்டி மணி, சப் எடிட்டர் சந்திரன் இவர்களெல்லோரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என நம்பமறுக்கிறது மனம். அதிலும் ‘இந்நாவலை எனது நண்பர் இரவுக்காவலராக இருந்த திரு.வி.கே. பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பிக்கிறேன்’என்பதை வாசித்தபோது… ‘அந்த நெற்றிக் கீறல்கள் இன்னமும் இருக்குமோ-அந்தப் பெண் இந்த நாவலை வாசித்திருப்பாளா…?’என்ற ரீதியில் சிந்திக்கவாரம்பித்துவிட்டது வம்பிற்கு அலையும் மனம். நனவு, கனவு,புனைவு மூன்றும் கலந்ததே எழுத்து. எனினும் இது உண்மையெனில், திரண்ட கண்ணீர் உண்மையிலும் உண்மை.

காதலிக்கப்பட்டவள் நிராகரித்துவிட்டபோதிலும் காதல் தன்னை நிராகரிக்கவில்லை என கதிரவன் நம்புவதாக முடிந்திருக்கிறது மஞ்சள் வெயில். ஈற்றில், ஜீவிதா என்ற அந்தப் பெண்ணைச் சந்தித்ததொன்றே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை உயிர்ப்போடு வைத்திருக்கப் போதுமெனச் சொல்கிறான் கதிரவன்.

“நான் உங்களைப் பார்த்தேன். இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகாமந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன்சிந்தும் கொலுசுகளுடன் நடந்துபோகும் உங்களைப் பார்த்தேன். கற்பனையில்லை. கனவுகண்டு உளறவில்லை. சர்வசத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப் பார்த்தேன். எப்போதும் எல்லா சந்தோசங்களையும் மறைத்துவைத்து என்னைக் கண்டுகொள்ளாமல் போகும் வாழ்க்கையைப் பிடித்து நிறுத்தி உங்களின் காட்சியை புலன் விழிப்போடு பெற்றுக்கொண்டேன்”

விரும்பிய துணை கிடைக்காமற் போகிறபோது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடாக இந்த வரிகளைப் பார்க்கத் தோன்றவில்லை. காதல்… 'காதலன்றி ஏதுமற்றவனாக' தளர்ந்து நடக்கும் அவன் ஒருபோதும் பொய்யாக இருக்கமுடியாது.

மனிதர்கள் முரண்களாலானவர்கள் என்பதை மீளவும் மீளவும் ஞாபகம் கொள்கிறேன். காதல் என்பது மிகப்பெரிய அபத்தமென்று சொன்ன மனந்தான் காதலைக் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் ‘காடு’நாவலுக்குப் பிறகு, மன அதிர்வையும் அந்தரத்தையும் தந்த நாவல் என்றால் அது மஞ்சள் வெயில்தான். வாசித்து நெடுநாட்களாகிவிட்டபோதிலும் தனித்திருக்கும் நேரங்களிலெல்லாம் படர்ந்துகொண்டேயிருக்கிறது ‘மஞ்சள் வெயிலின்’ஒளி.

10 comments:

பிச்சைப்பாத்திரம் said...

http://tamilnathy.blogspot.com/2007/09/blog-post_19.html

அறிமுகத்திற்கு நன்றி.

யூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல், என்னுடைய பிடித்தமான படைப்புகளின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது. அந்த நாவலை தொடர்ந்து படிக்கவியலாமல் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிறுத்தி விட்டு மறுநாள் தொடர்ந்தேன். 'மஞ்சள் வெயிலை" படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. தொடருங்கள்.

பங்காளி... said...

கொடுத்து வைத்தவர் நீங்கள்...

இப்படி அனுபவித்து படித்து சிலாகிக்க நேரமிருக்கிற அதிர்ஷ்டசாலி....

அனுபவியுங்கள்....எங்களுக்கும் கொஞ்சம் பிட்டு வையுங்கள்...அவ்வப்போது....

இதை எழுதும் கணத்தில் எனது மற்றபிற சன்னல்களில் பங்குச்சந்தை விவரங்களே விரவியிருக்கின்றன.

Ayyanar Viswanath said...

தமிழ்நதி

சுரேஷ் சொல்லியிருப்பது போல் இரத்த உறவு மிக மிக செண்டி யான நாவல் :)
உயிர்த்திருத்தலும் முடிந்தால் படித்து பாருங்கள்.உயிரை உருக்கிப்போடும் யூமாவின் எழுத்து அலாதியானது.

அறிவுபூர்வமாய்/நவீனமாய் யோசித்தால் நத்திங்க் பட் எ செண்டி ரைட்டர்.. ஆனாலும் யூமாவின் எழுத்திலிருக்கும் வசீகரமும் வலியும் எளிதில் கடந்து விட முடியாதது.

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

naan enna solluvathu endu
thariyavelai ethai vasitha penar
ennal pasa mudiyavelai

மிதக்கும்வெளி said...

fine template

மஞ்சூர் ராசா said...

இந்த நாவலை படித்து சில மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் அடிக்கடி நினைவில் வந்து கனக்கிறது என்பது உண்மை தான். உங்களின் விவரமான கனமான விமர்சனமும் கச்சிதமாக இருக்கிறது.

கதை நடக்கும் இடங்கள், நாயகன் தங்கும் அறை என எல்லாமே நேரடி அனுபவத்தை தருகின்றன.

சென்னையில் பிரம்மச்சாரிகளாக வாழ்க்கை நடத்தும் பலரின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக நடந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நண்பர் யூமாவாசுகிக்கும், அருமையான விமர்சனம் எழுதிய உங்களுக்கும் நன்றி.

Vediyappan M said...

தன் உள்ளத்து உணர்வை அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள். அருமையான விமர்சனம். நன்றி!

Garunyan Konfuzius said...

மிக அழகான வாசிப்பு அனுபவப் பதிவு. வாசிப்பவர்களுக்கு அந்த நாவலைப்படிக்கத் தூண்டும்படி அமைந்திருப்பது சிறப்பு. காரணம் என்னவாயிருந்தாலும் ஜைனமதத்தவர்களைப்போல ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வது எனக்கு எப்போதும் உவப்பதில்லை. ஆனால் யூமாவின் மொழிவளம் எனக்கு எப்போதும் உவப்பானதே!

Garunyan Konfuzius said...

மிக அழகான வாசிப்பு அனுபவப் பதிவு. வாசிப்பவர்களுக்கு அந்த நாவலைப்படிக்கத் தூண்டும்படி அமைந்திருப்பது சிறப்பு. காரணம் என்னவாயிருந்தாலும் ஜைனமதத்தவர்களைப்போல ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வது எனக்கு எப்போதும் உவப்பதில்லை. ஆனால் யூமாவின் மொழிவளம் எனக்கு எப்போதும் உவப்பானதே!

Garunyan Konfuzius said...

மிக அழகான வாசிப்பு அனுபவப் பதிவு. வாசிப்பவர்களுக்கு அந்த நாவலைப்படிக்கத் தூண்டும்படி அமைந்திருப்பது சிறப்பு. காரணம் என்னவாயிருந்தாலும் ஜைனமதத்தவர்களைப்போல ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வது எனக்கு எப்போதும் உவப்பதில்லை. ஆனால் யூமாவின் மொழிவளம் எனக்கு எப்போதும் உவப்பானதே!