3.03.2008

சில மனிதர்கள்… சில ஞாபகங்கள்… - ஒன்று

அன்புள்ள உங்களுக்கு,

எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேறெங்கோ சென்றுகொண்டிருப்பதான ஓருணர்வை அண்மைய வாசிப்புகளின்போது பெற்றுக்கொள்ள முடிகிறது. அது புனைவும் உண்மையும் கலந்து நெய்யப்பட்ட புதுவடிவாய் அழகுருக் காட்டுகிறது. முற்றிலும் கற்பனித்து எழுதுவதென்பது சுயவதையே! வார்த்தைகளின் பின்னால் கையேந்தியபடி நீண்டகாலத்திற்குத் திரியவியலாது. மிகைபேச்சுத் தவிர்த்து புத்தகங்களோடு மட்டுந்தான் தொடர்பாடல் என்றானபிறகு, இறந்தகாலத்தின் நலிந்த குரல் அடியாழத்திலிருந்து பேசத்தொடங்கியுள்ளது. காலச்சகதியினுள் புதைந்து போவதற்கிடையில், மொழி முற்றிலுமாய் கைவிட்டுவிடுவதற்கிடையில் சந்தித்த மனிதர்களிற் சிலரையேனும் பதிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டுமென்றொரு அவாவினால் இதனை எழுதத் தொடங்குகிறேன். ‘சாதாரணத்தில் அசாதாரணத்தைக் கண்டுணர்ந்து காட்டுவதே எழுத்து’என்று அண்மையில் ஒருவர் சொன்னார். என்னுள் தாக்கம் விளைவித்த சம்பவங்கள், மனிதர்கள், ஊர்கள்… எதைக் குறித்தெனினும் பத்தியாக எழுதலாமென்றிருக்கிறேன். யார் கண்டது…? நீங்களும் இதில் வரக்கூடும்.

கனவின் நினைவூட்டுகை – திலக்

அந்தக் கனவுதான் விழிப்பை மீட்டிருக்க வேண்டும். மனசுக்குள் அருவமான இருள்புகை அலைந்துகொண்டிருக்க படுக்கையிற் கிடந்தேன். கனவைக் கண்ட சமயத்தில் உணர்ந்த வலி அந்நாளின் முடிவுவரை நீள்வதை பல தடவைகள் அனுபவித்ததுண்டு. நாமே கலந்துகொள்ளும் நிகழ்விலும் பார்வையாளராக இருப்பது கனவுகளிலேயே சாத்தியம். இந்தக் கனவில் நான் வாசித்த வரிகளை திலக் எழுதியிருந்தான். (எத்தனை கனவு எழுதுகிறேன்…)திலக் ஒரு சிங்களப்பெடியன். ஆனால் தமிழில்தான் எழுதியிருந்தான். கனவுகள், காண்பவர் மொழியிலானவையோ…?

“அவள் என் கண்களைப் பார்த்தாள். பின் நடுங்கும் கைகளால் அருகிலிருந்த தோழியைப் பற்றிக்கொண்டாள். உதடுகளில் சொற்கள் துடித்தன. அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. நான் என்றென்றைக்குமாக விடைபெற்று அந்த மண்ணொழுங்கையில் இறங்கி நடந்தேன். தெருவில் மனிதர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். உலகம் அன்று ஒலிகளற்றுக் கிடந்தது. ஒருவேளை இந்த உலகம்… நான் இப்படி இறந்தவனைப்போல நடந்துகொண்டிருப்பது எல்லாமே பொய்யோ…அபிரா! நீ இப்போது எங்கே இருக்கிறாய்?”

கனவில் எழுதி கனவிலேயே அழிந்த கவிதைகளைப் போலல்லாமல், சஞ்சிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் வரிக்கு வரி நினைவில் நின்றது. முன்பு வாசிக்கக் கிடைத்த மல்லிகையின் வடிவினையொத்த சஞ்சிகை. திலக்கை நான் சந்தித்தே பல்லாண்டுகளாகிவிட்டன. திடீரென எங்கிருந்து அதிரத்தொடங்குகிறது அவன் குரல்?

எங்கள் அறைத்தோழி அபிராமியை திலக் காதலித்தான் என்றுதான் கதைசொல்லத் தொடங்கவேண்டும். ‘அபிரா’ என்றே அவளை அழைத்தான். அதிலொரு சிங்களச்சாயல் இருந்ததாக நாங்கள் கிண்டல் செய்தோம். எண்பதுகளின் நடுப்பகுதியில், தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையில் பயிலவென வந்திருந்தான். உயரமாக, நிறமாக, எவரோடும் நட்பு விளையும் புன்னகையோடு அவன் இருந்தான். ஈர்க்கத்தகு தோற்றமுடைய விளையாட்டு வீரனைப் போலிருந்த அவனை நாங்கள் - அபிராமியும் நானும் - ஓடும் புகையிரதத்தில் நடனமாடிக்கொண்டிருந்தபோது முதன்முதலில் பார்த்தோம். மகாப்பொல புலமைப்பரிசில் (பல்கலைக்கழக நுழைமுகத் தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை.)கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாங்கள் கொழும்பிற்குப் பயணித்துக்கொண்டிருந்தோம். புகையிரதத்தின் நான்கு பெட்டிகளை பல்கலைக்கழக மாணவர்களே நிறைத்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் ரயிலேறும்போது எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்திருந்ததாகத்தான் ஞாபகம். பிறகு ஓரிருவரைத் தவிர மற்றோரெல்லாம் எழுந்து நடமாடவும் நடனமாடவும் ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டை விட்டு வெளியே ஓரிரவு தங்குதலே பாவமெனப் பயிற்றுவிக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த எங்களைப் போன்ற பெண்களுக்கு பல்கலைக்கழக வாழ்வு புதிய கதவுகளைத் திறந்துவிட்டது. அபிராமி அறைத்தோழிகளுடன் கூட அதிகம் பேசாதவள். சின்ன உருவமாக ‘நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்’என்று சொன்னால், கேட்பவர்கள் ஒரு கேள்வியுமற்று நம்பக்கூடியவிதமாகத் தோற்றமளிப்பாள். கண்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவள் சுமாரான அழகுதான்.

திலக் அபிராமியை எழுந்து நடனமாட அழைத்தான். அவள் இருக்கையின் மூலைக்குள் இன்னும் அதிகமாகத் தன்னைச் சொருகிக்கொண்டாள். ‘கம் ஆன்…’என்ற அவனது குரல் புகையிரதத்தின் இரைச்சலை மீறி கால்மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் களைத்துப்போனான். பிறகு ஆடுவதை நிறுத்திவிட்டு எங்களெதிரில் வந்து அமர்ந்தான். அவன் என்னைப் பாடும்படி கேட்டான். அவனது ‘தமிழில்’ அஃறிணைகள் உயர்திணைகளாகவும் உயர்திணைகள் அஃறிணைகளாகவும் பெயர்ந்து திரிந்தன. நான் வழக்கமான பதிலை – நான் பாடினால் நீ புகைவண்டியிலிருந்து குதித்து ஓடிவிடுவாய்-என்பதான பதிலைச் சொன்னேன். அபிராமியைப் பாடும்படி வற்புறுத்தினான். அவள் தன் பெரிய கண்களால் பரிதாபமாக என்னைப் பார்த்தாள்.

“அவளை விட்டுவிடுங்கள். அவளுக்குப் பாடத்தெரியாது”

நாங்களே எதிர்பாராததொரு தருணத்தில் அவன் பாடவாரம்பித்தான். அப்போது பிரபலமாயிருந்த ஹிந்திப் பாடலொன்றைப் பாடவாரம்பித்தான். ‘குர்பானி… குர்பானி’என்று அது முடிந்ததாக நினைவு. அவனோ ‘அபிராமி… அபிராமி’ என்று அதை மாற்றிப் பாடினான். எங்களுரிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த பெடியங்களின் முகத்தில் இலேசான எரிச்சலைக் கவனிக்க முடிந்தது. அபிராமி தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள். அவள் சம்மதித்தால் அன்றைக்கே கையில் மோதிரம் மாட்டித் தனது ஊருக்கு அழைத்துப்போய் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசியும் பெற்று விடுவான் போலிருந்தான். அவன் கண்களில் மின்னிய அந்த வேகமும் பரபரப்பும் பரிதவிப்பும் பயமளிப்பதாக இருந்தன.

“அவருக்கு யாழ்ப்பாணப் பெட்டை கேக்குதாக்கும்”என்றொரு குரல் பின்னிருக்கையொன்றிலிருந்து எழுந்தது.

“டேய்…!நாங்களெல்லாம் வாத்தியார்தானே… அவன் டொக்டரெல்லே”எதிர்ப்பாட்டாய் மற்றோர் குரல்.

புகையிரதம் சடசடத்து விரைந்தது. காடுகள், மலைகள், நீரோடைகளை நிலவு தழுவிக்கிடந்தது. திலக் எழுந்து தன்னிருக்கைக்குத் திரும்பியபின் அபிராமி என் தோளில் தலைசாய்த்து உறங்கிப்போனாள்.
---

கொழும்பிலிருந்து திரும்பி வந்தபிறகு எல்லா மாலைப்பொழுதும் திலக் எங்கள் அறைக்கு தவறாது வந்தான். தட்டுத் தடுமாறித் தமிழ் பேசினான். அவன் வரவு ஆரம்பத்தில் சங்கடமளித்தது. போகப் போக நாங்களே அவனை எதிர்பார்க்கவாரம்பித்தோம். குறிப்பாக அபிராமியின் கண்கள் அவனைக் கண்டதும் ஒளிர்வதை அவதானித்தேன். அவனது கொச்சைத் தமிழை நாங்கள் கிண்டலடித்து அதேபோல பேசிக்காட்டுவோம். அவனோ சளைக்காமல் அந்தத் தமிழின் உச்சபட்ச சாத்தியங்களைக்கொண்டு அபிராமியின் காதலைப் பெற முயற்சித்தான்.

அவளோ தன்னைத் திறக்க பிடிவாதமாக மறுதலித்தாள். நாங்கள் திலக்கோடும் நண்பர்களோடும் கூத்தடிக்கும்போது அவள் மட்டும் மௌனமாக இருப்பாள். ஆனால், அவளது அனுமதியின்றியே கண்கள் களவிற்குப் போய்விடும். அவை திலக்கின் மீது கவிந்திருக்கும். அவன் பார்க்கும் கணங்களிலோ முற்றத்திற்குத் தாவிவிடும்.

அபிராமிக்கு பொறுப்பற்ற தந்தையொருவரும், பிள்ளைகளுக்காக தன்னை உருக்கி வார்க்குமொரு தாயும் இருந்தனர். தாய் எங்கோ ஒரு கிராமத்தில் இடியப்பம் அவித்து வீடு வீடாக விற்றாள். தோசை வார்த்து கடைகளுக்குக் கொடுத்தாள். இருந்திருந்துவிட்டு தலையில் ஒரு அரிசி மூட்டையும் மரக்கறிகளுமாக மகளைப் பார்க்க வருவாள். அந்தத் தாய் தன் வியர்த்த விரல்களால் எடுத்துக் கொடுக்கும் கசங்கிய ரூபாய் நோட்டுகளை அபிராமி வெறித்துப் பார்ப்பாள். கண்கள் கலங்கிவிடும். அபிராமியின் அம்மா ஒருநாள் பெரியதொரு பலாப்பழத்தைத் தன் தலையில் சுமந்தபடி வெயிலில் நடந்து வந்து தண்ணீர் கேட்ட நாள் இன்னும் மனசில் ஈரமாக இருக்கிறது.

1987ஆம் ஆண்டு மே மாதமென்று நினைவு. அப்போது இயக்கத்தில் மன்னார் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்து அவரது உடல் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நாங்களும் போய்ப் பார்த்து வந்தோம். அன்றிலிருந்து அபிராமி திலக் வந்தால் உள்ளறைக்குள் அமர்ந்துகொண்டு வெளியே வர மறுத்தாள். அவனோ நாள்தவறாது வந்து மன்றாடினான். ஒவ்வொரு நாட்களும் ஏமாற்றத்தோடு உரையாடிவிட்டுத் திரும்பிச்செல்வான்.

அன்றைக்கு அவன் தீர்மானத்தோடு வந்திருந்தான். அதுவொரு ஞாயிற்றுக்கிழமை மாலை. நாங்கள் ‘பொறுக்கப் போவதை’த் தவிர்த்து வீட்டில் இருந்தோம். அவன் திடீரென்று தோன்றி ‘அபிராமியோடு பேச வேண்டும்’ என்றான். நான் உள்ளறைக்குப் போக எழுந்தேன். அவள் என் கைகளைப் பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்தினாள்.

அவன் தன் காதலைச் சொன்னான். படிப்பு முடிந்ததும் அவளையே திருமணம் செய்துகொள்வதாகவும் காத்திருக்கும்படியும் கேட்டான். எப்போது வேண்டுமானாலும் அவளைத் தன் தாய் தந்தையிடம் தன்னால் அறிமுகப்படுத்திவைக்க முடியும் என்றான்.

அபிராமி உதடு நடுங்க அமர்ந்திருந்தாள். கைகளும் நடுங்கின. மழையில் நனைந்த ஒரு பறவைக்குஞ்சைப் போலிருந்தாள். பிறகு தீர்மானமான குரலில் சொன்னாள்.

“இது நடக்காது. என்னை மறந்துவிடுங்கள்”

அவன் தனக்குத் தெரிந்த தமிழில் நெடுநேரமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவனது காதலின் அடர்த்தி கண்ணீராக வழியவாரம்பித்தது.

அபிராமியின் உதடுகளில் சொற்கள் துடித்தன. அவள் அதைப் பல்லைக் கடித்து உள்ளே திருப்பியனுப்பினாள். பிறகு வெடித்தெழுந்த விசும்பலோடு உள்ளறைக்குப் பாய்ந்தோடி கதவைப் பூட்டிக்கொண்டாள்.

திலக் எழுந்து நின்றான். துடைக்கத் துடைக்க அவனுடைய கன்னத்தில் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தது. படியிறங்கி இறந்தவனைப்போல அந்த இரும்புக்கேற்றைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

“ஏனடி?”என்று நான் அபிராமியைக் கேட்கவுமில்லை. அவளாக என்னிடம் வந்து சொன்னதுமில்லை. “அவன் ஒரு சிங்களப் பெடியன்”என்பதையன்றி அவளிடம் என்ன பதில் இருந்திருக்கக்கூடும்!

அதன் பிறகு அவன் கொழும்பிற்குப் போய் அங்கு படிப்பைத் தொடர்வதாக எங்கள் தோழர்களில் ஒருவன் சொல்லித் தெரிந்துகொண்டோம்.

அதன் பிறகு வந்த நாட்களில் அபிராமி மௌனத்தின் குழிக்குள் முற்றிலுமாக வீழ்ந்துவிட்டாள். மாலை நேரங்களில் கிணற்றுக் கட்டில் அமர்ந்திருந்து மரச்செறிவினுள் பார்வையைத் தொலைத்திருப்பதை அடிக்கடி காணமுடிந்தது. சில நாட்கள் இரவுகளில் விழித்துப் பார்த்தால் அபிராமி அறையின் சுவரோரம் சாய்ந்தபடி அமர்ந்திருந்ததையும் கண்டிருக்கிறேன்.
பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து நாங்கள் திசைக்கொருவராகத் தொலைந்தோம்.

கொழும்பிற்குப் போகிற நாட்களில் உயரமான, நிறமான, இளைஞர்களைக் காணும்போதெல்லாம் திலக் ஞாபகத்திற்கு வருவான். அவன் அன்றழுத கண்ணீர் அடிமனதுள் ஓடிக்கொண்டிருந்து நேற்றொரு கனவாக வழிந்துவிட்டது. நாம் காணும் கனவுகளிற் பல பொருளற்று உதிர்ந்துவிடுகின்றன. அதற்காக நமது விழிகள் கனவுகாண்பதை நிறுத்திவிடுகின்றனவா என்ன?

6 comments:

சோமி said...

NINAIVUKALUKKU NANTRY..

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,
இது ஒரு திலக்,ஒரு அபிராமிக்கு மட்டுமே நிகழ்ந்த நிகழ்வொன்றல்ல.
தேசம் முழுதும் வியாபித்துக் கிடக்கும் இனப்பிரச்சினைகள் எத்தனையோ திலக்குகளையும்,அபிராமிக்களையும் எந்தவொரு பாரபட்சங்களுமற்று பிரித்து வைக்கலாயிற்று.
ஒரு அலையைப் போல பலரும் வந்துபோன தடங்களை மனதில் பதித்துச் செல்லும் ஞாபகங்கள்,கனவுகளாகின்றன.
உங்கள் கனவை அழகான எழுத்துநடை மேலும் அழகாக்கியுள்ளது.
அடுத்து வரும் கனவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

துளசி கோபால் said...

//நாம் காணும் கனவுகளிற் பல பொருளற்று உதிர்ந்துவிடுகின்றன. அதற்காக நமது விழிகள் கனவுகாண்பதை நிறுத்திவிடுகின்றனவா என்ன? //

அழகாச் சொல்லி இருக்கீங்க தமிழ்நதி.

கலை said...

வழமைபோலவே அழகாக உங்கள் நினைவுகளை எழுதி இருக்கிறீர்கள். இது இன்னும் தொடரும் என்பதால், தொடர்ந்து வாசிப்பேன்.

//நாமே கலந்துகொள்ளும் நிகழ்விலும் பார்வையாளராக இருப்பது கனவுகளிலேயே சாத்தியம்.//

இதை வாசித்தபோது, எனது பழைய கனவு ஒன்று நினைவில் வந்து சென்றது. நானே இறந்து இருப்பதாயும், சுற்றி நிகழும் நிகழ்வுகளை ஒரு பார்வையாளராய் இருந்து பார்த்ததுமான கனவு அது. :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

"எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேறெங்கோ சென்றுகொண்டிருப்பதான ஓருணர்வை அண்மைய வாசிப்புகளின்போது பெற்றுக்கொள்ள முடிகிறது" உண்மைதான் இப்பொழுதெல்லாம் வெறும் புனைவுகளைப்படித்து விட்டு ஆசுவாசமாக இயலாத ஒரு பேராசைத்தனமும், எழுத்துக்களின் அடர்ந்த மவுனங்களின் பிரேதேசங்களில் தனித்தலையும் விழைதல்களையும் தவிர்க்கமுடிவதில்லை.. இதுவும் ஒரு பரிணாமங்களின் பார்வைகளோ..

soorya said...

சிலர் சொல்வதில்லை
சிலர் அழுவது கூட இல்லை.
சிலர் சிரிக்க முயன்று தோற்றுப் போய் நமக்கென்னவென இருக்கும் சப்ஜெக்ற் இது.
நான் அழுதேன்.
1000 அல்ல மேலும் பல திலக் கள்.........இனியும் வரும்.
காதல், இனங்களுக்கிடையேயான முரண்பாடுபாடுகளைத் தீர்த்துவிடுமெனில் எவ்வளவு வன்மையுடைத்து. நன்றியுடைத்தும் கூட.
வாழ்க.