6.02.2009

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை

இந்தக் கவிதையை முன்பொருகாலம் ஒலிவடிவில் கேட்டிருக்கிறேன். அந்த வரிகள் என் மனதை விட்டு அகலமுடியாதபடிக்கு வலி தருவனவாயிருந்தன. இப்போது இருக்கும் சூழலுக்கு இக்கவிதை பொருந்துவதால் இதை எழுதிய அகிலனின் அனுமதியோடு இங்கே பதிவாக இடுகிறேன்.

எங்களுடைய
புன்னகையைச் சந்தேகிக்கும்
எல்லோருக்கும் சொல்கிறோம்....

எங்கள் கடல்
அழகாயிருந்தது
எங்கள் நதியிடம்
சங்கீதமிருந்தது
எங்கள் பறவைகளிடம் கூட
விடுதலையின் பாடல்
இருந்தது…..
எங்கள் நிலத்தில்தான்
எங்கள் வேர்கள் இருந்தன…
நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்
எம்மூரில்…

அவர்கள்
எங்கள் கடலைத் தின்றார்கள்…
அவர்கள்தான்
எங்கள் நதியின் குரல்வளையை நசித்தார்கள்…
அவர்கள்தான்
எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்……..
எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத் துரத்தினார்கள்
அவர்கள்தான்
எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை
தெருவில் போட்டு நசித்தார்கள்…..

நாங்கள் என்ன சொல்வது
நீங்களே தீர்மானித்துவிட்டீர்கள்
நாங்கள் மனிதர்கள் அல்ல என்று……

எங்கள்வயல்கள்
பற்றி எரிகையில்
எங்கள் நதிகளில்
எம் தலைகளைக் கொய்த
வாட்கள் கழுவப்படுகையில்
நீங்கள் எங்கிருந்தீர்….?

எப்போதுமிருக்கும்
பச்சை வயல்வெளியை
ஒற்றைப்பனை மரத்தை
தெருப்புழுதிக் கிளித்தட்டை
ஊர்க்கோயிலை
என்பாட்டியின் பூர்வீகக் கிராமத்தையும்
அதன் கதைகளையும் இழந்து
நாங்கள் காடுகளில்அலைகையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்?

சப்பாத்துக் கால்கள்
எங்கள்
குரல்வளையில் இருக்கையில்
எம் பிள்ளைகள்
வீதியில் துடிதுடித்து அடங்குகையில்
துப்பாக்கிகளின் சடசடப்பு
ஊருக்குள் வருகையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்?

நாங்கள் ஊர்பிரிந்து வருகையில்
உயிர் தெறித்து விழுகையில்
கண்ணீர் பிரியாத துயரம்
எம்மைத் தொடர்கையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்?

நாங்கள் பசித்திருந்தோம்
நாங்கள் பயமாயிருந்தோம்
நாங்கள் விழித்திருந்தோம்
நாங்கள் விக்கித்து
வேறு வழியின்றி
மூர்ச்சித்துச் செத்தோம்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

எப்போதும்
எங்கள் கனவுகளைத்
துப்பாக்கிகள் கலைத்தன
குண்டுகள் விழுந்த முற்றத்தில்
பேரச்சம் நிறைய
நாம் தனித்தோம்
நாம் தவித்தோம்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

ஊரோடு கிளம்பி
நாவற் குழியில்
நசுங்கிச் செத்தோமே!
நவாலியில் கூண்டோடு
நாய்களைப் போல்
குமிந்த எம் உடல்களின் மேல்
நாம் கதறி அழுகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

நாம் வேர்களை இழந்து
ஊர் ஊராய் அலைகையில்
துர்க்கனவுகளில்
துப்பாக்கிகளைக்கண்டு
எங்கள் பிள்ளைகள்
திடுக்கிட்டு அலறுகையில்
எங்கள் பள்ளிக்கூடத்தில்
குண்டுகள் வீழ்கையில்
ஒழுகும் கூரையில்
எம் குழந்தையின்
கொப்பி எழுத்துக்கள் கரைகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

நாங்கள் எங்கள்
பனைமரங்களைவிட்டுத் துரத்தப்படுகையில்
தெருப்புழுதி
எங்கள் பாதங்களில் ஏறிவர
பாதங்களின் சுவடுகளேயறியாக்
காடுகளிற்குள் நாம் துரத்தப்படுகையில்
காடுகளில்
எங்கள் குழந்தைகளின் புன்னகை
மழையில் நனைகையில்
மலேரியாவில் சாகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

சப்பாத்துக்கள்
எங்கள் முற்றத்தை மிதிக்கையில்
உறுமும் வண்டிகள்
எங்கள் வேலிகளைப் பிரிக்கையில்
துப்பாக்கிகளின் குறி
எம்மீது பதிகையில்
உயிர் ஒளித்து
நாங்கள் ஊர்விட்டோடுகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

எங்கள் நதியின் சங்கீதம்
துப்பாக்கி வாய்களில்
சிக்கித் திணறுகையில்
கடலின் பாடலை
அவர்கள் கைது செய்தபோது
எங்கள் குழந்தைகளை
அவர்களின் வாட்கள்
இரண்டாகப் பிளக்கையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

ஊரில் கந்தகம் மணக்கையில்
வானில் மரணம் வருகையில்
வயலில் அவர்கள்
மரணத்தை விதைக்கையில்
வரம்புகளில் உடல்களைக் கிடத்தையில்
ஊரைப் போர் விழுங்கையில்
ஊர் ஊராய் நாம் அலைகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

எங்களுடைய தெருக்களில்
சருகுகள் நிறைகையில்
குருவிகளின் குரல் சப்பாத்துக்கால்களில்
நொருங்கித் தேய்கையில்
மனிதர்களின் சுவடுகளேயறியா இடங்களிற்கு
நாம் துரத்தப்படுகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

உறைந்துபோய்க் கிடக்கும்
எங்கள் குழந்தைகளின்புன்னகையை
குரல்களற்று அலையும்
ஊர்க்குருவியின் பாடலை
பச்சையற்றெரியும்
எங்கள் வயல்களின் பசியை
பேனாக்களை இழந்த
எங்கள் குழந்தைகளிடம் இருந்து
துப்பாக்கிகளை மீட்கமுடியாமல்
நாங்கள் தத்தளிக்கையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்?

எங்களுடைய
புன்னகையைச் சந்தேகிக்கும்
எல்லோருக்கும் சொல்கிறோம்…….

முகவரிகளற்றுத்
தேசங்களில் அலையும்
உறவுகளின் முகங்களை
மாற்றங்கள் அற்றுப்போன வாழ்வின் சுவையை
மறுபடியும் தரமுடியுமா உம்மால்?

அப்போதெல்லாம் நாங்கள் ஏன் தனித்தோம்
உலகே!
எங்கள் உணர்வுகளின் வலி
எட்டவில்லையா உனக்கு?
எம்மூரின் நதியின் சலசலப்பில்
வருடும் தென்றலின் தழுவலில்
ஒவ்வொரு பூவின் முகத்திலும்
விடுதலையின் விருப்பு மிளிர்கிறதே
தெரிகிறதா உனக்கு?

நாங்கள் கனவுகள் சுமக்கிறோம்
எங்களிடம் மிச்சமிருக்கும்
சுதந்திர உணர்வுகளின் மீது
எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்
நிறங்களற்றுப்போன
இவ்வாழ்வின் நிறம் தருவார் யார்?

த.அகிலன்

9 comments:

வனம் said...

வணக்கம்

ம்ம்ம் இந்த கவிதை தேவையான ஒன்று

ஆமா இந்த பாடலின் ஒலி கோப்பையும் இணைத்திருந்தால் மிக நண்றாக இருந்திருக்கும்

இராஜராஜன்

பாண்டியன் said...

அக்கா! காலம் எல்லாவற்றுக்கும் மருந்து,உடனடியாக தலாய்லாமா போன்று புறநிலை அரசு ஒன்றை அமையுங்கள்.ஒட்டு குழுக்களுக்கு இப்போது ஆப்பு இறக்குகிறான் சிங்களன் அதாவது தமிழீழம் என்ற சொல் இருக்கும் கட்சிகளை தடை செய்யவேண்டுமாம்.அதை கட்டாயம் செய்வான் சிங்களன் . தமிழீழம் என்ற சொல் உயிர் பெற்று இருக்க புறநிலை அரசு ஒன்று தேவைபடுகிறது.அடுத்து சர்வதேச அரசியல் சூட்சுமம் தெரியவேண்டும்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாலிசியை கை கொள்ளுங்கள்.. முக்கியமாக இந்த நிலைமைக்கு காரணமான நாடு எது என உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி ஊட்டி வளருங்கள் வினையை விதைத்தவன் அதை அறுவடை செய்துதான் ஆக வேண்டும்..அணு குண்டு தயார் செய்யுங்கள் வலிந்தவனே வாழ்வான்!

தமிழ்நதி said...

வணக்கம் இராஜராஜன்,

ஒலிப்பேழை அகிலனின் வலைப்பூவில் இருக்கிறதென்று நினைக்கிறேன். எனக்கு இந்த ஒலிநுட்பங்கள், தொழில்நுட்பங்கள் பெரிதாகத் தெரியாது. யாரிடமாவது உதவி பெற்று கட்டாயம் இணைக்கிறேன். நன்றி.

பாண்டியன்,

"தலாய்லாமா போன்று புறநிலை அரசு ஒன்றை அமையுங்கள்"

யார் அமைப்பது? புலிகள் அரங்கில் இல்லை. மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். தவிர, இவ்விடயம் தெளிந்த அறிவுடையவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் பேசவேண்டிய விடயம். காத்திருக்கிறோம் நல்ல முடிவுகளுக்காக.

"இந்த நிலைமைக்கு காரணமான நாடு எது என உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி ஊட்டி வளருங்கள்"

அதைச் செய்யலாம்.ஆனால்,

"அணு குண்டு தயார் செய்யுங்கள் வலிந்தவனே வாழ்வான்!"

வலிமை என்பது இனி அரசியலில் வலிமை பெற உழைப்பதேயன்றி, அணுகுண்டு செய்வதில்லை:) பாண்டியன், எஞ்சியிருக்கும் எம்மக்களும் இவ்வுலகும் வாழவேண்டும். அழிவின் வழியாக ஒரு ஆக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள் எமது மக்களும் போராளிகளும். அந்த ஆக்கத்தைச் சரியான வழியில் முன்னெடுத்துத் தொடர்வதே இப்போது வேண்டியது.

தொடர்பவன் said...

இக்கவிதை மனதின் வலியை முகத்தில் அடித்தார் போல் நவிழ்கிறது. தமிழக தமிழனான எனக்கு இந்த வார்த்தைகளை தவிர வேறோன்றும் செய்ய முடியா கையறு நிலையே கேவலமானது.. ஒரு அபத்தமான இனத்த்தின் அபத்த வார்த்தைகள் இது என்ற போது வார்த்தைகளில் ஒரு சிறு ஆசுவாசம்

சாந்தி நேசக்கரம் said...

//"தலாய்லாமா போன்று புறநிலை அரசு ஒன்றை அமையுங்கள்"

யார் அமைப்பது? புலிகள் அரங்கில் இல்லை. மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். தவிர, இவ்விடயம் தெளிந்த அறிவுடையவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் பேசவேண்டிய விடயம். காத்திருக்கிறோம் நல்ல முடிவுகளுக்காக.//

புறநிலையரசு நிறுவுதலுக்கான இணைப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது புலத்தில்.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

எங்களை எல்லாமுமாய் இழுத்துப்போய் அழித்துவிட்டு அகிலம் அமைதியாய் இப்பொதுதான் மூச்சுவிடுகிறது. துளிர்க்கோம் என்ற வகையில் நாங்கள் துண்டாடப்பட்டுள்ளோம்.
எழுவோம் என்ற கனவு கொஞ்சம் கொஞ்சமாய் அறுபடுகிறது.

சாந்தி

kalyani said...

அக்கா, பாண்டியன் சொல்வது சரியென்றே நான் நினைக்கிறேன் .
அமெரிக்கா, வியட்நாமில் சண்டையிட்ட போது அமெரிக்க மக்கள் வியட்னாமியர்களுக்காக குரல் கொடுத்து போராடினார்கள் . ஈராக்கியர்களுக்காக குரல் கொடுத்தார்கள். ஆனால் ஒரே நாட்டில் இத்தனை உயிர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து சிங்களமக்கள் ஒரு அமைதி ஊர்வலம் தன்னும் நடத்தினார்களா? அமைதி வழியில் தீர்வு என்பது எல்லாம் வெறும் பம்மாத்து . அப்படி முடியும் என்றால் தந்தை செல்வாவோடே போராட்டத்தை முடித்திருப்போம். நாங்கள் எப்போதெல்லாம் சண்டையில் வலிமையாக இருந்தோமோ அப்போதெல்லாம் சிங்களவன் வழிய பேச்சுக்கு வந்தான். நாங்கள் அணு குண்டு செய்து வெடிக்கத் தேவையில்லை .அணுகுண்டை கையில் வைத்திருந்தாலே போதும் .வலியது வாழும் என்ற கூற்றுப்படி நாங்கள் வெல்வோம் .
உலகம் ஒரு தீர்வை பெற்றுத்தரும் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை.தாழ்த்தப்பட்ட இன மக்களின் விடி வெள்ளியாக கருதப்படும் பராக் ஒபாமா விடுதலைப்புலிகள் ஆயுதத்தை மூன்றாம் தரப்பினரிடம் கையளிக்க வேண்டும் ,அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று எவளவோ சொன்னார். ஆனால் சரணடைய சென்ற எமது போராளிகள், யுத்த தர்மத்தை மீறி கொல்லப்பட்டைதயிடடு ஒரு வார்த்தை தானும் சொல்லவில்லை . கியுபா புரட்சியை ஒரு வழிகாட்டலாக கொண்டு நடக்கும் எமது போராட்டத்தில், நடந்த மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகளை எதிர்த்து சிங்கள அரசுக்கு சார்பாக கியூபா குரல் கொடுப்பதை யாரிடம் சொல்லி அழுவது?ஈழத்தமிழர்கள் வலிமை பெற வேண்டும் எல்லாவற்றிலும்..அதற்கு உங்கள் உணர்வு பூர்வமான எழுத்து மென்மேலும் நிறைய மக்களை சென்றடையவேண்டும்.....என்பதே எனது அவா.;)

தமிழ்நதி said...

கருத்துக்கு நன்றி தொடர்பவன்,

கையறு நிலை, தொப்பூள் கொடி உறவு... இன்னபிற சொற்களெல்லாம் உண்மையில் இப்போது அயர்ச்சியூட்டுகின்றன. அவை தம் பொருளுணராது உச்சரிக்கப்படுகின்றனவோ என்று அண்மைய காலங்களில் யோசிக்கத் தோன்றுகிறது. சில உணர்வுள்ள தமிழர்கள் இருக்கிறார்கள்; எம் பொருட்டு அவர்கள் வருந்துகிறார்கள் என்ற அற்பசொற்ப ஆறுதல்தான். வார்த்தை விளையாட்டுக்களின் காலம் அந்திமத்தை நெருங்குகிறது. இனி உணர்ச்சியை விட்டு உண்மையைப் பேசுவோம். உங்கள் கவிதைகள் பார்த்தேன்:)

சாந்தி,

"புறநிலையரசு நிறுவுதலுக்கான இணைப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது புலத்தில்."

என்று சொல்லியிருந்தீர்கள். பார்க்கலாம் எவ்வளவிற்குச் சாத்தியப்படுகிறதென்று. எழுவோம் என்ற கனவு எப்போதும் இருக்கவேண்டும் தோழி. இல்லையென்றால் வாழ்வின் பொருள்தான் என்ன? ஏதோ ஒரு நம்பிக்கையின் இழையைப் பற்றிப்பிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்த வாழ்க்கை நெடியதும் கொடியதுமாயிருக்கிறது.

பதி said...

இந்தக் கவிதையினை அகிலனின் பதிவில் படித்திருக்கின்றேன்..

எங்களிடமிருந்து குற்ற உணர்ச்சிகளே ஒரு பெருமூச்சாய் வெளிவருகின்றன...

//"இந்த நிலைமைக்கு காரணமான நாடு எது என உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி ஊட்டி வளருங்கள்"//

அதை மட்டும் மறந்துவிடாதீர்கள்...

//வலிமை என்பது இனி அரசியலில் வலிமை பெற உழைப்பதேயன்றி, அணுகுண்டு செய்வதில்லை:) பாண்டியன், எஞ்சியிருக்கும் எம்மக்களும் இவ்வுலகும் வாழவேண்டும். அழிவின் வழியாக ஒரு ஆக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள் எமது மக்களும் போராளிகளும். அந்த ஆக்கத்தைச் சரியான வழியில் முன்னெடுத்துத் தொடர்வதே இப்போது வேண்டியது.//

ஆம்.. அதைவிடுத்து உணர்ச்சிவசமான வீரவசனங்களையும் அதை பேசிக் கொண்டு திரிபவரையும் புறம் தள்ள வேண்டிய காலம் இது.

//எழுவோம் என்ற கனவு எப்போதும் இருக்கவேண்டும் தோழி. இல்லையென்றால் வாழ்வின் பொருள்தான் என்ன? //

அதே....