6.11.2009

பாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்….


“என்னை என்னைத் தேடி வந்த அஞ்சலை…. அவ நெறத்தைப் பாத்துச் செவக்கும் செவக்கும் வெத்தலை”ஒலிவாங்கியைக் கையில் பிடித்தபடி ஒருவர் அந்த வேகமும் சோகமும் நிறைந்த பாடலைப் பாடுகிறார். முன்னே தரையில் அமர்ந்திருக்கும் அரைக்காற்சட்டைச் சிறுவர்கள் தலைக்குமேல் கைகளை உயர்த்தித் தாளம்பிசகாமல் கொட்டுகிற கொட்டில் புழுதி பறக்கிறது. சற்றே தொலைவில் நின்றிருந்த வயதான, மூளை பேதலித்த ஒரு பெண்ணும் பாட்டுக்கியைபுற தன் கையிலிருக்கும் பெட்டியில் உற்சாகத்தோடு தட்டுகிறார். சிறுமிகள் யாரும் சொல்லிக்கொடுக்காமலே ‘பொண்ணு’களுக்கேயுரிய அடக்கத்துடன் மருளும் விழிகளால் மேடையையும் ஊருக்குள் வந்திருக்கும் புதியவர்களையும் பார்க்கிறார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடையின் விதானத்தில் ஒட்டப்பட்டிருந்த வண்ணச்சரிகைகள் காற்றில் ஒயிலாக இழைகின்றன. கூட்டம் நடக்குமிடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீதி வழியே மிக சாவதானமாக மாட்டுவண்டிகள் போகின்றன. விறகுச்சுமையோடு ஒரு பெண் கூட்டத்திற்கும் மேடைக்குமிடையில் நடந்து தன் வீட்டிற்குப் போகிறாள். ‘அல்லிநகரம் வழியாக வடபுதுப்பட்டி’ என்று பின்புறத்தில் எழுதப்பட்ட பேருந்துகள் அவ்வப்போது புகை விசிறிச் செல்கின்றன. மரபு பிசகாமல் சில இலக்கியகாரர்கள் சற்று தள்ளி நின்று இலக்கிய விசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

வெயிலில் வீடு கொதிகலனாகி, ‘ஓடு… ஓடு..’என்று விரட்டிய விரட்டில் இம்முறை வந்து சேர்ந்த இடம் தேனி. சில உடைகள், புத்தகங்கள், திரைப்படக் குறுந்தகடுகள், மடிக்கணனி சகிதம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிறது. இம்முறை வீடு எத்தனை வருந்திக் கூப்பிட்டாலும் (பாவம்!அதன் தலையில் பழி) செவிசாய்ப்பதில்லை என்று பெரிய பெரிய சபதங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்திருக்கிறேன். திடுக்கென்று ஒருநாளில் எனக்கே நான் அளித்த வாக்குறுதிகள் என்னைப் பார்த்துப் பரிதாபமாக விழிக்க, சென்னை செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்திருப்பேன் என்பதையும் அறிவேன்.

‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ ஆகிய இரு மெகாத் தொடர்களுக்கும், ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ஆகிய திரைப்படங்களுக்கும் வசனம் எழுதிய நண்பர் பாஸ்கர் சக்திக்கு, தமிழக அரசினால் கலைமாமணி விருது வழங்கப்பட்டதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முகமாக, அவருடைய சொந்த ஊராகிய வடபுதுப்பட்டி கிராம மக்கள் ஒரு பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘வாருங்கள் எங்கள் ஊருக்கு’என்றார். 13, 14இல் வரவிருந்த வால்பாறை இலக்கியக் கூட்டம், எரிக்கும் வெயில், பொறுக்குவதற்கான காலக்கெடு தீர்ந்துவிட்டிருந்ததை சதா நினைவுபடுத்திக்கொண்டிருந்த மனக்குறளி இவற்றோடு மேலதிகமாக ஒரு காரணமும் சேர்ந்துவிட, மேற்குத்தொடர்ச்சி மலைக் குளிர்ச்சியை அனுபவிக்க வந்தாயிற்று.

சாம்பலா நீலமா என்று வண்ணமயக்கம் கொள்ள வைக்கும் மலைத்தொடர்கள், காற்றில் எப்போதுமிருக்கும் குளிர், செழித்துயர்ந்த தென்னை மரங்கள், சிலிர்த்துச் செல்லங் கொட்டும் வயல்கள் என்று தேனி மாவட்டம் சட்டகங்களுள் அகப்படாத பிரம்மாண்டமான ஓவியமாய் மயங்கவைக்கிறது. இயற்கை எழிலும் வளமும் மக்களை நல்லவர்களாக நீடிக்கவைத்திருக்கிறதா என்று நினைக்கும்படியாக இருந்தது, வடபுதுப்பட்டியில் பாஸ்கர் சக்திக்கு நடந்த பாராட்டு விழா.

முதலில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்துவைத்து அவரது புத்தகத்தை வெளியிட்டார்கள். ‘அறிவோம் அறிவியல்’என்ற சிறு நூலை எழுதிய எழுத்தாளரின் பெயர் பா.கணேசன். வயது 12. வடபுதுப்பட்டி கிராமத்து முத்தாலம்மன் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார். அவரை மேடையில் அமர்த்திவைத்து சால்வை போர்த்தி கௌரவம் செய்து, பலரும் பாராட்டிப் பேசியதைக் கேட்டபோது கொஞ்சம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மெலிதாக அழுகைகூட வந்துவிட்டது. (அது சரி…நல்லதுக்கும் அழுகிறது)

பிறகு அந்த ஊர்ப்பள்ளிக்கூடத்தில் படித்து பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் மாணவர்களுக்கும், அந்த ஊரிலிருந்து வெளியூருக்குச் சென்று படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வந்த அரைமணி நேரம் மாறி மாறி சால்வைகள் போர்த்தப்பட்டன. பாஸ்கர் சக்திக்கு மட்டும் குறைந்தபட்சம் முப்பது பொன்னாடைகள் போர்த்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்ததும், ஒருவர் வந்து பாஸ்கரை ஒதுக்குப்புறமாக அழைத்துப்போய் ஒரு சால்வையைக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார். ‘பேகனா நீங்கள்?’என்று கிண்டினேன். (பேகன் என்றொரு குறுநில மன்னர், மயிலுக்கு குளிர்கிறதே என்று, தன் போர்வையை எடுத்துப் போர்த்துவிட்டாராம் என்பார்கள்) ‘போர்த்திக்க வேணுமாம்… அவ்வளவையும் வைச்சு நான் என்ன செய்யப் போறேன்’என்று சொல்லியபடி கண்ணாடிக்குள்ளால் சிரித்தார் பாஸ்கர். பாஸ்கரின் அண்ணா மேடையில் ஏறி அவரை அணைத்துக்கொண்டு போட்டோவுக்குப் புன்னகைத்தபோது ‘ஆமா… மு.க.அழகிரியும் ஸ்டாலினும்… போஸைப் பாருங்க’என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது. பக்கத்திலிருந்த ஈஸ்வரியிடம் (பாஸ்கரின் மனைவி) “இவ்வளவு குசும்பாக இருக்கிறார்களே… யாரது?”என்றேன். “அது அவங்க மதினி(அண்ணி)”என்றார். ‘வெண்ணிலா கபடிக் குழு’விலும், ‘எம்டன் மகன்’இலும் வழிந்த தேனிக்குசும்பின் நதிமூலம் அவரது குடும்பம்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அதனையடுத்து வந்து உரையாற்றியவர்களில் யாரும் கொட்டாவியைத் தூண்டவில்லை. எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் பேசிய பேச்சுக்கு கூட்டம் சிரித்துக்கொண்டேயிருந்தது. அப்படியொரு நகைச்சுவை வழியும் பேச்சை, நீண்ட நாட்களுக்குப் பிறகு இலட்சுமணப் பெருமாளிடம்தான் கேட்க வாய்த்தது. சொல்வதற்கென்று குட்டி குட்டியாக நிறையக் கதைகள் அவரது கைவசமிருந்தன. சு.வெங்கடேசன் (காவல் கோட்டம் எழுதியவர்), சாஜஹான், க.சீ.சிவகுமார், செல்வேந்திரன் (நம்ம சகபதிவர்) நானறியாத சில இலக்கியவாதிகளும், ஊர்ப் பெரியவர்களும், அவ்வூரின் காவல்துறை அதிகாரி விஜயன், பள்ளிக்கூட முதல்வர் மதுரை வீரன், இயக்குநர் திருமுருகன், நடிகர் விஜயராஜ் எல்லோரும் பேசிய பேச்சில் அழுத்தமாக ஒரு செய்தியைப் பதிவுசெய்தார்கள். பாஸ்கர் சக்தி ஒரு வெற்றிகரமான வசனகர்த்தா மட்டுமல்ல; மிக உன்னதமான குணங்களையுடைய ஒரு நல்ல மனிதர் என்ற செய்திதான் அது.

‘கலைமாமணி விருதை இனிக் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. விதிவிலக்காக பாஸ்கர் சக்தி போன்ற ஆட்களுக்கும் வழங்கப்படுவதனால்”என்று அவ்விருதினைக் ‘கௌரவ’ப்படுத்தினார் ஒருவர். எத்தனை உயரத்துக்குப் போனாலும், எளிமையைக் கைவிடாத பாஸ்கரின் பண்பை வியந்து பேசினார் மற்றொருவர். ‘சாமியும் சாதியும் வெட்டிச்சுமை ஆத்தா. அதைத் தூக்கி எறிஞ்சாத்தான் வேகமா நடக்கமுடியும்”என்ற (வெ.க.குழு) பாஸ்கரின் வசனத்தைக் கொண்டாடினார் இன்னொரு பேச்சாளர். “என்னுடைய இயக்கம் வழியாக பாஸ்கர் சக்தியின் எழுத்தில் வெளிச்சம் விழவில்லை. அவருடைய எழுத்தில் இருந்த வெளிச்சத்தினால் ஈர்க்கப்பட்டு நான்தான் அவரிடம் சென்று எனது படைப்புகளுக்கு வசனம் எழுதித் தரும்படியாகக் கேட்டேன்”என்று இயக்குநர் திருமுருகன் பாஸ்கர் சக்தியின் எழுத்தாளுமையைப் புகழ்ந்தேற்றினார். “பாஸ்கர் என்றால் அன்பு, கண்ணியம், எளிமை, பெருந்தன்மை”என்றார் செல்வேந்திரன். “எங்கே எத்தனை பாராட்டப்பட்டாலும் தனது சொந்த ஊரில் தனது மக்களுக்கு முன்னால் பெருமை பெறும் பேறு யாருக்குக் கிட்டும்?”என்று, அத்தகைய பேறு பெறாத சில சினிமாப் பிரபலங்களை உதாரணங்காட்டிப் பேசினார் இன்னொருவர். “திரைத்துறைக்குள் நுழைந்த பிறகும் தலைக்கனம் மற்றும் தீய பழக்கங்கள் தீண்டாமலிருக்கும் மனிதர்”என்றார் மற்றுமொருவர். பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளை உள்ளடக்கிய ‘பழுப்புநிறைப் புகைப்படம்’, ‘அழகர்சாமியின் குதிரை’ஆகிய தொகுப்புகளிலுள்ள, அவலத்தையும் அங்கதத்தோடு கடந்துபோகையில், மெல்லென அமிழ்;ந்திடும் துயரத்தைக் குறித்துப் பேசினார் மேலுமொருவர். அங்கே பேசிய யாரும் ஒரு வார்த்தைதானும் மிகைப்படுத்திப் பேசியதாகவோ உணர்ச்சிவசப்பட்டுப் போற்றியதாகவோ தோன்றவேயில்லை. அந்தளவுக்கு அவர் எளிமையும் இனிமையும் நிறைந்த மனிதராயிருந்திருக்கிறார். தான் பழகிய அத்தனை பேரிடமும் அன்பைச் சொரிந்திருக்கிறார். அந்த அன்பு ஊரையும் நனைத்திருக்கவேண்டும்@ இல்லையென்றால் கூட்டம் கடைசிவரை கலையாதிருந்தது மட்டுமல்லாமல், அத்தனை கைதட்டல்கள் எழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. நல்லவராயிருப்பதைப் போன்ற சுகானுபவம் வேறெதிலும் இல்லைப்போல பாஸ்கர் சக்தி மிகப் பணிவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தார். ஏற்புரையின்போது, “நம்மைப் பலரும் முகத்திற்கெதிரில் புகழ்வதைக் கேட்டுக்கொண்டு மேடையில் அமர்ந்திருப்பது அளவில்லாத கூச்சத்தைத் தந்தது”என்றார்.

வடபுதுப்பட்டிக் கிராமம் பல விடயங்களுக்கு முன்மாதிரியாக இருந்ததைக் கவனிக்க முடிந்தது. முகைதீன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் உரையாற்றுகையில், “இந்தக் கிராமத்தில் 37 ஆண்டுகளாக ஆசிரியப் பணி புரிந்திருக்கிறேன். இந்த ஊரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பம் எங்களுடையதுதான். எந்தவொரு வேற்றுமையும் காட்டாமல் எங்களோடு அன்பு பாராட்டினார்கள்”என்று நெகிழ்ந்துபோய்ப் பேசினார்.
அந்த விழாவானது, பாஸ்கர் சக்தி என்ற கலைஞனுக்கு கலைமாமணி விருது கிடைத்தமைக்கான பாராட்டு விழாவாக மட்டுமல்லாது, ஒட்டுமொத்தக் கிராமத்துக்குமான ஒரு ஊக்குவிப்பாக, பல நல்ல விடயங்களுக்கான கால்கோளாக அமைந்திருந்தது சிறப்பம்சமெனலாம். அரசியல் சார்புடைய கூட்டங்களில் போய் அமர்ந்து, ‘வானத்தை வில்லாக வளைக்கும்’பொய்களால் புண்பட்டுத் திரும்புவதைக் காட்டிலும், இத்தகைய உண்மை மனிதர்களைப் பற்றிப் பேசக்கேட்பது, விழா முடிவில் பாஸ்கர் சக்தி வீட்டில் பரிமாறப்பட்ட இரவுணவில் வழங்கப்பட்ட கேசரிக்கு இணையான இனிப்பெனலாம்.

பக்கத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது போலும். வந்ததிலிருந்து கோயிலில் பாட்டுச்சத்தம் ஓய்ந்தபாடாக இல்லை. இப்போது ‘நாக்க முக்க நாக்க முக்க’என்றொரு பெண் முழங்கிக்கொண்டிருக்கிறாள். கூட்டம் தூக்கத்தை மறந்து கிறங்கிக் கிடக்கும். இன்று காதினுள் பஞ்சு துணை கொண்டு படுத்துறங்க வேண்டும்.

ஜூன் 10
இரவு: 11.42

17 comments:

சென்ஷி said...

:))

நேரில் பார்த்து ரசித்த உணர்வு. பகிர்விற்கு நன்றி தமிழ்நதி

பிச்சைப்பாத்திரம் said...

நல்லதொரு பகிர்வு. பதிவின் தலைப்பு நன்றாக உள்ளது.

பாஸ்கர் சக்தியை ஒரு முறை நேரில் சந்தித்த போது அவரின் பழைய ஆனந்த விகடன் தொடரான் 'பஸ் ரூட்' பற்றி நினைவுப்படுத்தி பேசியதும் ஆச்சரியமாக பார்த்தார். ஒரு குசும்பு பதிவிற்காக அவர் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதும் அவர் அதற்கு மெலிதாக கண்டனம் தெரிவித்ததும் ..

யாத்ரா said...

கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத குறையை உங்கள் பதிவு போக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

மாதவராஜ் said...

//ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…//

தலைப்பே அருமை. பகிர்ந்த விஷயங்களும், நுட்பமான பார்வைகளும் உங்களுக்கே உரித்தான சரளமான மொழி நடையில். நன்றாக இருந்தது.

//எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் பேசிய பேச்சுக்கு கூட்டம் சிரித்துக்கொண்டேயிருந்தது. அப்படியொரு நகைச்சுவை வழியும் பேச்சை, நீண்ட நாட்களுக்குப் பிறகு இலட்சுமணப் பெருமாளிடம்தான் கேட்க வாய்த்தது. //
நாங்கள் அடிக்கடி இங்கு நேரிலேயே கேட்கிறோமே....!

கோகுலன் said...

நல்லதொரு பண்பாளரைப் பற்றி அறியத் தந்த பதிவு. நன்றிகள்.

பாஸ்கர் சக்திக்கு பாராட்டுக்கள்..

இள எழுத்தாளர் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.

V.செல்வகுமார் said...

எளிமையான நடையில் சுவையாக நிகழ்ச்சியை வர்ணித்துள்ளீர்கள். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு. பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துக்கள்.

பாராட்டு விழாவை எங்கள் மனக்கண்ணால் பார்க்கத்தந்தமைக்கு நன்றிகள் தமிழ்.

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

உங்கள் தலைப்பே மிகுந்த மகிழ்வோடு இந்தப் பதிவுக்கு அழைத்துவந்தது. நண்பர் பாஸ்கர் சக்திக்கு எடுக்கப்பட்ட விழாவில் நானுமமர்ந்து பார்த்துவந்தது போல் வாசிக்கும்போதே ரசித்து உணர்ந்துகொள்ளமுடிகிறது.

நண்பர் பாஸ்கர் சக்திக்கு எனது அன்பான பாராட்டுக்கள்.
(விரைவில் உங்களுடன் கதைக்கிறேன் நண்பரே..தாமதத்திற்கு மன்னியுங்கள் )

சகோதரி, தேனி போகமுன்பு வீட்டிலிருந்தே சொல்லிவிட்டுப் போயிருந்தால் என்ன? எனது வாழ்த்தையும் தெரிவிக்கச் சொல்லியிருப்பேன் இல்லையா?
(எப்படியும் திரும்பச் சிக்குவீர்கள் இல்லையா? அப்பொழுது இருக்கிறது உங்களுக்கு :) )

பகிர்வுக்கு நன்றி சகோதரி !

Unknown said...

பகிர்விற்கு நன்றி தமிழ். உடல் நலக் குறையினால் வர ஏலாமல் போனதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். உங்களின் பதிவை வாசித்ததும் உங்கள் கண் பார்வையினூடே நிகழ்ச்சியை நேரில் பார்த்தவுணர்வு ஏற்படுகின்றது. கடுகளவு சந்தேகமின்றி பாஸ்கர் சக்தி உன்னதமான குணங்கள் நிரம்பிய அற்புதமான மனிதர். இனிமை, எளிமை, பெண்களை மதிக்கும் குணம் என்று அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் மேன்மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன். சாகித்ய அகாதமி விருதினை அவர் பெறும் போது நானும் உங்களுடன் கலந்து கொள்வேன்.

selventhiran said...

புகைப்பட ஆல்பத்தினைப் புரட்டிப் பார்த்தது போலிருக்கிறது. அமைதியாக உட்கார்ந்து, எடுத்ததற்கெல்லாம் கூச்சப்பட்டு, அளந்து வார்த்தைகளைச் செலவழித்ததெல்லாம் இப்படி கவித்தெறிப்பாய் எழுதத்தானோ என்று இப்போது தோன்றுகிறது.

சூப்பர்!

நேசமித்ரன் said...

நல்வினைகள் நற்றவத்தால் நிகழ்வன...

செருகற்ற சீர் மிகு செம்மனம் இந்த வெகுமானங்களைவிட

உயரத்தில் வைத்து பார்க்கச் சொல்கிறது அப்பெருமகனை

வாழ்த்துக்கள் பாஸ்கர் சக்தி

தமிழ்நதி

ஒரு மேகம் நிழலால் கடப்பது மாதிரி

ஒரு ஈரபார்வையுடன் பதிவு செய்திருக்கிறது உங்கள் பேனா..

உபபாண்டவத்தில்

சஞ்சயனின் சொல் போல ஒரு அழுத்தம் ....

soorya said...

ஒரு மெல்லிய தென்றலாய்..இதந்தது இப் பதிவு.
நன்றி

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? மிக அழகான பதிவு.
நான் தங்கமணி பிரபு, அங்கே நிகழ்ச்சியில் அறிமுகமானவன். மேடையோரத்திலும் பார்வையாளர் ஓரத்திலுமிருந்ந்து நிகழ்ச்சியைப் பார்த்ததில், கொஞ்சம் நிகழ்வுகளை விட்டுவிட்டேன் போலும். உங்கள் பதிவில் சிலதை அறிந்துகொண்டேன். அருமை. நேரம் கிடைக்கையில் என் சிந்தனி பக்கம் வந்து போகவும். நன்றி

அருண்மொழிவர்மன் said...

சினிமாவுக்குப் போய்விட்டதால் இவர் தொலைந்து போய்விட்டாரோ என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. இவரது பழுப்பு நிறப் புகைப்படம் நல்ல சிறுகதைத் தொகுதி. அதுபோல விகடனில் இவர் எழுதிய “வெயில் இரவு நிலவு” அற்புதமான நாவல்.
அதில் வரும் ஒரு நல்ல கவிதையின் வாழ்நாள் ரசிகன் நான்

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

மணிஜி said...

அண்மையில் முதன் முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.(செல்வா,ரமேஷ் வைத்யா,நர்சிம்,கேபிள் சங்கர்,மற்றும் நான்)விழாவில் கலந்து கொண்ட திருப்தியை உங்கள் பதிவு கொடுத்தது...வாழ்த்துக்கள் பாஸ்கர் சக்திக்கு..நன்றி உங்களுக்கு..

மணிநரேன் said...

பகிர்ந்துகொண்ட விதம் அருமை.
நன்றிகள் பல.