6.22.2009

நட்சத்திரமாகும் மின்மினி

அன்பு நண்பர்களுக்கு,

‘ஜூன் 22இலிருந்து ஒரு வாரத்துக்கு நட்சத்திரமாக இருக்கமுடியுமா?’ என்ற மின்னஞ்சல் தமிழ்மணத்திலிருந்து எனக்குக் கிடைத்தபோது முதலில் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டம் குழப்பகரமானது. வரலாற்றின் பக்கத்தில் மிகப்பெரிய கண்ணீர்த்துளியாக விழுந்து தளும்பிக்கொண்டிருக்கிறது எமது இனம். மீண்டும் மீண்டும் ஊட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளைத் தவிர்த்துப்பார்த்தால், தடுப்புமுகாம்களுள் நமது தாயகம் சுருங்கிப்போயிருப்பதாகவே தோன்றுகிறது. இந்த இருளை சுலபத்தில் மனத்திலிருந்து கலைத்துப்போட்டுவிட்டு இயங்க முடியவில்லை. போராட்டமானது புலம்பெயர் நாடுகளுக்குக் கடத்தப்பட்டுவிட்டது என்றும், அங்கு தமிழீழப் பிரகடனம் செய்யப்படும் என்றும், யூதர்களைப் போல நாங்கள் மீள எழுவோம் என்றும் பலவிதமாகச் சொல்லப்படுகிறது.

என்னைப் பொறுத்தளவில் நான் அதீத நம்பிக்கையோடிருந்தேன். அது தகர்ந்துபோனதை இன்னமும் நம்பமுடியாமல்தானிருக்கிறது. முப்பதாண்டுகாலப் போராட்டம் ஒரு துன்பியல் நாடகமாக முடிந்துபோனதில் எனக்கும் பங்கிருக்கிறது என்ற குற்றவுணர்விலிருந்தும் தப்பிக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லியழ முடியாத இறுக்கமும் பதட்டமும் மனசினுள் பாறாங்கற்களென விழுந்துவிட்டன. தடுப்புமுகாம்களில் கைதிகளாயிருக்க விதிக்கப்பட்ட ஒரு இனமாக நாம் முடிந்துபோய்விட்டோம் என்பதை நினைக்குந்தோறும் கையாலாகாதவர்களுக்கேயுரிய கோபம் கனன்றெழுகிறது. உலகெங்கிலும் சிதறிச் சின்னாபின்னப்பட்டிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்களில் ஒருத்திதான். என்றாலும், மீளவே முடியாத கருந்துளையொன்றினுள் விழுந்துவிட்டதான உணர்வைத் தவிர்க்கவே முடியவில்லை. இப்போதெல்லாம் ‘கோபத்தை ஆக்கபூர்வமாக மாற்றுங்கள்’என்ற வார்த்தைகளை, கொஞ்சம் பரிகாசத்தோடு பார்க்கவாரம்பித்திருக்கிறேன். ‘இனி என்ன’என்ற விட்டேற்றித்தனம் பெருக வரலாற்றுக் குருடாகிவிட்டேன். செய்திகளை அறிவதில் முன்புபோல ஆர்வமில்லை. தனிப்பட்ட முறையில் அத்தன்மை எனக்கும் வசதியாயிருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட, தெருவோரம் கைவிடப்பட்டு வளரும் குழந்தையின் முரட்டுத்தனம் புதிதாகக் குடிபுகுந்திருக்கிறது.

எது எவ்வாறு இருப்பினும், இனி மீதமுள்ள நாட்களை வாழ்ந்தே கழிக்கவேண்டும் என்ற உண்மையை நேரெதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு ஆதாரமாக எதனையாவது பற்றிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. எனது பற்றுக்கோடாக நான் தேர்ந்தது எழுத்தன்றி வேறல்ல. பலவிதமான அரசியல்களைத் தாண்டி அது எவ்வளவுதூரம் கவனிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. ‘நான் எழுதுகிறேன்…’அவ்வளவுதான்! எழுத்தும் வாசிப்பும் இல்லையென்றால் நான் சிதைந்து சீரழிந்துபோவேன் என்பது மட்டுமே எனக்குத் தெரிகிறது.

எனக்கு அளிக்கப்பட்ட நட்சத்திரவாரத்தில் தீவிரமான, இறுக்கமான விடயங்கள் எதையும் பேசுவதில்லை நினைத்திருந்தேன். கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட குழந்தையின் மனநிலையில்- ஒழுங்கமைக்கப்படாத சிந்தனை எவ்விதம் எழுத்து வடிவமாகிறது என்பதைக் காண எனக்கும் ஆவல்தான். ஆனால், தறிகெட்ட பரிசோதனைகளுள்ளும் ஒரு ஒழுங்கு கூடிவிடும் என்பதற்கு இந்த அறிமுகப்பதிவே உதாரணமாயிற்று. இதை நான் எத்தனை மெல்லியதாக, விளையாட்டாக எழுத நினைத்திருந்தேன்…. ஈற்றில் இப்படியாகத்தானே முடிந்தது?

‘நான்… நான்..’என்று எழுதியிருந்தாலும், மேலே குறிப்பிட்ட ‘தொய்வு மனோநிலை’ என்னைப்போன்ற ஏதிலிகளாகிய, அநாதைகளாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோருக்குப் பொருந்தும். ‘நான்’என்பதை இங்கே அகங்காரமாகக் கொள்ளவேண்டியதில்லை. தன்னிலை விளிப்பு என்பது மனதைப் பிரதியாக்க மிகவும் உதவுகிற காரணத்தால் அதனையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிருக்கிறது.

எப்போதும்போல என்னுடைய இம்சைகளைச் சகித்து வாசிக்கும் இனிய வலையுலக நண்பர்களுக்கு நன்றி. இரண்டாவது முறையாக நட்சத்திரமாக்கி மேலதிக கவனம் பெறும் வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நெகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

தமிழ்நதி

45 comments:

தமிழ்நதி said...

கொஞ்சம் குழப்பமாகவே ஆரம்பித்திருக்கிறது நட்சத்திர வாரம். எத்தனை மணிக்கு எனக்கான வாரம் ஆரம்பிக்கிறது என்பது எனக்குத் தெரியாதிருந்தது. பதிவை எழுதிவைத்துவிட்டுப் போடாமல் இருந்தேன். பிறகு முகப்பில் பார்த்ததும் வழக்கம்போல கருவிப்பட்டையில் 'அனுப்பு'கொடுத்துவிட்டேன். அடுத்த பதிவுக்கு 'அனுப்பு'என்று அழுத்தவேண்டியதில்லை என்று தெரிகிறது. அது தானாகவே முகப்பில் தோன்றும் என்று சிற்றறிவுக்கெட்டியிருக்கிறது. இணையத்தை மேயும் நேரத்தில் கொஞ்சத்தை தமிழ்மண நுட்பங்களைத் தெரிந்துகொள்வதிலும் செலவழித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் இனியும் அது எவ்வளவிற்குச் சாத்தியமாகிறதென்று:)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் தமிழ்நதி! எப்போதும் உங்கள் இடுகைகளை வாசிக்க காத்திருக்கிறேன்!

selventhiran said...

ம் நடத்துங்க... நடத்துங்க...

பூனைதான் என்னை கடிக்க வருகிறது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்!!!!!!!!!

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் தமிழ்நதி... :-)

anujanya said...

வாழ்த்துகள் தமிழ்நதி. வழமை போலவே மிளிருங்கள்.

அனுஜன்யா

வாசுகி said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி.
நட்சத்திர வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பதிவாவது போடுங்க.
உங்களது எழுத்துக்களை வாசிக்க ஆவலாக உள்ளோம்.

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா :)

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள்.
உங்களின் மனநிலைகளை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த ஒரு வாரம் உங்கள் எழுத்துக்களை அதிகமாக வாசிக்க முடியும் என்பது சந்தோஷம் தருகிறது.

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள்!!!

ஈரோடு கதிர் said...

//செய்திகளை அறிவதில் முன்புபோல ஆர்வமில்லை. தனிப்பட்ட முறையில் அத்தன்மை எனக்கும் வசதியாயிருக்கிறது.//

//இனி மீதமுள்ள நாட்களை வாழ்ந்தே கழிக்கவேண்டும் என்ற உண்மையை நேரெதிர் கொள்ளவேண்டிய//

//‘தொய்வு மனோநிலை’ என்னைப்போன்ற ஏதிலிகளாகிய, அநாதைகளாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோருக்குப் பொருந்தும்.//

மனதிற்குள் இருந்த போரட்டகுணம் ஒரு கையாலாகத்தனத்திற்கு நம் எல்லோருக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளதை வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது...மனது சற்றேனும் மேம்பட வாழ்த்துகிறேன்....

அருண்மொழிவர்மன் said...

வாழ்துக்கள். உங்களின் மிகச் சிறந்த சில எழுத்துக்களை இந்த வாரத்தில் கொடுப்பதன் மூலம் இன்னும் பெரிய கவனத்தைப் பெற வாழ்த்துகிறேன்

சத்ரியன் said...

"தமிழகத்தின் வடமேற்கு எல்லையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் உயிர்ப்பெற்ற எனக்கே இன்றைய ஈழத்தின் நிலை ஏற்க முடியாமல் உறக்கங்கெட்டு தொடர்பற்ற சிந்தனைகளினூடே நாட்களைக் கடக்கிறேன் தோழி.ஈழத்திலே கருவானவள் நீ.உன் மன‌நிலை உணரமுடிகிறது என்னால்..."

இவ்வார நட்சித்திரமாய் பிரகாசிக்க என் வாழ்த்துகள்.

சென்ஷி said...

வாழ்த்துகள் தமிழ்நதி... :-)

M.Rishan Shareef said...

முதலில் மின்மினிச் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் !

//எது எவ்வாறு இருப்பினும், இனி மீதமுள்ள நாட்களை வாழ்ந்தே கழிக்கவேண்டும் என்ற உண்மையை நேரெதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு ஆதாரமாக எதனையாவது பற்றிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. எனது பற்றுக்கோடாக நான் தேர்ந்தது எழுத்தன்றி வேறல்ல. பலவிதமான அரசியல்களைத் தாண்டி அது எவ்வளவுதூரம் கவனிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. ‘நான் எழுதுகிறேன்…’அவ்வளவுதான்! எழுத்தும் வாசிப்பும் இல்லையென்றால் நான் சிதைந்து சீரழிந்துபோவேன் என்பது மட்டுமே எனக்குத் தெரிகிறது.//

இந்த வரிகளில் என்னையும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடிகிறது. நமக்கு எழுத்தாவது இருக்கிறதே என்று ஆசுவாசம் கொள்வதைத் தவிர, வேறு வழி? :(

sathiri said...

வாழ்த்துக்கள் வருத்தத்துடன்

மலைநாடான் said...

சொல்லாத செய்திகள் நிறைய உண்டு. சொல்லுங்கள்..

குட்டி ரேவதி said...

"எனக்கு அளிக்கப்பட்ட நட்சத்திரவாரத்தில் தீவிரமான, இறுக்கமான விடயங்கள் எதையும் பேசுவதில்லை நினைத்திருந்தேன்."

அன்பு மிக்க தமிழ்நதி, இப்படி நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படி தீவிரமாக, மீண்டும் மீண்டும் பேசவேண்டிய மனநிலையிலிருந்து நீங்கள் துவண்டுபோக வேண்டியதில்லை.

நுனிப்புல் மேய்பவர்களும் தீவிரத்தின் கரையை வெட்டி வாழ்பவர்களும் அவர்களின் மனநிலையை ஒரு பொழுதும் கைவிடுவதில்லை கவனித்திருக்கிறீர்களா?
தமிழ்மண நட்சத்திரவாரம் உங்களின் தீவிரமான சிந்தனைப்பக்கங்களையும் வெளிக்கொணரட்டும் வாழ்த்துக்கள், தமிழ்நதி.

thamizhparavai said...

நட்சத்திர வாழ்த்துக்கள்...
இதுவரை படித்ததில்லை.. படிக்கலாம்...

தமிழன்-கறுப்பி... said...

நட்சத்திர வாழ்த்துக்கள்...

கையேடு said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் தமிழ்.

உங்களின் எழுத்துக்களை வாசிக்க எப்போதும் போல அளவு கடந்த ஆர்வத்துடன்......

லக்கிலுக் said...

நட்சத்திர வாழ்த்துகள்!

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

என்னைபோன்ற சிற்றறிவாளர்களுக்கும் புரிவது போல் எழுதினால் நன்றாக இருக்கும்!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் தமிழ்நதி... :-)

Anonymous said...

வாழ்த்துகள் தமிழ்நதி!

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

geevanathy said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

geevanathy said...

என்னைப் பொறுத்தளவில் நான் அதீத நம்பிக்கையோடிருந்தேன்.....................
//யாரிடமும் சொல்லியழ முடியாத இறுக்கமும் பதட்டமும் மனசினுள் பாறாங்கற்களென விழுந்துவிட்டன.//

உங்களால் எழுதவாவது முடிகிறது....

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

சகாதேவன் said...

இந்த வாரம் அசத்தப் போவது நீங்கதானா?
அசத்துங்க. படிக்கிறோம்.
சகாதேவன்

matharasi said...

வாழ்த்துக்கள் யக்கோவ் ..தொடருங்கள்

துளசி கோபால் said...

நல்வரவு நதி.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

எப்போதும் உங்கள் அன்பு என்னை நெகிழ்ந்துபோகும்படி செய்கிறது. இணையத்தில் எழுதுவதற்கும் அச்சில் எழுதுவதற்கும் இடையிலான வித்தியாசம் உடனடியான எதிர்வினைகளே. எங்கேயோ இருக்கும் முகமறியாத என்னிடம், என் எழுத்திடம் நீங்கள் கொள்ளும் நெருக்கத்தினாலேயே தொடர்ந்து எழுதமுடிகிறது. நட்சத்திர வாரத்தில் வந்து வாழ்த்திய அபி அப்பா, சந்தனமுல்லை, செல்வேந்திரன், குறை ஒன்றும் இல்லை, நேற்றுச் சந்தித்த பைத்தியக்காரன்:), அனுஜன்யா, வாசுகி, ஆயில்யன் தம்பி, மாதவராஜ், விஜய் ஆனந்த், கதிர், அருண்மொழிவர்மன், உணர்வோடு வரவேற்ற கோ.கண்ணன், சென்ஷி, அன்புச் சண்டையிடும் ரிஷான் ஷெரீப், சாத்திரி, மலைநாடான், குட்டி ரேவதி, தமிழ்ப்பறவை, தமிழன் கறுப்பி, கையேடு, அமிர்தவர்ஷினி அம்மா, லக்கிலுக், வால்பையன், எம்.எம்.அப்துல்லா, புனிதா, கோவி கண்ணன், திகழ்மிளிர், ஜீவராஜ், கல்ப் தமிழன், சகாதேவன், மதராசி, துளசி கோபால் அனைவருக்கும் நன்றி.


வால்பையன்,

"என்னைப் போன்ற சிற்றறிவாளர்களுக்கும் புரிகிறாற்போல எழுதினால் நன்றாக இருக்கும்"

நான் எழுதுவது புரியவில்லையா? மிக எளிமையாகத்தானே எழுதுகிறேன்... இதற்குமேல் கீழிறங்கினால்... அவ்வளவுதான் தம்பி.

மலைநாடான்,

சொல்லி அயர்ந்து சொல்லறுந்த காலம் இது:( எனினும் ஏதாவது சொல்ல விளைகிறேன்.

செல்வேந்திரன்,

பூனை வாசிப்பைக் கெடுப்பதாகச் சொல்கிறீர்கள். நிறைய நாள் வளர்த்துவிட்டேன். வெளியில் அனுப்பக் கவலையாக இருக்கிறது. பெரிதாக வேறு யாரும் complaint பண்ணவில்லை. எனக்காகக் கொஞ்சம் இந்தப் பூனைக்குட்டியைப் பொறுத்துக் கொள்ளுங்களேன்:)

ரேவதி,

நீங்கள் சொல்வது சரியே. ஆனால், தீவிரத்தோடு தீவிரமாக எழுதிக் கண்ட பயன் என்ன என்ற அயர்ச்சியினால் அவ்விதம் எழுதினேன். நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் "எக்காரணங் கொண்டும் உங்கள் எழுத்தை எளிமைப்படுத்தாதீர்கள். உண்மையிலேயே புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் வாசிப்பினை மேம்படுத்திக் கொள்ளட்டும்"என்று. அதே மனோநிலைதான் தொடர்ந்திருக்கிறது. இன்னும் இன்னும் செறிவோடு எழுதவே முயற்சிக்கிறேன். என்னதான் விளையாட்டுத்தனமாக எழுதவேண்டுமென்று நினைத்தாலும் கடைசியில் அது சென்று முடிவது தான் தேர்ந்த தளத்திலாகவே இருக்கிறது. நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் சகோதரி தமிழ்நதி!

SAKMohan said...

தமிழ் நதி அவர்களே,

ஈழத்தில் நடந்தேறியிருக்கின்ற சம்பவங்களினால் ஒன்று மட்டும் புலப்படுகின்றது....நான் தமிழன் மட்டுமே....இந்தியன் அலல.

வாழ்த்துக்கள்....

Mohan

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தமிழ்நதி.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்!

சாந்தி நேசக்கரம் said...

நதி நட்சத்தரமாகிறது. பாராட்டுக்கள்.
மெல்லெனப்பாயும் நதி கல்லையும் உருட்டிச் செல்லுமாம். இந்த நதியின் கணணியிலிருந்து காலப்பெருநதி ஊற்றெடுத்துப் பாயட்டும்.

சாந்தி

பதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி....

:)

ஊர் சுற்றல் அதிகமாகிவிட்டதால் இந்தத் தாமதமான பின்னூட்டம் !!!!!!!!

தென்றல் said...

வாழ்த்துகள், தமிழ்நதி!

பூனைதான் 'எனக்கும்' பயத்தை ஏற்படுத்துகிறது. கூகிள் ரீடரில் வாசிக்கும்பொழுது 'எந்த' பிரச்சனையும் இல்லை ;)

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி!

ஜோ/Joe said...

வாழ்த்துகள்!

க. தங்கமணி பிரபு said...

வணக்கம்,
வாழ்த்துக்கள்.
முன்பு ஈழ நண்பர்களைக் காணும்போதெல்லாம், எப்படியும் இவர்கள் நலம் காண்பார்கள். தமிழைப் பிரதானமாகக் கொண்ட ஒரு நாடு அமையும், நான் முன்பு கேள்விப்பட்ட பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு தமிழ்-நாடு அமையப்போகிறது. அங்கே நான் மொழிப்பிரச்சணையில்லாத சுற்றுலா பயணியாக செல்வேன். வரும் காலங்களில் உலக மேடைகளில் தமிழனுக்கும் கட்டாயப்படுத்தப்பட்ட இந்திய முகமன் 'நமஸ்கார்' என்பதோடு தமிழீழத்தின் மூலம் 'வணக்கம்' என்பதும் புழக்கத்துக்கு வரும் என்கிற கனவுகளெல்லாம் சிதறி உருக்குலையும் போதுதான் உறக்கம் விடுபட்டது. என் இனம் என்கிற வாய்ச்சொல் தவிர ஒரு கைப்பிடி மண்ணை வாரிக்கொடுப்பதற்கொப்பான செயலைக்கூட செய்யாத தமிழனாகிப் போனேனே என்கிற குற்ற உணர்வுதான் இப்போ!

கோபம் பிரதானமாக தென்படும் உங்கள் எழுத்துக்களைக் காணும்போது வலியும், பதிலுக்கு என்ன பேசினாலும் பொருத்தமில்லை என்கிற கையாலாகத்தனமும் வாயடைக்கிறது. இந்த நட்சத்திர கால்கட்டம் உங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கொடுக்குமானால் மகிழ்வேன். வாழ்த்துக்கள்.