6.28.2009

உதிரும் நட்சத்திரம்
என் அன்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,

கடந்த 22ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு தமிழ்மணத்தின் நட்சத்திரமாக எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்வடைகிறேன். முன்பே சொன்னதுபோல அச்சு ஊடகங்களில் கிடைக்காத அனுகூலங்களில் ஒன்றாகிய உடனடி எதிர்வினையை இணையத்தில் எழுதுவதன் மூலம் அனுபவிக்க முடிவதும் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். உடனடி எதிர்வினைகள் யாவுமே மகிழ்ச்சியை அளிக்கத்தக்கதாக இருக்காது என்பதையும் சொல்லவேண்டியதில்லை. எமது அரசியல், சமூக பார்வைகளுக்கு (அப்படி ஒன்று இருந்தால்) மாற்றுக் கருத்துடையவர்கள், ஏனையோரைப் புண்படுத்துவதொன்றே தொழிலாகக் கொண்டவர்களால் வழக்கம்போல சில மனவுளைச்சல்களுக்கும் ஆளாக வேண்டியேற்பட்டது. எது எவ்வாறு இருந்தபோதிலும், கடந்த மூன்றாண்டுகளாக ‘இளவேனில்’என்ற வலைப்பூவில் எழுதிவரும் என்னை, இணையம் என்ற வாசல் வழியாக ஏராளமான நண்பர்கள் வந்து சேர்ந்ததை வாழ்வில் நான் அடைந்த பெரும் பேறாகவே கருதுகிறேன்.

ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் பொருட்டு நேற்றும் இன்றும் மதுரையில் தங்கவேண்டியதாயிற்று. இணையவசதி, நேரம் ஆகியன நான் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. அதனால் நேற்று (ஜூன் 27) அன்று பதிவு எதுவும் போட இயலவில்லை. மேலும், உங்களால் இடப்பட்ட பின்னூட்டங்களுக்கும் சரிவரப் பதிலளிக்கவும் இயலவில்லை. மன்னிக்கவும். இந்தக் கூட்டம் நிறைவுற்றதும் உங்களோடான தொடர்பாடலை ஒழுங்காகப் பேணுவேன் என்று உறுதியளிக்கிறேன். வழக்கத்தைக் காட்டிலும் அதிக கவனம் குவியக்கூடிய- அரிதாகக் கிடைத்த வாய்ப்பை உதறவிரும்பாமல் ஒரு வாரம் நட்சத்திரமாக இருக்கச் சம்மதித்தேன். ஆனால் மனநிலையும் சூழ்நிலையும் எனக்கு எதிராகவே இயங்கின. இருந்தபோதிலும், இந்த ஒரு வாரமும் ஓரளவுக்காவது பதிவுகளை வலையேற்றி, உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருப்பதாகவே நம்புகிறேன்.

எனது எழுத்துக்களை வந்து வாசிப்பதோடல்லாமல் தொடர்ந்து பின்னூட்டமும் இட்டு எனக்கு உற்சாகமூட்டும் எனது இனிய நண்பர்களின் தோளணைத்து நன்றி சொல்கிறேன். ஒவ்வொருவராகப் குறிப்பிட்டுச் சொன்னால் பெயர்கள் தவறவிடப்பட்டுவிடுமோ என்றஞ்சுவதால், ஒட்டுமொத்தமாகச் சொல்கிறேன் ‘நன்றி… நன்றி… நன்றி’

எழுதவந்த காலத்திலிருந்து இன்றுவரை ஒரு சிறு மனக்கசங்கலும் ஏற்படாதபடி அனுசரணையோடும் அன்போடும் உற்சாகப்படுத்திவரும் தமிழ்மண நிர்வாகத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள். நட்சத்திரமாக இரண்டாவது முறையும் என்னைப் பரிந்துரைத்த உள்ளத்துக்கு பிரத்தியேக நன்றி:) நிறையச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. சொல்லப்பட்ட வார்த்தைகளைக் காட்டிலும் சொல்லப்படாத வார்த்தைகளுக்கு சக்தி அதிகம் என்று இன்னமும் நம்புவதால் இதைக் கடந்து செல்கிறேன்.

பலவழிகளிலும் வாழ்வும் வரலாறும் நம்மைக் கைவிட்டுவிட்டாலும், மீதி நாட்களை வாழ்ந்தே கடக்கவேண்டிய துயரத்தோடு, மீண்டும் நன்றி சொல்லி விடைபெற்றுச் செல்கிறேன். தொடர்ந்தும் எனது எழுத்துக்களுக்கு நீங்களும் உங்கள் எழுத்துக்களுக்கு நானும் பரஸ்பரம் நண்பர்களாயிருப்போம்.


தமிழ்நதி

6 comments:

soorya said...

என்னதான் இருந்தாலும்
..உதிரும் நட்சத்திரம்...என்ற தலைப்பு ஏதோ செய்கிறது.
துதி பாடவில்லைத் தோழி.
ஒளிரும் நட்சத்திரமாகவே..தங்கள் எழுத்தும் நடையும் மொழியும் நன்றாகவே இருக்கின்றன. தொடரட்டும் தங்கள் எழுத்து..ஒளிரட்டும்.
நன்றி.

தமிழன்-கறுப்பி... said...

நிறையப்பின்னூட்டம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், எழுதாமல் விட்டுவிட்டேன்.

அந்த கவிதைகள் திரும்பத்திரும்ப வாசித்தேன்..

ஒழுங்கென்பது எனக்கும் பிடிக்காத விசயம் அந்த பதிவுக்கு அய்யனாரின் பின்னூட்டத்தோடு ஒத்துப்போகிறேன்.

இந்த பதிவு கூட காலையிலேயே படித்து விட்டேன்.

நன்றி இன்னும் எதிர்பார்த்தேன்.

selventhiran said...

அதுக்குள்ள ஒருவாரம் ஆயிடுச்சா...?!

வாசுகி said...

தமிழ் நதி,
நட்சத்திர வாரத்தில் உங்களது பல படைப்புகள் படிக்க கிடைத்ததில்
மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளோம்.
நன்றி.

நேசமித்ரன் said...

மின்னற்பொழுதே காலம் !நீள விரும்பும் நிமிஷங்களை இடை வெட்டுவதும் , மாள விரும்பும் நிமிஷங்களை நீட்டுவித்தலுமாய் ஒலி இருள் விளையாட்டு...
நன்றி சொல்லாவிட்டாலும் நல்லபடைப்பின் பின் தொடரும் விழிகள் தொடர்ந்தபடி இருக்கும்

வசந்தன்(Vasanthan) said...

அனைத்து இடுகைகளும் வாசித்தேன்.

நன்று.