5.19.2007

நதியின் ஆழத்தில்…


நதியின் மேற்பரப்பில்
பூக்கள் சருகுகளுடன்
கழிவுகளும் மிதக்கும்
தாகித்த மான்களை
புலிகள் பசியாறிய
குருதி கலந்து
கூடவே ஓடிவரும்

கடந்து வந்த காடுகளின்
நிழல் நினைவு…
கரைத்த சாம்பல்…
பின்னிராப்பொழுதொன்றில்
கரையோரக் கல்லமர்ந்து
பிரிந்த துணை நினைவில்
இருளும் கரையும்படி
ஒருவன் அழுத குரல்
எல்லாம் சுமந்தபடி
இன்னும் நடக்கிறது

எத்தனை பேர் உமிழ்ந்த எச்சில்
எத்தனை பேர் எறிந்த கற்கள்
சிறுநீர் மலம் விந்து
தன்னைத்தான் அலசி
தளராது போகும் நதி

ஆழத்தின் குளிர்மையை
பேசித் தேய்ந்து அடிமடியில்
மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை
கடலின் நெடுந்தொலைவை
எவரும் அறிவதில்லை

கடந்த வழியொன்றில்
கரையோரம் நிழல்விழுத்தி
காற்றடிக்க கண்ணிமைத்து
நெடுநாளாய் நிற்கும்
மருதமரத்தின்மேல்
நதி கொண்ட காதலை
அந்த நாணலும் அறியாது.பிற்குறிப்பு: திருத்தி எழுதியது. ஒரு சோதனை (உங்களுக்கல்ல :)) நிமித்தம் போடப்பட்டது.

14 comments:

காயத்ரி சித்தார்த் said...

யப்பா!! எத்தனை முறை படித்தேன் இதை? ஒவ்வொரு வரியிலும் சிக்கிக் கொள்ளும் மனதை மீட்டெடுக்க தனி பிரயத்தனம் தேவைப்படுகிறது.!! நல்லாருக்குங்க மேடம்..!

தமிழ்நதி said...

என்னதிது காயத்ரி... என்னை யாராவது அடிக்கடி பாராட்டினால் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அடிக்கப்போகிறார்களோ என்றொரு பயம் வருகிறது:) அது சரி... என்ன 'மேடம்'என்றெல்லாம் மரியாதை தூள்பறக்கிறது. ஏதோ தலைமை ஆசிரியரை அழைக்கிற மாதிரி இருக்கிறது. 'தமிழ்நதி'என்றே அழையுங்கள். அதுதான் இனிமையாக இருக்கிறது. வர வர சொந்தப்பெயரை மறந்துபோய்விடுவேன் போலிருக்கிறது.

காயத்ரி சித்தார்த் said...

//தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அடிக்கப்போகிறார்களோ என்றொரு பயம் வருகிறது//

நீங்க எழுதறத நிப்பாட்டினா ஒரு வேளை இது நடக்க சாத்தியமிருக்கு! :)போங்க! இதுக்கு தான் நான் பின்னூட்டமே போடறதில்ல!!

அபிமன்யு said...

//என்னை யாராவது அடிக்கடி பாராட்டினால் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அடிக்கப்போகிறார்களோ என்றொரு பயம் வருகிறது:)//

:) :)

//கடந்து வந்த காடுகளின்
நிழல் நினைவு…
கரைத்த சாம்பல்…
பின்னிராப்பொழுதொன்றில்
கரையோரக் கல்லமர்ந்து
பிரிந்த துணை நினைவில்
இருளும் கரையும்படி
ஒருவன் அழுத குரல்
எல்லாம் சுமந்தபடி
இன்னும் நடக்கிறது//

என் ஞாபக இடுக்குகளில் இன்னும் இருக்கிறது பின்னிரவு நதியின் மவுனம்..தேர்ந்த கவித்துவமான வரிகள்..

மஞ்சூர் ராசா said...

நதியைப்பற்றிய நல்லதொரு கவிதை.
நதி என்றால் நதி தானா? என்ற கேள்வியை கொஞ்சம் மாற்றி போட்டிருக்கலாமோ?
அழகாக வந்திருக்கிறது. இறுதி வரிகளில் எப்பொழுதும் தொடர்ந்து வரும் மெல்லிதான சோகம் இழையோடுகிறது.

வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

"நீங்க எழுதறத நிப்பாட்டினா..." என்று மனசைப் படித்தாற்போல சொல்கிறீர்கள் காயத்ரி! அதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் களைப்பு எல்லோருக்கும் உண்டாகும்போல... பின்னூட்டம் போடுறதை நிறுத்திடாதீங்க. அப்புறம் எனக்கு நடக்குமோ என்று அஞ்சுவது உங்களுக்கு நடக்குமாக்கும் :) புரிகிறதா... பழைய பின்னூட்டங்களை வாசியுங்கள்.

நன்றி அபிமன்யு! உங்கள் கவிதைகளை இப்போது காணவில்லையே...

மஞ்சூர் ராசா!இது முன்னொரு காலத்திலே போட்ட கவிதைதான். தொகுப்பிற்காக தூசி தட்டிக்கொண்டிருக்கிறேன். 'நதி என்றால் நதிதானா...' மாற்றுவது பற்றி நானும் நினைத்தேன், வேறேதோ கவிதை ஞாபகம் வருவதால். நற்றிணையை மறக்க முடியவில்லை.:)

லக்ஷ்மி said...

அருமையான வரிகள் தமிழ்நதி.

தென்றல் said...

/ஆழத்தின் குளிர்மையை
பேசித் தேய்ந்து அடிமடியில்
மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை
கடலின் நெடுந்தொலைவை
எவரும் அறிவதில்லை.
/
வாழ்க்கையின் நிசப்த உண்மைகள்..?!

தமிழ்நதி...
அவந்திகா தங்கச்சி உங்களை அம்மா-கிறாங்க..
காயத்ரி உங்களை மேடம்-கிறாங்க..
அய்யனார் கூட ஏதோ சொன்னாரே ..
ம்ம்.. மறந்துட்டேன் ;)

சரி..உங்களை Scarborough ல வந்து பார்த்துட்டா போச்சி..!

தமிழ்நதி said...

நன்றி லஷ்மி.

\\அவந்திகா தங்கச்சி உங்களை அம்மா-கிறாங்க..
காயத்ரி உங்களை மேடம்-கிறாங்க..
அய்யனார் கூட ஏதோ சொன்னாரே ..
ம்ம்.. மறந்துட்டேன் ;)

சரி..உங்களை Scarborough ல வந்து பார்த்துட்டா போச்சி..!\\

என்ன தென்றல்! நதிக்கு வயதில்லை தெரியாதா உங்களுக்கு. அவந்திகா அப்படியா சொன்னாங்க... என்னை அப்படி யாருமே இதுவரைக்கும் அழைத்ததில்லை. அழைத்திருந்தால் மகிழ்ச்சி:) காயத்ரிக்கு யாரோ என்னைப் பற்றி ஏதோ சொல்லியிருப்பார்கள் போல... 'மேடம்'என்கிறார். கழிப்பறையின் சுவரில் சிந்திய சிறுநீர்க்கறை ஒருவனுக்கு ஓவியமாகத் தெரிந்ததாம். மற்றவனுக்கு கோடாகவே துலங்கியதாம். அவரவர் பார்வைக்கிணங்க நானும் மாறுகிறேனோ என்னவோ... ஸ்காபுரோவுக்குப் போனால் என்னைச் சந்திக்கலாமென்றா நினைத்திருக்கிறீர்கள் தென்றல் ம்கூம் நான் அங்கில்லையாக்கும். நீங்கள் மட்டுமா தென்றல் நானும்தான். எல்லா இடங்களிலும் இருக்குமென் வீடு :)

P said...

உங்கள் முன்னைய பதிவுக்கு பிரசுரிக்கப்படாத பின்னூட்டம்...
-------------------------
http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_23.html
"துப்பிய சிறிமையுள்ள பெரியோரை
என் சுள்ளிக் கம்பால் சுளர அடிக்கவும்,

என் இனிய மீன்குட்டியை
கல்லால் கொன்ற கயவன் மீது
பெருங்கொப்பொன்றை சாய்த்து
போர்தொடுக்கவும்,

படர்ந்திருக்கும்
சருகுகளையும் கழிவுகளையும்
என் வேர்க்கால்களை பரப்பி
உறுஞ்சியுண்டு சுத்திகரிக்கவும்

நேரமில்லை பாரும் எனக்கு..

ஆம்..
என் அடி வேரை
ஆழ அவளுள் பரப்பி
கூடிக்குலவுவதை
பொறுக்காத கதிரவன்
தன் நெருப்புவாயால்
உறுஞ்சுகிறான் அவளை..
ஆழம் தெரியும் வரை
வற்றிவிட்டாள் பாவம் அவள்..

உயர உயர வளர்ந்து
எட்டும் திசையெங்கும்
கிளை பரப்பி
கொடிய ஆதவனின்
கண்களை மறைக்க
போர் தொடுக்கிறேன்..

வெல்லமாட்டேன் தெரியும்
ஆனாலும் பொருதுவேன் அவளுக்காக!"
--------------------------------
"சிறுவர் உமிழ்ந்த எச்சில்" என்றிருந்தது...சிறுவர் எல்லோரும் பெரியோர் ஆகிட்டார்களா இப்ப? :)

-ganeshkj said...

சென்ற பதிவை விட அர்த்தத்தின் செறிவு கூடியிருக்கிறது. ஒரு சின்ன comment, if you dont mind.. "கழிவுகள்" என்ற வார்த்தைப் பிரயோகமே தேவையான அழுத்தம் தந்துவிடவில்லையா ? சிறுநீர் மலம் என்று அதன் details கவிதையின் flow-வில் நெருடலாக உணர்ந்தேன்.

தமிழ்நதி said...

"சிறுவர் உமிழ்ந்த எச்சில்" என்றிருந்தது...சிறுவர் எல்லோரும் பெரியோர் ஆகிட்டார்களா இப்ப? :)

ஆம்! சிறுவர்கள் வளர்ந்துவிட்டார்கள். காலம் விரைந்துகொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கட்டும்:)

பேசும் அமைதி!மேற்கண்ட கவிதையை யார் எழுதியது...? வ.ஐ.ச.ஜெயபாலனா...? அல்லது நீங்களேதானா... நாணலின் கவிதை நதியினுடையதை விட நன்றாக இருக்கிறது.

கணேஷ்!நீங்கள் சொன்னது சரி. கருத்திலெடுக்கிறேன். மாற்றியபின் முழுமை பெறாவிடில் உள்ளபடியே விட உத்தேசம். நன்றி.

பாரதி தம்பி said...

//பின்னிராப்பொழுதொன்றில்
கரையோரக் கல்லமர்ந்து
பிரிந்த துணை நினைவில்
இருளும் கரையும்படி
ஒருவன் அழுத குரல்..//

இம்மாதிரியான வார்த்தைகளை உங்களின் பெரும்பாலான கவிதை, கட்டுரைகளில் காண முடிகிறது.

நந்தா said...

//பின்னிராப்பொழுதொன்றில்கரையோரக் கல்லமர்ந்துபிரிந்த துணை நினைவில்இருளும் கரையும்படி ஒருவன் அழுத குரல்எல்லாம் சுமந்தபடி இன்னும் நடக்கிறது//

இந்த சோகம் தான் உங்களுடைய ஒவ்வொரு கவிதைலயும் என்னைக் கட்டிப் போட்டுடுது.

//எத்தனை பேர் உமிழ்ந்த எச்சில்எத்தனை பேர் எறிந்த கற்கள்சிறுநீர் மலம் விந்துதன்னைத்தான் அலசிதளராது போகும் நதி //

நல்லதொரு கோணம். அதைவிட உயிரை இழுத்துப் பிடிக்கும் இந்த வரிகள். என்னை எங்கே இழுத்துச் செல்கிறது.

//கடந்த வழியொன்றில்கரையோரம் நிழல்விழுத்திகாற்றடிக்க கண்ணிமைத்துநெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்நதி கொண்ட காதலை அந்த நாணலும் அறியாது.//

"நதியின் பிழையன்று" வரிகளின் தாக்கமா என்று எனக்குத் தெரிய வில்லை. கடந்த ஒரு மணி நேரமாக என்னை யோசிக்க வைத்துள்ளது இந்த வரிகள்......