5.31.2007

பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது


சென்னை
பகல் 10:30
வெயிலும் இருபதின்ம பையன்களும்
படுத்திருக்கும் அறை வாசலில் நிற்கிறேன்
தரையதிர விழும் பாத்திரமாய்
என் குரலுயர்த்தி
கனவுகளின் இழை அறுக்கவே
முதலில் நினைத்தேன்

கடைவாயொழுகக் கிடக்கும் இளையவன்
காதலியின் பெயர் மாதுளா என்னும்போதில்
விழிகள் பூக்கின்றன அடர்சிவப்பில்
இலைகள் சிலிர்க்குமந்த
ஆலமர விழுதொன்றில்
அவள் அழுதிருக்கக்கூடுமென்றான்
காதல் பிரவகித்து வழியும்
பின்னேரப் பொழுதுகளில்
கடற்கரையோர கல்லிருக்கையில்
இருளும் அவனும் அமர்ந்திருப்பதை
காணாது கண்டதுண்டு

மற்றவனின் கண்களில்
புழுதிகிளர் ஒழுங்கைகள் எழுதப்பட்டிருக்கின்றன
நண்பர்கள் சைக்கிள்களை
உந்தி மிதித்துப் பறக்கிறார்கள்
நீச்சல் பழகிய நாட்களைச் சொன்னபோது
நீர்சுழித்தோடும் வாய்க்கால்களையும்
மீன்கொத்திகளையும் வயல்களையும்
நாங்கள் பார்த்தோம்
போகுமிடமெல்லாம் அவன்
நிலத்தைக் கொண்டு திரிகிறான்

கடந்த மாதம் வந்துசேர்ந்தவன்
மௌனம் பழகியவன்
‘அடித்தார்கள் அக்கா’என
கண்கள் தாழ்ந்திருக்கச் சொன்னான்
தன்னுடலில் ஒட்டிய சதைத்துணுக்கை
பதறிப்போய் பிய்த்தெறிந்த கணத்தை
பேச்சின்போது அவசரமாகக் கடந்தான்

என்னோடு அழைத்துவந்தவளிடம்
எழுதமுடியாமற்போன பரீட்சைத்தாள் மாதிரிகள்
நிறையவே இருந்தன
மரங்கள் அனுப்பும் காற்றினையொத்தவள்
சின்ன அன்புக்கும் கரைந்துவழிபவள்
இப்போதெல்லாம்
அனைவர் குரலையும் மூடுகிறது
அவள் கோபம்

கல்லூரிகளாலும் வேலைத்தளங்களாலும்
மறுதலிக்கப்பட்டவர்கள்
தூங்கும் பகற்பொழுது
பதட்டம் தருகிறது

திருவான்மியூர் கடற்கரையில்
அலைகள் கதைக்கின்றன
வேம்புகளும் குயில்களும் நிறைந்த
வீடுகளைப் பிரிந்து வந்த
பிள்ளைகளைப் பற்றி
என்னுடன் இப்போது
உயிருள்ள ஐந்து பிள்ளைகளும்
சில ஞாபகங்களும்
சொற்ப ரூபாய்களும் உள்ளன

இலங்கையில்தான் போர் நடப்பதாக
எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

22 comments:

மலைநாடான் said...

நிகழ்கால யதார்த்தம், சோகம்.

பதிவுக்கும், பகிர்வுக்கும், நன்றி.

செல்வநாயகி said...

:((

நிகழ்கால யதார்த்தம்.

த.அகிலன் said...

நான் தொலைத்துவிட்டிருக்கும் வாழ்வின் பசுங்கணங்களையும் குறிப்பாக என்னையும் இந்தக் கவிதையின் விரியும் தளங்களில் கண்டேன். வாசித்து முடிக்கையில் ஏனோ மனம் எனைமீறி விம்ம பார்த்தது.நிச்சயமாக இந்தக்கவிதைக்குள் நான் எந்தப்புள்ளியில் என்று தெரியாமல் சிக்கிக்கொண்டிருக்கிறேன் அல்லது நிறைந்திருக்கிறேன்.இப்போது உலர்ந்து போய்விட்டிருக்கும் என்பேனாவில் அழுதிருக்க வரிகள் இவை என்றம் தோன்றுகிறது. ஏதுமற்று முடியும் பகல்களும் வெறுமனே கனவுகளுற்று விரியும் இரவுகளும் எனக்கு இப்போதெல்லாம் கவிதைகளைத்தருவதில்லை.
அன்புடன்
தம்பி
த.அகிலன்

நந்தா said...

எங்களை எல்லாம் அழ வெச்சுப் பார்ப்பதே உங்கள் வேலையா போச்சு.

//என்னுடன் இப்போது உயிருள்ள ஐந்து பிள்ளைகளும்சில ஞாபகங்களும் சொற்ப ரூபாய்களும் உள்ளன
இலங்கையில்தான் போர் நடப்பதாகஎல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ///

ஒன்ணும் பேச முடியலை. துக்கம் தொண்டையை அடைக்குது.

பாலராஜன்கீதா said...

இன்றைய ( ஜூன் 6, 2007 தேதியிட்ட ) ஆனந்த விகடனில் உங்களின் இரு கவிதைகள் "இருப்பற்று அலையும் துயர்" மற்றும் "அற்றைத் திங்கள்" வந்துள்ளன. வாழ்த்துகள்.

கலை said...

வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

தமிழ்நதி said...

மலைநாடான்! கடற்கரையில் அமர்ந்திருக்கும் எங்கள் பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம் மனம் எப்படிக் கனத்துப்போகிறது தெரியுமா...

நன்றி செல்வநாயகி! தனிப்படப் பேசியிருக்கிறேன். அஞ்சல் பாருங்கள்.

அகிலன்! அந்தக் கவிதையை உங்களை நினைத்தும்தான் எழுதினேன். அதில் உங்களைக் கண்டதில் என்ன வியப்பு...?

நந்தா!நான் அழ வைக்கிறேனா... ஒவ்வொரு தடவையும் மழையைப் போலவே எழுத அமர்கிறேன். வெயிலோ தன்னை எழுதிக்கொள்கிறது. வலிந்து மாற்ற முடியவில்லை.

தெரிவித்தமைக்கு நன்றி பாலராஜன்கீதா! புத்தகம் வாங்கிவிட்டேன். நந்தாவின் பக்கத்திலும் பேசியிருந்தீர்கள். உங்கள் படைப்புக்களைப் பார்க்கவெனப் போனால்... ம்... காணவில்லை.

'வார்த்தைகள் எதுவும் வரவில்லை'வாழ்க்கை எழுத்தில் வந்தால் வார்த்தை வருவதில்லையாமே கலை:)

தென்றல் said...

தமிழ்நதி,

உங்களின் பல பதிவுகளுக்கு மறுமொழி சொல்ல வார்த்தைகளை தேடுவது ஒரு புறம் இருந்தாலும், மனதின் வலியை தடுக்க முடியவில்லை...

சில நேரங்களில் நந்தா சொல்வது போலகூட....

உங்கள் படைப்புக்களை விகடனில் படித்தேன். வாழ்த்துகள்..!

எப்பொழுதும் பிரகாஷ் ராஜ் தொடரை ஆவலுடன் முதலில் பார்ப்பேன்..
இந்தவாரம் 'தமிழ்நதி கவிதைகள்'... உங்கள் வலைப்பூவையும் குறிப்பிட்டு இருந்திருக்கலாம்.

மஞ்சூர் ராசா said...

"ஒவ்வொரு தடவையும் மழையைப் போலவே எழுத அமர்கிறேன். வெயிலோ தன்னை எழுதிக்கொள்கிறது. வலிந்து மாற்ற முடியவில்லை."

இந்த வரிகளே அனைத்தையும் சொல்லாமல் சொல்கின்றன.

சோமி said...

///திருவான்மியூர் கடற்கரையில்
அலைகள் கதைக்கின்றன
வேம்புகளும் குயில்களும் நிறைந்த
வீடுகளைப் பிரிந்து வந்த
பிள்ளைகளைப் பற்றி
என்னுடன் இப்போது
உயிருள்ள ஐந்து பிள்ளைகளும்
சில ஞாபகங்களும்
சொற்ப ரூபாய்களும் உள்ளன//

யாரை யார் தேற்றுவது...

களதிலிருந்தெழும் அழுகுரலின் பேரோசைக்கிடையில் கூடியழும் எங்கள் குரலும் ஒலியற்றுப் போகும்.

நள்ளிரவின் நீடித்த தனிமையிலேயே எப்போதும் உங்கள் கவிதை வாசிக்க கிடைக்கிறது.உங்கள் கவிதைகளின் கனத்தையும் நிசத்தின் வலிகளையும் சுமந்தபடியே மொட்டை மாடியில் நின்று நிலாவோடு பேச இதுதான் தோதான பொழுது....ம்.........

பாலராஜன்கீதா said...

ஆ.வி.யில் வந்துள்ள தங்கள் கவிதைகள் குறித்து மிதக்கும்வெளி சுகுணா திவாகர் அவர்கள் ஒரு வாழ்த்துப்பதிவு எழுதியுள்ளார்.

http://sugunadiwakar.blogspot.com/2007/06/blog-post.html

✪சிந்தாநதி said...

வாசித்து விட்டேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன சொன்னாலும் அது சம்பிரதாய வார்த்தையாக போய்விடும். :)

பங்காளி... said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி...

புதுசா குப்பை கொட்டினதால சமீபத்திய உங்க பதிவுகளை கவனிக்கலல.....

நேத்து காலைல விகடன்பார்த்தா...நீங்க...ஆச்சர்யமான அதே நேரத்துல அன்னியோன்யமான சந்தோஷம்...

சமீபத்திய உங்களோட எழுத்துக்கள் நீங்கள் வேறொரு தளத்திற்கு போய்விட்டதையே காட்டுகிறது...இன்னும் நெறய உயரம் போகனும்...போவீங்க...

கலக்குங்க தாயீ....

வல்லிசிம்ஹன் said...

அத்தனையும் உண்மை.
தெரிந்து இழைக்கப்படும் குற்றங்கள்.

கலங்க வைத்துவிட்டீர்கள்.

அழுத பிள்ளைகளைத் தேற்ற யார்.

Anonymous said...

போர்ச்சூழல் எனக்கு முற்றிலும் அன்னியமான ஒன்றென்றாலும், அது கொண்டு வரும் பிரிவும், ஏக்கமும் பொது என்ற அளவில் மனதை மிக கனமாக்கியது கவிதை.

காயத்ரி சித்தார்த் said...

குழப்பமாய் படித்துக் கொண்டே வந்தேன்.. கடைசி வரியில் யாரோ சில்லென்ற நீரை விசிறி ஊற்றினார்கள் முகத்தில். பின்னூட்டம் போட வார்த்தைகள் கைவசமில்லை தமிழ். நான் உங்களை வாசிக்க வந்தேன் என்பது மட்டும் உங்களூக்கு தெரியட்டும் போதும்.

Venkat said...

உங்களின் 'இருப்பற்று அலையும் துயர்' கவிதையை ஆனந்த விகடனில் வாசித்தேன்.அருமை.

// நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது //

இதில உங்களின visual thinking வியப்பூட்டுகிறது.

அதுபோல,'பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது'-ல்

//தரையதிர விழும் பாத்திரமாய்
என் குரலுயர்த்தி
கனவுகளின் இழை அறுக்கவே
முதலில் நினைத்தேன் //

காட்சிகளாக்கி(visual)ரசிக்க முடிகிறது.

Venkat said...

உங்களின் 'இருப்பற்று அலையும் துயர்' கவிதையை ஆனந்த விகடனில் வாசித்தேன்.அருமை.

// நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது //

இதில உங்களின visual thinking வியப்பூட்டுகிறது.

அதுபோல,'பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது'-ல்

//தரையதிர விழும் பாத்திரமாய்
என் குரலுயர்த்தி
கனவுகளின் இழை அறுக்கவே
முதலில் நினைத்தேன் //

காட்சிகளாக்கி(visual)ரசிக்க முடிகிறது.

தமிழ்நதி said...

அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் தென்றல்,மஞ்சூர் ராசா,சோமி,பாலராஜன்கீதா,சிந்தாநதி,பங்காளி,வல்லி சிம்ஹன்,சித்தார்த்,காயத்ரி,வெங்கட் அனைவருக்கும் நன்றி. கவனிக்கப்படாமல் போகிறபோது ஒரு சோர்வு உண்டாவது எல்லோருக்கும் இயல்பே. எழுத்து மற்றும் வாழ்க்கைக்கும் இது பொருந்தும். விகடனில் எனது கவிதைகள் வெளிவருவதன் முன்பிருந்தே என்மீது நீங்கள் பாராட்டிய அன்பின் காரணமாகவே நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன். விகடனில் வந்தபிற்பாடு தொலைபேசி அழைப்புகள்,தனி மடல்கள்,பதிவுகள்,பின்னூட்டங்கள் என்ற உங்கள் அன்பு மழையில் நனைந்து ஆனந்திக்கிறேன். கசப்பான பின்புலங்களை கண்ணீரில் எழுதிக்கொண்டிருந்த என் பாதையில் மலர்ந்திருக்கும் பூக்களை நின்று கவனிக்கிறேன். உலகம் அன்பினாலும் நட்பினாலும் ஆனது என்பதன்றி சொல்ல என்ன இருக்கிறது...?

பாலராஜன்கீதா said...

//கவனிக்கப்படாமல் போகிறபோது ஒரு சோர்வு உண்டாவது எல்லோருக்கும் இயல்பே. எழுத்து மற்றும் வாழ்க்கைக்கும் இது பொருந்தும். விகடனில் எனது கவிதைகள் வெளிவருவதன் முன்பிருந்தே என்மீது நீங்கள் பாராட்டிய அன்பின் காரணமாகவே நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன்.//

அன்புள்ள தமிழ்நதி அவர்களுக்கு,

தாங்கள் எழுதுவது வாழ்க்கைக்கு ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால் வலைஉலக எழுத்திற்குச் சரியாகப் பொருந்தாது என்று நினைக்கிறேன். பின்னூட்டங்கள் அளிக்காததால் தங்கள் பதிவுகள் வாசிக்கப்படுவதில்லை என்று வலைப்பதிவர்கள் வருத்தப்படவேண்டாம். பலருக்குப் படிக்கவே வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். படித்தாலும் பின்னூட்டமிட நேரமில்லாமல் இருக்கலாம். எப்படி இருப்பினும், தாங்களும் மற்ற வலைப்பதிவர்களும் அவ்வப்போது தங்களால் இயன்றதை வழக்கம்போல எழுதிக்கொண்டே இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

RBGR said...

உங்கள் படைப்பை விகடனில் படித்து மகிழ்ந்தேன்..!!

நாமறிந்தவர் நமது விகடனில் என்ற ஆனந்தத்தினை விட உங்கள் வரிகள் தந்த தாக்கம் இன்னும் நீடிக்கிறது.

வாழ்த்துகள்.

வாழ்க! வளமுடன்!

Jazeela said...

மன கனத்துப் போனது உங்கள் கவிதையினால். யதார்த்தம் சுடுகிறது.