உனது புத்தகத்தைத் தந்துபோகிறாய்
சொல்விழிகளால் அது
அண்ணாந்து பார்க்கிறது
விமர்சனங்களுக்கும் இதயங்களுக்கும்
இடையிலோர் பெருங்கடல்
இருள் திரைகளில் தீட்டப்படும்
பைசாச ஓவியங்கள்
மதுச்சாலைகளில்
கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலி
சில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறது
சஞ்சிகையொன்றில்.
அறிவாய் நண்ப!
கடன்பட்டவர்களும்
சில வார்த்தைகளுக்குக் கடமைப்பட்டவர்களே!
விருந்தாட போன வீட்டில்
தட்டுக்கருகில்
தொட்டுக்கொள்ள கவிதைகளை வைப்பரெனில்
கைகழுவி எழுந்துகொள்ளலே தர்மம்.
பட்டியலிடுவோரும்
தரவரிசையிட்டு ஓங்கித் தலையில்
அரக்குமுத்திரை அடிப்போரும்
பல்கிப்பெருகிய இந்நாளில்
நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்....
மரணதண்டனையை எழுதிக்கொண்டிருக்கும் விரல்களைவிட
பொய்க்கணக்கு எழுதி
தற்கொலைக்குத் தூண்டுகிறவனைவிட
ஒரு மதுக்குப்பி வாங்க
வற்றியுலர்ந்த மனைவியின் மூக்குத்தியை
அடகுவைத்துக் கையெழுத்திடுகிறவனைவிட
திருப்தியோடிரு!
நாம் கவிதை எழுதுகிறோம்
அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.
12 comments:
கொஞ்சம் புரிகிறது.
"ஒரு மதுக்குப்பி வாங்க
வற்றியுலர்ந்த மனைவியின் மூக்குத்தியை
அடகுவைத்துக் கையெழுத்திடுகிறவனைவிட
திருப்தியோடிரு!
நாம் கவிதை எழுதுகிறோம்
அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்."
:)))))))))))))
//திருப்தியோடிரு!
நாம் கவிதை எழுதுகிறோம்
அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.//
இவ்வாறே நானும்.
உங்கள் விமர்சனத்திற்கு ஆட்பட விரும்புகிறேன் :(
கவிதையும் கவிஞனும் மன மொழி பேசுபவராயிற்றே.. இவற்றில் கயமைத்தனத்தோடான ஒப்பீடு எதற்கு...
மஞ்சூர் ராசா!இது மிக எளிய கவிதையல்லவா (இதுவும் என்று வந்திருக்க வேண்டுமோ) அல்லது வேறு 'புரிதலை'ச் சொன்னீர்களா?
கென்!உங்கள் கவிதைகள் பார்த்தபிறகு இந்த நகைப்பானுக்கு வேறு அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது:)
"இவ்வாறே நானும்.
உங்கள் விமர்சனத்திற்கு ஆட்பட விரும்புகிறேன் :("-நவன்
ஆட்பட உங்கள் கவிதைகள் குறைந்தவையோ ஆட்கொள்ள நானொரு மகாகவியோ அல்ல. சுந்தர ராமசாமி அவர்களின் பாணியில் சொன்னால், 'அவரவர் கவிதையை அவரவர் எழுதவேண்டியதுதான்'. கவிதை எழுதுகிறோம் என்பதில் திருப்திகொண்டால் போதும்.
"கவிதையும் கவிஞனும் மன மொழி பேசுபவராயிற்றே.. இவற்றில் கயமைத்தனத்தோடான ஒப்பீடு எதற்கு..."
என்று கேட்டிருந்தீர்கள் கிருத்திகா. தரவரிசையிடும் சட்டாம்பிள்ளைத்தனங்களால் எரிச்சலுற்று எழுதியது. எல்லாக் கவிதைகளிலும் ஏதோவொரு அழகு இருக்கத்தான் செய்கிறது. தூக்கிப்பிடிப்பதற்கும் தாக்கித் தறிப்பதற்கும் பின்னால் கவிதையின் தரமல்லாத உப காரணங்களும் இருப்பதை நொந்து எழுதியது.
இதுகுக்குத்தான் நான் அடிச்சடிச்சு மீண்டும் சொல்கிறேன் படைப்பு முக்கியம். விமர்சனம் அல்ல. விமர்சனத்தை பக்குவமாக கையாளும் காலம் இன்னமும் கைகூடவில்லை தோழிழிழிழிழிழி.
யார் நம் படைப்பை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு விமர்சிக்க முடியும்? நம்மைத் தவிர?..
விமர்சன பாராட்டுக்களை பிரதிபலனாய் எதிர்பார்ப்பது நட்புக்கு அழகல்லன்னு
அருமையாக சொல்லியிருக்கிங்க...
(நான் புரிஞ்சுக்கிட்டது இம்புட்டுதான்.திட்டாதிங்க :)) )
தோழிக்கு எனது வணக்கம்,
அம்மாவின் புடவையை கூட அடகு வைத்து குடித்த அப்பா, சாராயம் மட்டுமே அதிகபடியான ஞாபகத்தில்.... உயிர் விட்ட அவரை ஞாபக படுத்தியது கவிதையின் கடைசி சில வரிகள். அதிக பட்ச வித்தியாசம் இல்லை , மகன் தீக்குச்சிகளை அடுக்கி கொண்டிருக்கிறான் , நான் கவிதை எழுதி கொண்டிருக்கிறேன் ---விகிரமாத்தியனையும் நினைவு படுத்தியது கவிதை......சொல்லி கொள்ள நிறைய இருக்கிறது. .........உள் அர்த்தம் வேறு என்றாலும் வெளிப்பாடு அருமை. காத்திரமான பதிவு. நல்ல படைப்பு, வாழ்த்துகள்.
ஈர மண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.
/மதுச்சாலைகளில்
கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலி
சில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறது
சஞ்சிகையொன்றில்.
//
எங்கள் பின்நவீனத்துவ கவிஞர்களை நக்கலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-)
"பைசாச ஓவியங்கள்"
பைசாச என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்...
//திருப்தியோடிரு!
நாம் கவிதை எழுதுகிறோம்
அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.//
விமர்சனங்கள் இருந்தால்தான் நாம் வாசிக்கப்படுகிறோம் ஆனால் விமர்சனங்களை நாம் வாசிக்கக்கூடாது...
'பிறகு பார்த்துக்கொள்ளலாம்'என்றிராமல் நேரமெடுத்து பின்னூட்டமிடும் நண்பர் சூரியாவுக்கு நன்றி. இப்படி யாராவது வந்து சொல்லிவிட்டுப் போனால்தான் நாங்களும் உயிரோடிருப்பதாக நினைத்துக்கொள்ள முடியும். 'அசைவற்றிருந்தால் எடுத்துக்கொண்டுபோய் புதைத்துவிடுகிற உலகமிது'என்றொருவர் சொன்னார்.
"விமர்சன பாராட்டுக்களை பிரதிபலனாய் எதிர்பார்ப்பது நட்புக்கு அழகல்லன்னு
அருமையாக சொல்லியிருக்கிங்க..."-ரசிகன்.
ஆம் ரசிகன். நமக்கு வெகுவாகப் பரிச்சயமானவர்களிடம் நமது கவிதைகளைக் கொடுத்து 'எப்படியிருக்கிறது?'என்று கேட்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகவே தோன்றவாரம்பித்திருக்கிறது. கல்யாண்ஜி 'சூரியனின் கீழ்'என்ற தனது கவிதையில் இப்படிச் சொல்லியிருப்பார்.
"ஒருவகைத் திணிப்பு ஒருவகை அத்துமீறல்
ஒருவகை நிர்ப்பந்தம் ஒருவகை வன்முறை
ஒருவகை அபோதம் ஒருவகைச் சுரண்டல்
ஒருவகைச் சுற்றுச்சூழல் கேடு
எதையும் உண்டாக்காமல்
என்னுடைய கவிதைகளைப் பலமுறை
நான் மட்டும்
வாசிக்கிறேன் தனிமையில்.
அப்புறம் விருப்பமுள்ள
எல்லோரும் வாசிக்கட்டும் என்று
சூரியனின் கீழ் வைத்துவிடுகிறேன்."
சரிதானே...
வருகைக்கு நன்றி நாகப்பன்!குடி என்பது நோயைக் காட்டிலும் கொடிதென நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். குடும்பத்தையும் தன்னையும் அழித்துக்கொண்டு தெருவில் திரிபவர்களைத்தான் தினந்தோறும் பார்க்கிறோமே
"எங்கள் பின்நவீனத்துவ கவிஞர்களை நக்கலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-)"-லக்கிலுக்
கண்டியுங்க... கண்டியுங்க... இப்பல்லாம் தமிழ்மணத்தில் கண்டனப்பதிவுகள்தானே அதிகமாக வருகின்றன:) படைப்பூக்கத்திற்குப் பதிலாக தோள்களை விடைத்துக்கொண்டு சண்டைக்கு நிற்பவர்கள் பெருகிவிட்டார்களே... கவனிக்கவில்லையா...:)(முன்ஜாமீனாக ஸ்மைலி போட்டுவிடவேண்டும். சண்டையிட எனக்கு நேரமில்லை. மனசுமில்லை)
கிங்!'பைசாச ஓவியங்கள்'என்பது இங்கு நேரடியான பொருளில் வராது. நேர்மையான விமர்சனம் என்பது குறைந்துவருகிறது; அவரவர் சார்புநிலைகளுக்கேற்ப அது எழுதப்படுகிறது என்றேன். கருமையான திரையில் வரையப்படும் அமானுஷ்யத் தோற்றங்கள் அன்றேல் பிசாசுகளின் உருவங்களை ஒத்தனவாயிருக்கின்றன அவ்வகை விமர்சனங்கள் என்று சொல்லவந்தேன். பொருளற்றது என்றும் பொருள் கொள்ளலாம்.
"விமர்சனங்கள் இருந்தால்தான் நாம் வாசிக்கப்படுகிறோம் ஆனால் விமர்சனங்களை நாம் வாசிக்கக்கூடாது..."-கிங்
ஒரு அறமற்ற விமர்சனத்தைக் காட்டிலும் விமர்சிக்கப்படாதிருப்பதே மேல் அல்லவா? விமர்சனங்களால் வாசிக்கப்படுகிறோம் என்பது ஓரளவு உண்மைதான். ஆனால்,விமர்சனங்களற்ற தரமான படைப்பை காலம் அழித்துவிடுகிறதா என்ன? யோசிக்கவும். நீங்கள் கூறியதை நானும் யோசிக்கிறேன்.
Post a Comment