6.23.2009

நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…


அண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க’, ‘ஒழிக’எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே. நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்த கிறக்கத்துடனும் என்னால் உச்சரிக்கப்பட்டதையுணர்ந்து நிறுத்திக்கொண்டேன். ஏதோவொரு கணத்தில் வெறுமையும் உண்மையும் சூழ்ந்துகொண்டநிலையில் அயர்ச்சி மேலிட மௌனமாக அந்தக் கூட்டத்தில் நடந்துபோனேன். ‘எனது சொந்த மக்கள் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்படும்போது, ஊனமாக்கப்படும்போது, சிறைகளுள் சித்திரவதை செய்யப்படும்போது, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும்போது, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தான்களின் முன்னால் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் கையேந்தி நிற்கும்படியான பிச்சைக்காரர்களாக்கப்படும்போது எதுவும் செய்யத் திராணியற்றுப் போன அரசாங்கம் ஆண்டுகொண்டிருக்கிற இந்த மண்ணில் இப்படியான கூட்டங்கள் வியர்த்தமானவை’ என்ற எண்ணம் தந்த அயர்ச்சியே அது.

‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா விடுவான்?’என விண்டுவிளம்பி விலாவாரியாக எழுதிவைத்துவிட்டு, முத்துக்குமார் என்ற இளைஞன் தன்னையெரித்துக் கருகி மறைந்தது இந்த மண்ணில்தான் என்பதை அறிந்திருக்கிறபோதிலும்- முழுமையான அரசியல் புரிதலுடனோ அன்றேல் ‘என்னினம் அழிகிறதே’என்றொரு கணம் எழுந்த உணர்ச்சிவேகத்திலோ முத்துக்குமாரைத் தொடர்ந்து அந்தத் தீயின் தடத்தில் மேலும் சிலர் தம் வாழ்வை முடித்துக்கொண்டார்கள் என உணர்ந்திருக்கிறபோதிலும்- அரசியல் இலாபங்களுக்காக, அதிகார வேட்டைக்காக, ஈழத்தமிழர் பிரச்சனையைத் தோளில் தூக்கிவைத்துக் காவடியாடியவர்கள் மத்தியில், தனிப்பட்ட வாழ்வைத் தள்ளிவைத்து வீதிகளில் இறங்கித் தடியடிபட்டவர்களும் இன்னமும் சிறையிருளினுள் சித்திரவதைப்படுபவர்களும் இருக்கவே இருக்கிறார்கள் என்று நினைக்குந்தோறும் நெஞ்சினுள் பரிவின் கண்ணீர் திரண்டு தளும்புகிறபோதிலும்- ஈழத்தமிழருக்கு நல்லது நடக்காதா என்ற நப்பாசையினால், எப்போதும் அதிகாரத்தின் குரலிலேயே பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதா அம்மையாரையே விதந்தேற்றவும் வியந்துபோற்றவும் வேண்டிய கெடுவிதிக்கு தேர்தல் காலத்தில் தள்ளப்பட்ட இனவுணர்வாளர்களின் உள்ளக்கொதிப்பை உணரமுடிகிறபோதிலும்- ஈழத்தமிழர் கதை தற்காலிகமாக துயரத்தில் முடிந்தாலும் விடியும்வரை எமது பணி தொடருமென்று மதிப்பிற்குரிய சீமானும் மணியரசனும், தாமரையும், அறிவுமதியும் பாரதிராஜாவும், கொளத்தூர் மணியும், நெடுமாறன் ஐயாவும், வை.கோ அவர்களும் இவர்களைப்போன்ற பலரும் துடித்துக்கொண்டிருக்கிறபோதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை,‘அதிகாரங்களை அசைக்க முடியாது’என்ற மொட்டைச்சுவரிலேயே வந்து மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு நிற்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆம்! நாங்கள் செவிட்டு மலைகளிடம் வியர்த்த வார்த்தைகளால் உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் யாரை எதிர்த்து ஊர்வலங்களை நடத்துகிறோமோ அவர்கள் அந்நேரம் பல்லிடுக்கில் குச்சி வைத்துக் கிண்டிக்கொண்டோ, உண்ட களைப்பில் ஏப்பம் விட்டபடியோ வாயு பறிந்தபடியோ இத்தகைய கூட்டங்களை அசுவாரசியத்தோடும் அலட்சியத்தோடும் பார்த்துக்கொண்டிருப்பர் என்ற நினைப்பை அழிக்கமுடியவில்லை. தமிழகத்தையும் இந்தியாவையும் பொறுத்தவரை இப்போது வேண்டியிருப்பது ஆட்சி மாற்றங்களல்ல; மனோரீதியிலான அடிப்படை மாற்றங்களே. காட்சி மாற்றங்களல்ல; இங்கே வேண்டியது கருத்தியல் மாற்றங்களே.

அன்றாட வாழ்வுக்குப் பங்கம் வராமல் சில அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு, இலவசத் தொலைக்காட்சியைக் கொடுத்து அவர்களைச் சரிகைக் கனவுகளுள் ஆழ்த்திவிட்டு, கேள்வி கேட்பவர்களின் வாய்களை பணத்தினாலோ அடியாள்தனத்தினாலோ அடைத்துவிட்டு தமிழகம் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இலஞ்சம், ஊழல், அடியாள் அரசியல், ஒற்றையாதிக்கம் இவைகளல்லாத நீதியான ஆட்சியமைப்பை நிறுவுவதென்பது பல நூறாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை சிலரைத் தவிர யாரும் உணரவில்லை. எனது நண்பர்களிடம் பேசும்போது அடிக்கடி சொல்வேன் “ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அழிந்துவிட்டோமென்றே வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் அரசுகள் வஞ்சகத்தினால் எங்களை அழித்துவிட்டன. ஆனால், நாங்கள் எப்படியோ துளிர்த்துவருவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால்… நீங்கள்தான் பாவம். அழிவது தெரியாமல் அழிந்துகொண்டிருக்கிறீர்கள்”என்று. உண்மையில் தமிழகத்திற்கும் ஒரு புரட்சி வேண்டியிருக்கிறது. இங்கே நான் ஆயுதப்புரட்சியைச் சொல்லவில்லை; ஜெயமோகன், சாரு நிவேதிதா வகையறாக்கள் அஞ்சவேண்டியதில்லை. ‘அரசியல்வாதிகளுக்கான மக்கள்’ என்பதிலிருந்து ‘மக்களுக்கான அரசியல்வாதிகள்’ஐ உருவாக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. நீங்கள் நடந்துகொண்டிருப்பது பொருக்கேறிக் கெட்டிப்பட்ட பாதை… கீழே புதைகுழி இருக்கிறது என்பதை யாராவது உணர்த்தியாக வேண்டியதாயிருக்கிறது. இறுகிய பனிப்பாளங்களின் கீழ் உயிரை வெட்டும் குளிர்நீர் இருக்கிறதென்பது பொறிந்து விழும் காலம் வந்தால்தான் புலப்படும்.

‘இதோ கைக்கெட்டும் தொலைவில் இருக்கிறது கடவுளின் உலகம்’என்ற மதவியாபாரிகளின் வாக்குறுதிகள் போன்றதல்ல அந்த ஆதர்ச உலகம். பொறுமையும் தொலைநோக்கும் எதிர்கால சந்ததிக்காக இன்றைய நாட்களை இழக்கத்தகு தியாகமும் வேண்டும் மக்களிடத்தில். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெரியாரைப் போன்றதொரு மானமும் தீரமும் கொண்ட, தீர்மானங்களை எடுக்கத்தகு தலைவன் ஒருவன் உருவாகவேண்டும். அவன் ஏற்கெனவே பிறந்துவிட்டான். அவனை மக்கள்தான் கண்டெடுக்கவேண்டும்.

தமிழகம் ஆதர்ச பூமியாக வேண்டும் என்ற விருப்பின் பின்னால் சுயநலம் இல்லாமலில்லை. விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற பேராதிக்கத்தின் காலடியில், பூகோள ரீதியாக கண்ணீர்த்துளி வடிவில் எமது இருப்பு அமைந்துவிட்டது துரதிர்ஷ்டமே. புயல் கடந்தாலும் மழை பொழிந்தாலும் பூகம்பம் வந்தாலும் அது ஈழத்தமிழர்களையும் பாதிக்கவே பாதிக்கும். அதன் அக,புறநிலைகள் எங்களுக்குச் சாதகமாக்குவதையன்றி வேறு வழியில்லை நமக்கு. மாடு காலால் உதைக்கிறதென்பதற்காக பால் கறக்காமல் விட்டுவிடுகிறோமா என்ன?

எங்கள் விடுதலை பற்றிய கனவு ஒரு புகையைப் போல கலைந்துபோவதைப் பார்த்தோம். பல இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் போலவே எங்களது நாடும் நாடுகடத்தப்பட்டுவிட்டது. அது எங்களைப் போலவே அகதியாகிவிட்டது. ‘நாடு கடந்த அரசாங்கம்’என்பதைப் பற்றிப் பேசவாரம்பித்திருக்கிறோம். கட்டியெழுப்பிய அரசாங்கத்தைக் கடைசியில் ஒருநாள் கட்டித்தூக்கிக்கொண்டு இங்குதான் வந்தாகவேண்டும். இந்தியாவின் காலடியில் கண்ணீர்த்துளியாக அல்லாமல் சமுத்திர அலைகளாகத் திரும்பிவரவேண்டும்.

மரத்தை நடுகிறவன் பழங்களைச் சிந்திப்பதில்லை. வலசைப் பறவைகள் தூரத்தை அஞ்சுவதில்லை. நாங்களும் விதைகளைத் தூவி வைப்போம். விருட்சமாகட்டும்.

27 comments:

Anonymous said...

படிக்கவே முடியவில்லை தமிழ், மனது கனக்கிறது.. பிராத்தனைகளை தவிர வேறேதும் இல்லை...

kicha said...

த‌மிழ‌க‌ம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்ப‌தை, த‌மிழ‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் உண‌ராம‌ல் இருப்ப‌து உண்மையே. இமெல்டா மார்கோஸே வெட்கித்த‌லை குனியும் அள‌விற்கு ஏற‌க்குறைய‌ 70000 கோடி ரூபாய் ஊழ‌ல் செய்து, அப்ப‌ண‌த்தில் ஒரு ப‌குதியை ம‌க்க‌ளுக்கு கொடுத்து, தேர்த‌லில் வெற்றி பெற‌ முடியும் என‌ நிரூபண‌ம் ஆகி விட்ட‌ இன்றைய‌ கால‌ சூழ‌ல், ஒருவித‌ ஆற்றாமையை ஏற்ப‌டுத்துகிற‌து. ப‌தினைந்து பேரின் த‌ற்கொடையை விட‌, அன்றைய‌ தேவையை பூர்த்தி செய்யும் ரூ 500 ஐ பெரிதாக‌ க‌ருதும் ம‌க்க‌ளை குற்ற‌ம் சொல்வ‌தா அல்ல‌து இன்றைய‌ செல‌வு, நாளைக்கான‌ முத‌லீடு என‌ நினைக்கும் ச‌மூக‌ அக்க‌றை அற்ற‌ சில‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை குறை சொல்வ‌தா? இம்ம‌க்க‌ளுக்கான‌ விழிப்புண‌ர்வு எப்போது, எப்ப‌டி வ‌ரும்?

Anonymous said...

உண்மைதான் தமிழ்,

போராட்டத்தால் அழிந்த ஒரு இனம், அதே வேகத்தில் போராடித் துளிர்விடும். ஆனால், உண்ணுவது விஷம் என்றே அறியாது, மெல்லக் கொல்லும் விஷத்தை விழுங்கும் [slow poison], இந்த சோம்பேறிகள் வீழும் நாளும் அறியாது, காரணமும் புரியாது வீணில் அழிந்து படுவர்.
கார்ப்பரேட் கம்பெனிகளாகும் எங்களின் மாநில கட்சிகளும், அதில் பங்குதாரர்களாகும் எங்களின் அரசியல் வியாதிகளும் கொண்டுள்ள மதிநுட்பத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியேனும் ஓட்டளிக்கும் எம்மக்களுக்கும் வாய்க்கப்பெற்றிருந்தோமானால் எம்மைக்காப்பது மட்டுமின்றி , அந்தோ என்றோ உமக்கும் உதவும் கரங்களை உலகே நீட்டச்செய்திருப்போமே?

ராஜ நடராஜன் said...

நம்பிக்கையாய் சொல்ல வார்த்தை இல்லை இப்போதைய சூழலில்,மனநிலையில்.ஆனால் புதிய வேர்கள் படரவேண்டும்,படறுமா என்ற கேள்வியும் கூடவே வேர்களைத் தொட்டே நகரும் நச்சுப் பாம்புகளும் இப்பொழுதே முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருக்கின்றன என்ற நிதர்சனமும்...

இந்தியாவும் முக்கியமாக தமிழகமும் ஜனநாயக போர்வையில் தனது விழுதுகளை வாரிசுகளாக வரித்துக் கொண்டிருக்கிறது.இன்னும் 10 ஆண்டுகள் வளரட்டும் எடை எத்தனை கிலோ கணக்கிற்கு!

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

ஈழம் பற்றி தொடர்ந்து எழுதி வருவது உங்கள் தமிழ் உணர்வை வெளிப்படுத்துகிறது. நாம் அருகில் இருந்தும் கையாலாகாதவர்களாய் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே நம்மைக் கொன்று விடும் போலிருக்கிறது.

சு.செந்தில் குமரன் said...

முடிந்தால் முழுதும் படியுங்கள் www.susenthilkumaran.blogspot.com நன்றியும் அன்பும்

Anonymous said...

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதிச்சாம்

Unknown said...

அம்மணி கலைவாணி தமிழ்நதி, நான்கு கட்டுரைகளையும் இன்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். எழுத்தின் கருத்தும் நடையும் சிறப்பாக அமைந்துள்ளது. முயற்சியினை மிகவும் பாராட்டுகின்றேன். ஈழமக்கள் உரிமையை நயவஞ்சக நரிகள் நாசம் செய்துவிட்டன. அல்லற்பட்டு அழும் மக்களின் கண்ணீர்க் கடல் அலைகள் தடை மலைகளத் தேய்த்துக் தகர்க்கும் (வள்ளுவர் பொய்யாமொழி).
வாழ்க வளமுடன் நலமுடன்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹுஸ்டன்
ஜூன் 23, 2009

முகமது பாருக் said...

///எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெரியாரைப் போன்றதொரு மானமும் தீரமும் கொண்ட, தீர்மானங்களை எடுக்கத்தகு தலைவன் ஒருவன் உருவாகவேண்டும். அவன் ஏற்கெனவே பிறந்துவிட்டான். அவனை மக்கள்தான் கண்டெடுக்கவேண்டும்.///

சத்திய வார்த்தைகள் சகோதரி கண்டிப்பாக கூடிய விரைவில் (தாமதமும் ஆகலாம்) மாணவர்கள் மற்றும் மக்களே முன்னிருந்து நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இப்போது அதிகமாக எனக்கு ஏற்பட்டுள்ளது...

இப்போது நடக்கும் பல நிகழ்வுகள், சாதாரண மக்களையும், மாணவர்களையும் சேர விடாமல் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் இந்த மஞ்சள் பத்திரிகைகளும், கலைஞர் என்ற திடீர் கருணா" நிதி அய்யங்கார் மற்றும் ஜெயா மாமி அனைவரும் சேர்ந்து செய்யும் இந்த இழிசெயல்கள் முறியடிக்க படவேண்டும் இணையத்தில் பேசும் அனைத்தும் மக்களிடம் எடுத்து செல்லப்படவேண்டும்...

உண்மையிலேயே என்னை நினைத்தே எனக்கு வெட்கமா இருக்குங்க...வேற ஏதும் சொல்லதோனலங்க...

ஒரே ஒரு வாழ்கைதான் அதை உண்மையாகவும் ஊருக்காகவும் வாழ்ந்திட்டு போவோம்ங்க...கவலை படாதிங்க உயிர்பலிகள் ஏதும் வீணாக ஒருபோதும் போகாதுங்க...

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்)

ஆயில்யன் said...

எம் இந்திய அரசால் ஈழ மக்களுக்கு நலம் செய்யகூடிய எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும்,செய்வார்கள் என்று எதிர்பார்த்தும் கடைசியில் ஏமாந்து அழிந்து அவல நிலைக்கு போய்விட்ட எம் ஈழ உறவுகள்!

எங்கள் அரசியல்வாதிகளை நினைக்கையில் கேடு கெட்டவர்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது! இருட்டு உலகில் இழுத்து சென்றுகொண்டிருக்கின்றனர் எங்கள் இந்திய ஊழல்வாதிகள் :(

பாண்டியன் said...

அக்கா! அப்படியே என்னுடையதும் படியுங்கள்:http://siruthai.wordpress.com/2009/06/21/இந்திய-அரசியல்-தமிழக-இந்/

arunmozhi said...

you have said everything about tamils in tamilnadu very perfect. many socalled tamil intellectuals also follow the same path....as bharathi told in his poem......pavam seipavan AIYOO ennu poovan

Anonymous said...

appa enna oru suyanalam........ungalai nangal vancham theerthoma.......ungalai neengale parthukolla ungalukku vakku irukirathendru thane thamazhagathil vaithhu rajeevai kondreerhal....ippa mattum etharkku engal udhavi........engalai nanga parthu kolgirom ungalai neengal parthukollungal........ungal karisanam engalukku thevai illai

நம்பி.பா. said...

//
நாங்களும் விதைகளைத் தூவி வைப்போம். விருட்சமாகட்டும்.//

இன்றைய நிலையில் இது தான் முடியும், இது தான் தேவை! காயங்களிலும் வலிகளிலும் மனம் மூழ்கிக் கிடந்தாலும்,
நடந்தவற்றிலிருந்து பாடம் கற்று நல்ல விதை தூவுதலே நாளைய மரத்துக்கு வழி! தமிழக அரசியல்வாதிகளை சாராமல் முன்னெடுத்துச் செல்லப்படும் முயற்சிகளே ஈழத்தின் தமிழர்களுக்கான உரிமையளிப்பை வரும் நாளில் பெற்றுத்தரும் முயற்சியாக இருக்குமென எண்ணுகிறேன்.

முத்துகுமரன் said...

நீங்கள் தூவும் விதைகளுக்கு நாங்கள் மக்கிப் போயாவது துளி உரமாவோம். இன்று காக்க முடியாத போன உறவுகள் எங்களை அன்றாவது மன்னிக்கட்டும்.

நிலாரசிகன் said...

//இந்தியாவின் காலடியில் கண்ணீர்த்துளியாய்..//

இதை படித்ததிலிருந்து அழுதுகொண்டே இருக்கிறது மனம்.
வேதனையின் உச்சத்தை இதைவிட எப்படி உணர்த்தமுடியும் தமிழ்?

நான் "கடவுளை" நம்புகிறேன். அவன் இன்னும் இருக்கிறான்.

தமிழ்நதி said...

மயில் முன்பொருபோதும் என் பக்கம் வந்ததில்லை என்று நினைக்கிறேன்:) பிரார்த்தனைகள் மட்டும் போதாது முயற்சிகளும் வேண்டும் இல்லையா?

கிச்சா,

தமிழகத்தின் தேர்தல் முடிவு, தமிழீழத்தைத் தீர்மானிக்கலாம் என்ற சின்னதொரு நப்பாசை எங்களைப் போன்றவர்களிடம் இருந்ததை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முடிவுகள் வெளியாகிய அன்றைய தினம் எமது நம்பிக்கைகளின் மீது காசு காறியுமிழ்ந்ததைப் பார்த்தோம். அதிகாரம் செருப்பாலடித்ததாக உணர்ந்தோம்.

தோற்றுப்போன மனநிலை தொடர்கிறது. எதையாவது பற்றிக்கொள்ளத் துடிக்கும் மனதும்கூட. உண்மையில் தமிழகம் எத்தகைய நிலையிலிருக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்துதானிருக்கிறது. அதனால் கிடைக்கும் இலாபங்களை நினைத்து ஒரு கூட்டமும், அன்றாட வாழ்வை இழக்கக்கூடாதென்ற கவலையில் இன்னொரு கூட்டமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

--

நன்றி அனானி நண்பரே,

நீங்கள் சொன்னதுபோல நின்று கொல்லும் விஷத்தைத் தின்றுகொண்டிருக்கிறது தமிழகம். என்ன செய்வது?

--

ராஜ நடராஜன்,

விழுதுகள் பாம்புகளாகி நெளியும்போது பற்றிக்கொண்டிருக்கும் விரல்களுக்குரியவர்கள் பதறியடித்து ஓடுவார்கள். நமது வாழ்வின் அமைதிக்காக நமது குழந்தைகளின் வாழ்வைப் பணயம் வைக்கிறோம் என்பதுதான் உண்மை.

--

இரத்தின புகழேந்தி,

உண்மையில் ஐயா, 'கையறு நிலை', 'கையாலாகாத்தனம்', 'தொப்பூள் கொடி உறவு', 'இரத்தத்தின் இரத்தங்கள்', 'உடன்பிறப்பே' இன்னோரன்ன சொற்களைக் கேட்கும்போது கோபம் வருகிறது. அந்தக் கோபத்தின் பின்னாலுள்ள துயரத்தை உங்களைப் போன்றவர்களாவது புரிந்துகொள்கிறீர்கள் அல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

--

செந்தில்குமரன்,

படிக்கிறேன்.

--

அனானி,

"ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்"

இங்க ஆடு நாங்கதானே.. ஓநாயெல்லாம் வந்து சாப்ட்டுட்டுப் போயிடுச்சுல்ல...:(

---

தமிழ்நதி said...

ராதாகிருஷ்ணன் ஐயா,

நன்றி. எங்கள் மீதான உங்கள் பரிவும் அக்கறையும் நெகிழச் செய்கின்றன. நானும் வள்ளுவரையே துணைக்கழைக்கிறேன் 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை'என்றார். இத்தனை நல்லவர்கள் இருந்தும் குண்டு மழைதானே பொழிந்தது!வருத்தமாக இருக்கிறது ஐயா! இனி வருந்தியும் என்ன பயன்?

---
முகம்மது பாரூக்,

உங்கள் கனவு நனவாகட்டும். சாத்தியமற்றதென்று எதுவுமில்லை. கீழ்மைச் சகதியில் சிக்குண்டு கிடந்த தமிழகத்தைத் தமது அறிவால் மீட்டெடுக்கப் பாடுபட்ட பெரியாரும் அம்பேத்காரும் பிறந்தது இந்த மண்ணில்தான். நம்புவோம் நாளையை.

---
ஆயில்யன்,

உண்மையில் அயர்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஏதாவது செய்தோமா...? புதிய சிந்தனைகள் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் சலிக்கும். மெளனமாகி மண்ணுள் மறைந்துபோவோம்.

---
பாண்டியன்,

படித்தேன். மீண்டும் ஒரு தடவை ஆறுதலாகப் படித்துவிட்டு உங்களோடு கதைக்கிறேன்.

---
அருண்மொழி,

'பாவம் செய்பவன் ஐயோ என்று போவான்'என்று பாரதி சொன்னதாகக் குறிப்பிட்டீர்கள். 'ஐயோ...'என்று போவதாகத் தெரியவில்லை. மேலும் அமோகமாகத்தான் இருக்கிறார்கள். தெய்வம் நின்று அறுக்குமாமே... பார்க்கலாம்.

---

அனானி அபத்தமே,

appa enna oru suyanalam........ungalai nangal vancham theerthoma.......ungalai neengale parthukolla ungalukku vakku irukirathendru thane thamazhagathil vaithhu rajeevai kondreerhal....ippa mattum etharkku engal udhavi........engalai nanga parthu kolgirom ungalai neengal parthukollungal........ungal karisanam engalukku thevai illai"

முதலில் நீங்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். தமிங்கிலிஷ் கொல்கிறது. இல்லை ஐயா நீங்கள் எங்களை வஞ்சம் தீர்க்கவில்லை. ஆயுதம் கொடுக்கவில்லை. ஆட்படை அனுப்பவில்லை. சிங்களவர்களிடமிருந்து எங்களைக காப்பாற்றினீர்கள். எங்களுக்கு மறுவாழ்வு அளித்தீர்கள். உங்கள் பாதக்கமலங்களில் எங்கள் வந்தனங்களும் நன்றி செறிந்த கண்ணீர்த்துளிகளும்... ஏற்றுக்கொள்ளுங்கள்.

"உங்கள் கரிசனம் எங்களுக்குத் தேவை இல்லை"என்று சொன்னீர்கள். யானைக்கு வெறிபிடித்தால் தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளுமாம். விழுந்தபிறகே புதைகுழி புலப்படும். கொஞ்சம் பொறுங்கள்.

---

"தமிழக அரசியல்வாதிகளை சாராமல் முன்னெடுத்துச் செல்லப்படும் முயற்சிகளே ஈழத்தின் தமிழர்களுக்கான உரிமையளிப்பை வரும் நாளில் பெற்றுத்தரும் முயற்சியாக இருக்குமென எண்ணுகிறேன்."

சிறு திருத்தத்தோடு இதனை ஏற்றுக்கொள்கிறேன். 'தமிழகத்திலுள்ள பொய்மையான அரசியல்வாதிகளைச் சாராமல்'

'உண்மையானவர்கள் எங்கே இருக்கிறார்கள்?'என்று நீங்கள் என்னை எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது:)

முத்துக்குமரன்,

நமது நம்பிக்கைகள் மெய்யாகுமா பார்க்கலாம். சிலசமயம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதாய் இருக்கும்:)

நன்றி நிலாரசிகன்,

நானும் 'கடவுளை' நம்புகிறேன். தோன்றாத் துணை அவன்.--

ttpian said...

மே மாதம் 16 ஆம் தேதி....காலை
எமது தமிழ் இனம் இந்திய+சின்கல+வெள்ளைக்கார ராணுவம் குழி தோண்டி புதைத்தபோது......
தமிழ் கடவுள் முருகன்
ஆன்கிலக்கடவுள் ஜீசச்...
அரேபியக் கடவுள் அல்லா..
இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள்?

ஈரோடு கதிர் said...

//கட்டியெழுப்பிய அரசாங்கத்தைக் கடைசியில் ஒருநாள் கட்டித்தூக்கிக்கொண்டு இங்குதான் வந்தாகவேண்டும். இந்தியாவின் காலடியில் கண்ணீர்த்துளியாக அல்லாமல் சமுத்திர அலைகளாகத் திரும்பிவரவேண்டும்.//

நதி....

காலையில் எழுவோம் எனும் நம்பிக்கைதான், உறக்கத்திற்கு நம்மை வழிநடத்துகிறது...

அதேபோல் இந்த நம்பிக்கை நிச்சயம் ஒருநாள் நிறைவேறட்டும்

"உழவன்" "Uzhavan" said...

//ஆனால்… நீங்கள்தான் பாவம். அழிவது தெரியாமல் அழிந்துகொண்டிருக்கிறீர்கள்”என்று. உண்மையில் தமிழகத்திற்கும் ஒரு புரட்சி வேண்டியிருக்கிறது//

மிகச் சரி.. நட்சத்திர வாழ்த்துக்கள்!

நந்தா said...

உங்களது ஒவ்வொரு வரிகளிலும் உடன்படுகின்றேன்.எதிர்ப்புக் கூட்டங்கள் குறித்தான உங்களது எண்ணங்களை நானும் உணர்ந்திருக்கின்றேன்.

கையறு நிலை மெல்ல கொன்றுக் கொண்டிருக்கின்றது. கழிவிரக்கம் மனதை முழுக்க மூடி இருக்கின்றது. வெளியில் பேசிக் கொள்கின்றார்கள்

உடன்பிறப்பு:கலைஞரு பாவம்பா...இன்னும் அவரு என்னதான் செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?

பான்கீமூன் : உலகெங்கும் சமாதனம் நிலவ பாடுபடுவேன்

கோத்தபாய: தமிழர்களுக்கான உரிமைகளை விரைவில் வழங்குவோம்.

தூத்தெறி... கண்ணகி மண்ணிலிருந்து தாமரை கொடுத்த கருஞ்சாபங்கள் அனைத்தும் பலிக்கட்டும்.

சுரேகா.. said...

//“ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அழிந்துவிட்டோமென்றே வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் அரசுகள் வஞ்சகத்தினால் எங்களை அழித்துவிட்டன. ஆனால், நாங்கள் எப்படியோ துளிர்த்துவருவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால்… நீங்கள்தான் பாவம். அழிவது தெரியாமல் அழிந்துகொண்டிருக்கிறீர்கள்”//

ஆமாங்க ! நிதர்சனமான உண்மை!
மனதின் ஆழத்திலிருந்து, உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்!

பகிர்ந்துகொள்கிறோம்..!

kalyani said...

நாங்கள் மட்டும் அல்ல எங்களுடைய சுதந்திரமும் கூட அகதியாய் போய் விட்டதை நறுக்கென்று எழுதி விட்டீங்க .

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தியா என்ற பேராதிக்கத்தின் காலடியில், பூகோள ரீதியாக கண்ணீர்த்துளி வடிவில் எமது இருப்பு அமைந்துவிட்டது துரதிர்ஷ்டமே. //

இந்த வரிகளைப் படித்தபின் என்ன சொல்வதென்றே தோணவில்லை.:(

விதைகள் விருட்சமாகட்டும். விதைகள் வளரும் போது குறைந்தபட்சம் தண்ணீர் விடும் முயற்சியாவது நாங்கள் செய்கிறோம்.

இளங்கோவன் said...

தமிழ்நதி
உணர்ச்சி மேலீட்டில் எழுதியிருக்கிறீர்கள். நீர் நிரம்பிய கண்களில் காட்சிகள் சற்றே மங்கலாய்த்தெரியலாம் இல்லையா?
தமிழகத்தில் நம்பிக்கை கொள்ள நிறைய உண்டு.

திராவிடம் முழுமையாய் இந்தியத்திடம் கரைந்துவிட்டது என்பதை மக்கள் மறைமுகமாக உணர்ந்துவிட்டார்கள்.
இந்தியாமீது எளிய தமிழர்வரை ஈழச்சிக்கலில் தீராத வன்மம் எழுந்துவிட்டது. (இது ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் புரியாது என்பது என் கருத்து)
தமிழக அரசியல்வாதிகள் கடந்த காலம்போல் கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் தம்மிடம் உள்ளது என்று பம்மாத்து காட்டமுடியாது.

முக்கியமாக மு.க அழகிரியின் அரசியல் வரவு...
மிக முக்கியமாக திமுக எனும் கோட்டையின் அமைப்பியல் சரிவு...
இவையெல்லாம் தமிழக அரசியல் சூழலில் பெருமாற்றங்களை முன்மொழிகின்றன.
இந்த மாற்றங்கள் மிக மிக அடிப்படை மாற்றங்கள்.
இன்றைக்கு எந்த தலைமை வழிபாடும் இல்லாத
புதிய இளைஞர்கள் மெல்ல மெல்ல உருவாகிறார்கள். இவர்களுள்தான் நீங்கள்சொல்லும் அந்த தலைவர் ஒளிந்திருக்கிறார்.
மற்றபடி ஈழப்பிரச்சனைக்காக ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்ட இன உணர்வாளர்களைவிட
நூறுரூபாய் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஒட்டுப்போட்ட வாக்காளன் ஈழத்துக்கு அதிக துரோகம் செய்யவில்லை என்பது என் கருத்து.
ஈழம் என்ற சாகச சினிமாவின் தமிழக ரசிகன்
துயரத்தோடு திரையரங்கைவிட்டு வெளியேறிவிட்டான். போரட்டம் சினிமா இல்லை நாம் ரசிகர்கள் இல்லை என்ற புரிதல் எங்களுக்கு (தமிழக மக்களுக்கு) வரும்போது ஈழத்தை அழித்த, புலிகளை சிதைத்த இந்தியாவை நீங்களே தடுத்தாலும் நாங்கள் அழிக்காமல் விடமாட்டோம்

தமிழ்நதி said...

இளங்கோவன்,

"இன்றைக்கு எந்த தலைமை வழிபாடும் இல்லாத
புதிய இளைஞர்கள் மெல்ல மெல்ல உருவாகிறார்கள். இவர்களுள்தான் நீங்கள்சொல்லும் அந்த தலைவர் ஒளிந்திருக்கிறார்."

என்ற உங்கள் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன. உண்மையில் தமிழகத்தில் ஏற்படும் ஒரு மாற்றம் எங்களுக்கும் வழிகோலும் என்ற நப்பாசை என்னைப் போன்றவர்களிடத்தில் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது.