6.23.2009

கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி


மரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்த கதைகளிலும் பார்க்க அவரைப் பற்றிப் புனையப்படும் கதைகள் அதிகமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அதிலும், சமூக அளவுகோல்கள், மதிப்பீடுகளை மறுத்தோடவும் கேள்வி கேட்கவும் விழைந்த கமலாதாஸைப் போன்ற எழுத்தாளர், இறப்பின் பின்னும் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுவது இயல்பானதே.

1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. கற்பு, கலாச்சாரம் இன்னபிறவற்றினால் இயக்கப்படும் நமது ஆச்சாரப்பசுக்கள் அந்நூல் மிகையான பாலியலைப் பேசியதாகக் கண்டனம் தெரிவித்தனர். குமுதத்திலும் அந்நூல் தொடராக வந்தது. “‘என் கதை’யைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “அதிர்ந்துபோனதுபோல பாசாங்கு செய்தனர்”என்று பதிலளித்தார் கமலாதாஸ். ஆன்மாவின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு வந்த பதிலாக அது அமைந்திருந்தது. ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டியது அந்தத் துணிச்சலான பதில்.
அவர் சொல்கிறார்:

“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்று.

குழப்பவாதியாகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுபவராகவும், கனவு காண்பவராகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவும் கமலாதாஸ் சித்தரிக்கப்பட்டார். பெண் என்பவள் வார்க்கப்பட்ட வெண்கலச் சிலைபோல இருக்கவேண்டும்; நெகிழ்வு கூடாது என்ற புனிதத் தத்துவங்களில் ஒன்றாகவே மேற்கண்ட விமர்சனத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும், காலாகாலமாகப் பின்பற்றப்பட்ட, அச்சில் ஊற்றி எடுக்கப்பட்ட மரபுகளுக்கு எதிர்நிலையில் நின்று பெண்ணானவள் பேசுவதும் நடந்துகொள்வதும் படுபாதகமாகவே கருதப்படுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் ஆணிவேராகிய மதம் தொடர்பாகவும் அந்த எதிர்நிலை அமைந்துவிடுமாயின் சொல்ல வேண்டியதில்லை. ‘ஐயோ! கைமீறிப் போகிறாளே’என்ற பதட்டம் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. கமலாதாஸ் எழுத்திலும் வாழ்விலும் கலகக்காரியாக அறியப்பட்டவர். மரணத்தின் பிறகும் அவர்மீதான ஆதிக்கம் விமர்சன வடிவில் தொடர்வது வேதனைக்குரியது.

அண்மைக்காலமாக இணையத்தளங்கள் அச்சு ஊடகங்களுக்கு சமாந்தரமாக இயங்க முற்பட்டுவருகின்றன அன்றேல் நெருங்கிவந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். இன்றைக்குத் தமிழிலே பிரபலமாகப் பேசப்படும் பல எழுத்தாளர்கள் இணையத்திலே எழுதவாரம்பித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது எழுபத்தைந்தாவது வயதில் புனேயில் கமலாதாஸ் மரணமடைந்ததையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவொன்றினைத் தனது இணையத்தளத்திலே இட்டிருந்தார். வழக்கம்போல தனது நியாயத் தராசிலே கமலாதாஸையும் நிறுத்தி எடைபோட்டபின் அவரால் மொழியப்பட்ட வாசகங்கள் இவைதாம்:

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”

ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

இதை வாசித்து முடிந்ததும் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. கறுப்பான, குண்டான பெண்கள் அழகற்றவர்கள் என்ற பொதுப்புத்தியை, அறியப்பட்ட எழுத்தாளரான ஒருவரால் எந்தவித தயக்கமின்றி எப்படிப் பொதுவெளியில் பேசமுடிகிறது? ஒருவருடைய அழகு அவருடைய எழுத்தில் பொருட்படுத்தத்தக்க பாதிப்பினை உண்டுபண்ணுகிறதா? அழகிகளாயிருக்கும்-அழகன்களாயிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளில் காமம் அளந்து பரிமாறப்படுகிறதா? தனது படைப்பாற்றல் வழியாகச் சிந்தனைத் தளத்தினுள் வாசகர்களைச் செலுத்துவதில் பெரும் பங்காற்றிய கமலாதாசுடைய எழுத்தின் பின்னணியில் இயங்கும் உளவியலை ஆராய்வதன் மூலம் தனது பிதாமகத்தன்மையை ஜெயமோகன் நிறுவ முயல்கிறாரா? காமம் என்பது பாவமே போன்ற தொனி மேற்கண்ட வாசகங்கள் ஊடாக வெளிப்படுவதிலுள்ள அபத்தத்தை ஜெயமோகன் உணரவில்லையா? ஒருவர் இறந்தபின்னால் அவரது இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், மேற்கண்ட வாசகங்கள் வாயிலாக கமலாதாஸின் ஆளுமை பற்றிய மதிப்பீட்டைச் சரிக்கவே ஜெயமோகன் முயல்கிறார் என்று தோன்றுகிறது. அதிலும் அதீத காமத்தோடு நடந்துகொள்வது அன்றேல் அப்படிப் பேசுவது மற்றும் எழுதுவது, சமூகத்தினால் ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண் பிம்பத்தைச் சிதைக்கிற செயல் என்ற பதட்டத்தை மேற்கண்ட வார்த்தைகளில் என்னால் இனங்காணமுடிகிறது. பழமைச் சேற்றில் ஊறிய பொச்சுமட்டைகளால் எத்தனை காலத்திற்குத்தான் அரிக்கும் தங்கள் முதுகுகளைச் சொறிந்துகொள்ளப்போகிறார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

ஜெயமோகன் மட்டுமென்றில்லை; மதவாதமும் ஆண்வாதமும் இந்தச் சமூகத்தினைச் சீரழிக்கும் நோய்க்கூறுகளாகத் தொடர்ந்திருக்கின்றன. கமலாதாஸ் என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்ட மாதவிக்குட்டி தனது 65ஆவது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறி கமலா சுரையாவாகிறார். புகழ்பெற்ற இஸ்லாமியப் பேச்சாளர் ஒருவரை மணந்துகொள்ளும்பொருட்டு மதம் மாறியதாகக் கூறும் அவரை, அந்தப் பேச்சாளர் பிறகு ஏமாற்றிவிட்டதாக கமலாதாஸே ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார். தனிமையின் துயர் தாளாமல் துணையை அடைய வேண்டி மதம் மாறியது அவருடைய சொந்தப் பிரச்சனை. “நீ எப்படி மதம் மாறலாம்?”என்று கேட்டு இந்துத்துவா அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். கொலை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். எப்போதும் உயிராபத்து நிறைந்த சூழலிலேயே அவர் வாழவேண்டியேற்பட்டது. பத்திரிகைகள் அவர் மதம் மாறியதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. தான் ஆமியாக சிறுபெண்ணாய் பால்யத்தில் வாழ்ந்த பழைய வீட்டிற்கு கமலாதாஸ் சென்று வந்தபிறகு, அந்த வீட்டை அங்குள்ளவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவுகிறார்கள். ஏனென்றால், ஒரு முஸ்லிம் பெண்ணின் பாதங்களால் அந்த வீடு தீட்டுப்பட்டுவிட்டதாம். மதமாற்றத்தின் காரணமாக எழுந்த சர்ச்சைகளால், விமர்சனங்களால் புண்பட்ட கமலாதாஸ் தனது தாய்பூமியான கேரளத்தைவிட்டு வெளியேறி, வயோதிபத்தில் புனேயில் வசிக்கவும் அங்கேயே இறக்கவும் நேரிடுகிறது. இந்தியா பல மதங்கள், மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட புண்ணிய பூமி என்று போற்றப்படுகிறது. அந்தப் புண்ணிய பூமியில் எழுத்தாளராகக் கொண்டாடப்படும் ஒரு பெண், மதம் மாறுவதென்பது அவளது சொந்தப் பிரச்சனையாக அல்லாது சமூகத்தின் பிரச்சனையாக இருப்பதென்பது அபத்தத்திலும் அபத்தமானதாகத் தோன்றுகிறது. மதம் என்பதை ஒரு விடயமாகக் கருதியதில், பொருட்படுத்தியதில் கமலாதாஸ் என்ற ஆளுமையுடைய பெண் தோற்றுவிட்டாள்தான். என்றாலும், தான் யாராக வாழவிரும்புகிறாளோ அதை அவளுடைய தெரிவுக்கு விட்டுவிடுவதன்றோ நியாயம்?

பால்யகால ஸ்மரணங்கள், பூதகாலம், பஷியுடைய மரணம், யா அல்லாஹ் ஆகிய பேசப்பட்ட நாவல்களையும் சிறந்த பல சிறுகதைகளையும் எழுதிய- கேரள சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகிய பெருமைகளைப் பெற்ற கமலாதாஸின் மறைவு கேரளத்தின் துக்கமாயிருந்தது சில தினங்கள். அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியெல்லாம் கேரள மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். மிக அண்மையில் கவிஞரும் பல எழுத்தாளர்களின் நண்பரும் நல்லிதயம் கொண்ட மனிதருமாகிய ராஜமார்த்தாண்டனைத் தமிழிலக்கிய உலகம் விபத்தொன்றில் இழந்தது. சில சஞ்சிகைகள், இணையத்தளங்களைத் தவிர மற்றெல்லாம் மகாமௌனம் காத்தன. இழப்பின் துயரத்தைக் காட்டிலும் மாபெரிய துயரம், ஒரு கவிஞனின் மரணத்தைக்கூடத் தமிழ்கூறும் இந்தப் பொய்யுலகம் பெரியளவில் கண்டுகொள்ளாமலிருந்ததுதான்.

ஜூன் 13ஆம் திகதியன்று வால்பாறையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட இலக்கியக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
-----

கமலாதாஸின் கவிதை
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்


அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.

அவர்கள் சொன்னார்கள்
'ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.'
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும் சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
.உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின்-
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின்-
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.

நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.

அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….

ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்“யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.

தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும் எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று.

நண்பர் மாதவராஜின் ‘தீராத பக்கங்கள்’இல் மேற்கண்ட கவிதை வெளியாகியிருந்தது. அவருக்கு என் நன்றிகள்.

29 comments:

முனைவர் ப. சரவணன், மதுரை. said...

எனது கணிப்பில் கமலாதாஸ் தற்காலிக மனத்தடுமாற்றம் உள்ளவர். மெல்லியதான மனநிலைப் பிறழ்வும் உடையவர். அவரது பேச்சும் எழுத்தும் பகல்நேரக் குடிகாரரின் கருத்துக்களை ஒத்தவையே. ஒரு விதத்தில் கமலாதாஸ் காமம்சார்ந்த மனஅழுத்தக்காரர். அவருக்கு ஆண்துணையும் பெண்துணையும் ஏற்றாற்போல் அமையவில்லைபோலும். சுயபுணர்ச்சி எப்பவும் மனத்தடுமாற்றத்தை விளைவிக்கும். அவரது மனத்தடுமாற்றத்திற்கு அவரேதான் காரணம். அவர் சார்ந்த சமூகமோ மதமோ மொழியோ அல்ல. அவர் பெண்ணியத்திற்கு ஒரு கரும்புள்ளி. அவரது எழுத்துக்களைக் கவனிக்காமல் விடுவதே நவீனப் பெண்ணியத்திற்கு நல்லது.

தங்கள் வாசகன்
சரவணன்
(0)9894541523
tamilwritersaravanan.blogspot.com

தமிழ்நதி said...

உங்கள் கருத்தோடு நிச்சயமாக என்னால் உடன்பட முடியாது. 'மனநிலைப் பிறழ்வு உடையவர்'என்று நீங்கள் சொல்வது விவாதத்திற்குட்படுத்தத்தக்கது. படைப்பாளிகள் என்பவர்கள் சாதாரணர்களைக் காட்டிலும் மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும் பித்துநிலைக்கு நெருக்கமானவர்களாகவுமே இருக்கிறார்கள். பாரதி, புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், நகுலன் போன்றவர்கள் சில அசாதாரண நடத்தை மற்றும் வாழ்முறைகளைக் கொண்டிருந்ததும் அதனாலேயே. அதாவது, முழுமையான மனிதர்கள் என்ற சித்திரத்தினுள் தம்மை அடைத்துக்கொண்டவர்களின் கருத்துப்படி.

'கமலாதாசுக்கு ஆண்துணையும் பெண்துணையும் சரியாக அமையவில்லைப் போலும்'என்று எழுதியிருக்கிறீர்கள். அமைந்திருக்கிறவர்கள் எல்லோரும் மனத்தடுமாற்றமற்றவர்களா என்பதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ஒரு ஆளுமைமிக்க படைப்பாளி பெண்ணாக இருப்பதைச் செரிக்கமுடியாதிருக்கும் ஆண் மனோபாவமாகவே இதை என்னால் எடுத்துக்கொள்ளமுடிகிறது. தவிர, 'சுயபுணர்ச்சி எப்போதும் மனத்தடுமாற்றத்தை அளிக்கும்'என்பது வேறு. சுயபுணர்ச்சினால் எந்தவொரு அனர்த்தமும் நிகழ்ந்துவிடாது நண்பரே... தெரிந்துகொள்ளுங்கள். அவரது எழுத்தைப் புறக்கணித்துவிட்டு, அந்தப் பெயரை முற்றிலுமாக மறந்துவிட்டுத் தொடரும் பெண்ணியம் ஒன்று இருக்குமானால், நிச்சயமாக அதில் நான் இல்லை. நன்றி.

Unknown said...

சரவணனும் அடுத்த ஜெயமோகனாக தன்னை உருவகப்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

தமிழ்நதி, உங்களது பதிவும் சரவணனுக்கான பதிலும் மிக அருமை.

நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துகள்

Unknown said...

நட்சத்திர பதிவரே வணக்கம். எல்லா விமர்சனங்களையும் மீறி கமலாதாஸ் அற்புதமான படைப்பாளி. அவரைப் பற்றிய பதிவை நட்சத்திர வாரத்தில் முதல் பதிவாய் எழுதியிருப்பது மிகவும் சரி தமிழ். கவிதை மனதிற்கு நெருக்கமாக இருந்தது. பகிர்விற்கு நன்றி, நதி நட்சத்திரமாகியதற்கு வாழ்த்துக்களும்...

கே.என்.சிவராமன் said...

தமிழ்நதி,

கமலாதாஸ் தொடர்பான ஜெயமோகன் பதிவுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை பதிவு செய்துவிட்டே இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

தவறாக எண்ண வேண்டாம். இந்தப் பதிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. கமலாதாஸ் @ மாதவிக்குட்டியின் படைப்புகள் தொடர்பான உரையாடல் இந்தப் பதிவில் நிகழ்த்தப்படவில்லை.

கவிஞர் சுகுமாரன் உட்பட பலரும் அவரது கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனாலும் நான் அறிந்தவரை கமலாதாஸ் குறித்த சமீபத்திய தமிழ் அஞ்சலி கட்டுரை அல்லது பிரதிகளில் அவரது படைப்புகள் குறித்து அதிகமும் உரையாடப்படவேயில்லை.

இத்தனைக்கும் 'நக்கீரன்' பதிப்பகத்திலிருந்து வெளிவரும் 'இனிய உதயம்' இதழில் சுரா, அவரது சில படைப்புகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சுராவின் தமிழாக்கத்தில் எனக்கு கேள்விகள் உண்டு. என்றாலும் இடைநிலை வாசகர்களிடம் பரவலாக கமலாவின் படைப்புகளை கொண்டு சென்றார் என்பதில் மகிழ்வும் உண்டு.

என்றாலும் பெண் எழுத்தாளர், சர்சைக்குரிய எழுத்தாளர், மதம் மாறினார், பாலியல் விஷயங்களை கையாண்டார்... 'மாத்ரூ பூமி' ஊடகத்தை சேர்ந்தவர்... என்பதான பொதுக் குறிப்புகள் எழுதப்படுகிறதே தவிர, அழுத்தமாக அவரது படைப்புகள் விமர்சிக்கப்படவில்லை.

மலையாள ஊடகங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் அல்லது பதிவுகளில் (திரும்பவும் சொல்கிறேன் - நான் அறிந்த வரை) தெரிந்தோ, தெரியாமலோ கமலாதாஸ், அவருக்கான அடையாளங்களின்றி கொச்சையாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப் போடும் அழகியல் அல்லது அ அழகியல் அல்லது எதிர் அழகியல் குறித்த விஷயங்கள் வாசகப் பரப்பை சென்றடையாமல் தடுத்து நிறுத்துப்படுகிறது. இதனால் பயனடைபவர்கள் யார்?

இந்த சூழலில், பரந்த வாசிப்பனுபவம் உள்ள நீங்களும், கமலாதாஸின் பயோடேட்டா குறித்ததாக மட்டுமே பதிவை அமைத்தது வருத்தத்தை அளிக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் என்று வரும் இடங்களில் உங்களை மட்டுமல்ல, என்னையும் இணைக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். கமலாதாஸின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்திருக்கும் பைத்தியக்காரன், இதுவரை அவரைக் குறித்து எந்தப் பதிவும் எழுதவில்லை. அது ஆண் என்பதலாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா?

மவுனமும் அதிகாரத்துக்கு துணை போகக் கூடியதுதானே...

கே.என்.சிவராமன் said...

தமிழ்நதி,

கமலாதாஸ் தொடர்பான ஜெயமோகன் பதிவுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை பதிவு செய்துவிட்டே இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

தவறாக எண்ண வேண்டாம். இந்தப் பதிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. கமலாதாஸ் @ மாதவிக்குட்டியின் படைப்புகள் தொடர்பான உரையாடல் இந்தப் பதிவில் நிகழ்த்தப்படவில்லை.

கவிஞர் சுகுமாரன் உட்பட பலரும் அவரது கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனாலும் நான் அறிந்தவரை கமலாதாஸ் குறித்த சமீபத்திய தமிழ் அஞ்சலி கட்டுரை அல்லது பிரதிகளில் அவரது படைப்புகள் குறித்து அதிகமும் உரையாடப்படவேயில்லை.

இத்தனைக்கும் 'நக்கீரன்' பதிப்பகத்திலிருந்து வெளிவரும் 'இனிய உதயம்' இதழில் சுரா, அவரது சில படைப்புகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சுராவின் தமிழாக்கத்தில் எனக்கு கேள்விகள் உண்டு. என்றாலும் இடைநிலை வாசகர்களிடம் பரவலாக கமலாவின் படைப்புகளை கொண்டு சென்றார் என்பதில் மகிழ்வும் உண்டு.

என்றாலும் பெண் எழுத்தாளர், சர்சைக்குரிய எழுத்தாளர், மதம் மாறினார், பாலியல் விஷயங்களை கையாண்டார்... 'மாத்ரூ பூமி' ஊடகத்தை சேர்ந்தவர்... என்பதான பொதுக் குறிப்புகள் எழுதப்படுகிறதே தவிர, அழுத்தமாக அவரது படைப்புகள் விமர்சிக்கப்படவில்லை.

மலையாள ஊடகங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் அல்லது பதிவுகளில் (திரும்பவும் சொல்கிறேன் - நான் அறிந்த வரை) தெரிந்தோ, தெரியாமலோ கமலாதாஸ், அவருக்கான அடையாளங்களின்றி கொச்சையாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப் போடும் அழகியல் அல்லது அ அழகியல் அல்லது எதிர் அழகியல் குறித்த விஷயங்கள் வாசகப் பரப்பை சென்றடையாமல் தடுத்து நிறுத்துப்படுகிறது. இதனால் பயனடைபவர்கள் யார்?

இந்த சூழலில், பரந்த வாசிப்பனுபவம் உள்ள நீங்களும், கமலாதாஸின் பயோடேட்டா குறித்ததாக மட்டுமே பதிவை அமைத்தது வருத்தத்தை அளிக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் என்று வரும் இடங்களில் உங்களை மட்டுமல்ல, என்னையும் இணைக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். கமலாதாஸின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்திருக்கும் பைத்தியக்காரன், இதுவரை அவரைக் குறித்து எந்தப் பதிவும் எழுதவில்லை. அது ஆண் என்பதலாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா?

மவுனமும் அதிகாரத்துக்கு துணை போகக் கூடியதுதானே...

தமிழ்நதி said...

இப்போதைக்கு பைத்தியக்காரனுக்கு மட்டும் பதிலளிக்கிறேன்.

நண்பரே,

நீங்கள் சொன்னது உண்மை. இந்தக் கட்டுரை மேலோட்டமானதே. அதற்குக் காரணம் நானல்ல என்பதை இங்கே அழுத்தமாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன். கமலாதாஸ் பற்றிய கட்டுரையை எழுதி வாசிக்கும்படி வால்பாறை கூட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள் கவிஞர் மாலதி மைத்ரியை அழைத்திருந்தார்கள். அவருக்கு வேறு வேலைகள் இருந்தபடியால் அவரால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியவில்லை. கூட்டம் நடைபெற்றது சனிக்கிழமை காலை. வியாழக்கிழமை இரவு பத்து மணியளவில் செல்மா பிரியதர்சன் தொலைபேசியில் என்னை அழைத்து, 'கமலாதாஸ் பற்றிக் கட்டுரை எழுதி வாசிக்கமுடியுமா?'என்று கேட்டார். நான் சொன்னேன் 'அவரது படைப்புகளை நான் முழுவதுமாக வாசித்ததில்லை. ஒரு கட்டுரை எழுதுவதானால் அவரைப் பற்றிய விபரங்களைச் சேகரித்துவிட்டே எழுத ஆரம்பிக்கவேண்டும்"என்று. அவர் தொடர்ந்து வற்புறுத்தினார். வேறு வழியின்றி, நான் ஒப்பேற்றுவதற்கு ஒத்துக்கொண்டேன். அதன்படி முழுமையற்ற ஒரு கட்டுரையையும் எழுதி கொஞ்சம் குற்றவுணர்வோடே வாசித்தேன். அப்படி குறைந்த கால அவகாசத்துடன் எதற்கும் ஒத்துக்கொள்ளக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். என் தவறுதான். மன்னிக்கவும். ஆம்... நீங்கள் சொன்னதுபோல கமலாதாஸைப் பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் ஏன் எழுதக்கூடாது நண்பரே? வாசிக்க ஆவலோடிருக்கிறேன்.

குசும்பன் said...

ஜெயமோகன் போன்ற அதீ மேதாவிகள் இதுபோன்ற கருத்துக்கள் சொல்லாமல் இருந்தால் தான் வியப்பு!

மிதக்கும்வெளி said...

யாருங்க இந்த 'தங்கள் வாசகன்" சரவணன்? அப்பப்ப வந்து அலப்பறையக் கொடுக்கிறாரு? தமிழ் ரைட்டராமாம்!

Anonymous said...

//Kamala Suraiya (Kamala Das) was short -listed for the Nobel Prize for literature//

இதை யாராவது ஜெமோ கிட்ட சொல்லியிருபபங்க. அதைப் படிச்சதுலேருந்து அவருக்கு மூலம் முத்திப் போய் இருக்க வழியில்லாமல் இப்படி கோட்டித்தனமா எழுதுவாரு. அதையும் படிச்சு வெளக்கம் வேற சொல்றீங்க பாருங்க.. நல்லா இருங்க!!

Anonymous said...

//பெண்ணியத்திற்கு ஒரு கரும்புள்ளி. அவரது எழுத்துக்களைக் கவனிக்காமல் விடுவதே நவீனப் பெண்ணியத்திற்கு நல்லது. //

இதப் பார்டா :-)
தமிழ் எழுத்தாளர்ன்னு நிரூபிக்கிறாரே?
இன்னொரு கலாசார பெருச்சாளி ,,மன்னிக்க.. காவலாளி.

Unknown said...

//அவருக்கு ஆண்துணையும் பெண்துணையும் ஏற்றாற்போல் அமையவில்லைபோலும். சுயபுணர்ச்சி எப்பவும் மனத்தடுமாற்றத்தை விளைவிக்கும். //

இதற்கு முந்தைய பதிவில் “கூட்டுப்புணர்ச்சி”, இந்தப் பதிவில் “சுயபுணர்ச்சி”!!! ஒரு முடிவேட தான் திரியிறாரு “தங்கள் வாசகன் தமிழ் எழுத்தாளர்” சரவணன் :-))))))

உடன்பிறப்பு said...

உங்கள் டெம்ப்ளேட் வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது, அதனால் முழுவதும் வாசிக்கவில்லை, மீண்டும் முயற்சி செய்கிறேன். நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்

நந்தா said...

தமிழ்நதி நட்சத்திர வாழ்த்துக்கள்.

கருத்தியல் முரண்கள் என்று பார்த்தால் இப்போதெல்லாம் பலருடைய பதிவுகளிற்கு எதிர்பதிவுகள் போட்டே தீரவேண்டியதாய் இருக்கிறது.

இங்கே பிரச்சினையே ஏறக்குறைய விஜய், ரஜினி ஆகியோரின் தொண்டர்களைப் போல தனக்கும் ஒரு பெரும் கூட்டத்தை இப்போது சில எழுத்தாளர்கள் மெல்ல சேர்த்து வைத்திருப்பதுதான். இவர்கள் எழுதும் எதையும் அப்படியே மனதில் தன் கருத்தாக ஏற்றி வைத்துக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும் சிலருக்காக இப்படி மெனக்கெட்டு பதில் பதிவுகளை இட வேண்டியதாயிருக்கிறது உங்களுக்கு.

மயாதி said...

"கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி"

இந்த தலைப்பு குறிப்பது , ``கமலாதாஸ் என்பவர் சர்ச்சைகளை விரும்பி முரண் பட்ட கருத்துக்களை சொன்னவர். அவர் சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை சொன்னார் .``

எனது தமிழ் அறிவின் படி இப்படித்தான் நினைத்தேன் !

ஆனால் கட்டுரையை வாசிக்க வாசிக்க நான் நினைத்த தலைப்புக்கு முரண் பாடாக கட்டுரை இருப்பதைக் கண்டு மீண்டும் தலைப்பை ஆழமாக பார்த்த போதுதான் புரிந்தது, இந்த தலைப்பின் அர்த்தம் , சர்ச்சைகளால் காதலிக்கப்பட்டவர் கமலாதாஸ்.

மன்னித்துக் கொள்ளுங்கள் என் தமிழறிவு மங்கி விட்டதால் ஏற்பட்ட பிழையாகவும் அது இருக்கலாம் .
ஆனால் தமிழ் வழக்கில் இரண்டு விதமாகவும் இந்த தலைப்பு எடுத்துக் கொள்ளப் படலாம். அதாவது நான் முன்பு நினைத்த கருத்தை சொல்வதற்கு இதே வசன அமைப்பை பயன்படுத்தலாம் , ஆனால் அது தப்பு.

இதை நான் சொல்லவில்லை , சில நாட்களுக்கு முன் தமிழ்க் கூடல் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியில் ஒரு அறிஞர் , பத்திரிகைகளில் இவ்வாறான தலைப்புக்கள் , பார்த்தவுடன் மக்களை கவரும் நோக்கத்தில் இடப்படுவதை சுட்டிக் காட்டி இருந்தார்.

அதற்குப் பிறகுதான் நானே யோசித்தேன் , சகஜமாக நடக்கும் இந்தப் பிழைகளை.

மயாதி said...

Saravanan, P said...

எனது கணிப்பில் கமலாதாஸ் தற்காலிக மனத்தடுமாற்றம் உள்ளவர். மெல்லியதான மனநிலைப் பிறழ்வும் உடையவர். அவரது பேச்சும் எழுத்தும் பகல்நேரக் குடிகாரரின் கருத்துக்களை ஒத்தவையே. ஒரு விதத்தில் கமலாதாஸ் காமம்சார்ந்த மனஅழுத்தக்காரர். அவருக்கு ஆண்துணையும் பெண்துணையும் ஏற்றாற்போல் அமையவில்லைபோலும். சுயபுணர்ச்சி எப்பவும் மனத்தடுமாற்றத்தை விளைவிக்கும். அவரது மனத்தடுமாற்றத்திற்கு அவரேதான் காரணம். அவர் சார்ந்த சமூகமோ மதமோ மொழியோ அல்ல. அவர் பெண்ணியத்திற்கு ஒரு கரும்புள்ளி. அவரது எழுத்துக்களைக் கவனிக்காமல் விடுவதே நவீனப் பெண்ணியத்திற்கு நல்லது.//

இங்கே இந்த நண்பர், சுய புணர்ச்சி என்று எதைக் கூறுகிறார் என்று தெளிவாக தெரியவில்லை.

சுய இன்பமா?
ஓரினச் சேர்க்கையா?

சுய இன்பம் என்றால், அது மனத் தடுமாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது?
99%ஆண்களும், 85% பெண்களும் சுய இன்பம் பெறுபவர்களே ! இது அங்கி கரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிபு. இவர்களுக்கெல்லாம் மனத் தடுமாற்றம் வந்தால்?


மற்றும் இதுவரை உள்ள அறிவியல் அறிவு சொல்வது, சுய இன்பம் எந்த கெடுதலும் அற்றது என்று.

சுய இன்பம் பற்றி பேசுவது நம் சமூகத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்ற கருத்தை வேண்டுமானால் சொல்லலாம். அதற்காக அது மனத் தடுமாற்றம் ஏற்படுத்துவது என்று பொய் தகவல் சொல்வது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது.

பாலியல் சம்பந்தமாக பேசும் போது கொஞ்சம் துறை சார் அனுபவம் பெற்று பேசுவது உகந்தது, வெறுமனே வாசிப்பை மட்டும் பேசாமல்.

இது ஏன் தாழ்மையான கருத்து , குறிப்பிட்ட அந்த நபரைப் போய்ச் சேரும் என்று நம்புகிறேன்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் தமிழ்நதி

// வழக்கம்போல தனது நியாயத் தராசிலே கமலாதாஸையும் நிறுத்தி எடைபோட்டபின் அவரால் மொழியப்பட்ட வாசகங்கள் இவைதாம்:
//

என்ன தமிழ்நதி, ஜெயமோகனின் இது போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாருமறிந்ததுதானே. இன்னும் அவர், கமலாதாஸ் மேற் சொன்ன காரணங்களால் பைத்தியம் பிடித்து இறந்து போனார் என்று எழுதியிருந்தால் கூட அதிசயமில்லை.

மற்றும்படி, ஒரு பெண் எழுதுவதை கூட (அப்ப்டி எழுதினால்கூட ரமணிசந்திரன் பாணியில்தான் எழுதலாம்) ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகம், அவர் மரபு மீறி எழுதும்போது அதை தாங்கமுடியாமல், அவர்கள் மீது சேற்றை வாரி வீசும் ஒருசெயலாகதான் இதை பார்க்கவேண்டும். இன்னும் நாம் காட்டு மிராண்டிகளாகத்தானே சில விடயங்களில் வாழ்ந்து வருகிறோம்.

Vinothini said...

Hi,

Your article reminded me of my translation of the same poem. It appeared in 'Therithal' magazine published in Jaffna. Thanks for the piece.

Vinothini

Unknown said...

pl remove background image , or try to change your template , it's very hard to read ..
vivek

வஹ்ஹாபி said...

கமலாதாஸைக் குறித்து ஒரு மதம் பிடித்தவன் பார்வையில் எனது பதிவு:
http://wahhabipage.blogspot.com/2009/06/blog-post.html

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

நாளை நாம் விரிவாக உரையாடலாம். இன்று ஒரேயொரு விடயம் சொல்ல விரும்புகிறேன்.

எனது வார்ப்புருவிலுள்ள பூனைக்குட்டி வாசிப்பில் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக சில நண்பர்கள் சொல்கிறார்கள். எனக்குப் பூனைகளை மிகப் பிடிக்கும். அதனால் வார்ப்புருவிலும் பூனைக்குட்டியை வளர்க்கிறேன். அது உங்களை இடைஞ்சல் செய்கிறதென்றால் மனவருத்தத்தோடு எடுத்துவிடுவதுதான் நியாயம். ஆனால், வேறு வார்ப்புரு மாற்றும்போது ஏற்கெனவே இவ்வலைத்தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பல விடயங்கள் இல்லாமல் போகும். அதனால், நிறைய நேரம் இருக்கும் நாளில் மாற்ற உத்தேசம். நட்சத்திர வாரம் முடியும்வரை தயவுசெய்து இந்தப் பூனை உறுத்தலைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அதை நீக்கவேண்டுமென்று நினைக்க உண்மையில் மனம் துக்கமடைகிறது. உயிருள்ள ஒன்றை நீக்குகிறாற்போல... ஆனாலும், வேறு வழியில்லை அல்லவா:(

sathiri said...

கமதாஸ் பற்றி அறிந்திருக்கிறேன்..படித்திருக்கிறேன்..அது யாருங்க ஜெயமோகன்.. படித்துமில்லை அறிந்ததுமில்லை..பெரீய்ய மேதாவியா?? ஏனென்றால் எனக்கு மே தாவிகளைப்பற்றித்தெரியாது

Ayyanar Viswanath said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தமிழ்.. நாங்க முழிபெயர்த்தாலாம் லிங்க் தரமாட்டீங்களா :)
இதோ
http://ayyanaarv.blogspot.com/2009/06/blog-post.html

Unknown said...

try this one ..

http://petblog-btemplates.blogspot.com/

vivek

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பூனைக் குட்டியை மாற்றாது. தங்கள் பதிவின் எழுத்துக்களை சற்று கடும் நிறத்தில் தேர்ந்தால் வாசிக்க இலகுவாக இருக்குமெனக் கருதுகிறேன்.

Anonymous said...

/அவரது பிரதிகள் சுட்டிக் காட்டும் அல்லது கலைத்துப் போடும் அழகியல் அல்லது அ அழகியல் அல்லது எதிர் அழகியல் குறித்த விஷயங்கள் வாசகப் பரப்பை சென்றடையாமல் தடுத்து நிறுத்துப்படுகிறது/


azhakiyal vs. ethir azghakiyal, pirathikal, kalaiththuppOdal!!

romba muggiyam.

20000 died, 300,000 in camps. no literary mouthpiece cared about the people who share the same language and culture. Why on earth this set of words are being juggled!!

For you all, talking about 'Literature' is just an identity buying/lending task.

Anonymous said...

ஜெமோ எப்போதிலிருந்து அபத்தமாக எழுத ஆரம்பித்தார் தமிழ்நதி. சாருவின் பதிவை ஒப்புக்கொண்ட பிறகிலிருந்தா.

தங்கள் வாசகன்
நதிமூலம்

தமிழ்நதி said...

சரவணனுடன் ஏற்கெனவே உரையாடிவிட்டேன் அன்றேல் பதிலளித்துவிட்டேன். 'இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது சக்தி விரயம்'என்ற அவரது கருத்தினோடு சற்று உடன்பட முடிகிறது. ஆனால், பட்டறிந்தபின்னரே எனக்கும் ஞானம் பிறக்கும். அதுவரையில் செல்வேன் என்றே நினைக்கிறேன்.

ராஜா/KVR,

"சரவணனும் அடுத்த ஜெயமோகனாக தன்னை உருவகப்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்."

வாதங்களால் சிலவற்றை வெல்லலாம். ஆனால், அடிப்படை உண்மை ஒன்று உண்டு. அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஜெயமோகனுடைய அதிரடியான பல கருத்துக்களும் 'கமலாதாஸ் கரும்புள்ளி'என்ற சரவணனின் ஒற்றைப்படையான பார்வையும் நிச்சயமாக ஏற்புடையனவல்ல. தர்க்கரீதியாகப் பேசக்கூடியவர்கள் அவர்களது கருத்துருவாக்கங்களை மறுத்துரைக்கவேண்டும்.

உமா ஷக்தி,

வழக்கமாக 'தோழி'என்று விளிப்பீர்கள். இன்று என்னவோ 'நட்சத்திரப் பதிவரே'என்கிறீர்கள். நெருக்கம் பிரிவை வளர்க்கிறதா... என்னமோ நடக்கட்டும் தாயே.. இதுதான் எனது முதல் பதிவு என்பதாக பின்னூட்டம் வேறு... அலுவலகத்தில் வேலை அதிகமா உமா:)

குசும்பன்,

பெயருக்கேற்றபடி இருக்கிறது உங்கள் பின்னூட்டம்:)

சுகுணா,

'எனது வாசகர் சரவணன்'இப்போதுதான் பின்னூட்டமிடுகிறார். யாரென்று உண்மையில் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் 'புணர்ச்சி'என்ற சொல் அவருக்குப் பிடிக்கும் என்பதுதான். இரண்டு பின்னூட்டங்களிலுமே 'கூட்டுப்புணர்ச்சி, சுயபுணர்ச்சி, விந்து'இன்னோரன்ன சொற்களைக் காணமுடிந்தது. மேற்கொண்டு என்ன சொல்ல இருக்கிறது:)

ஆசிப் மீரான்,

நீங்கள் சொன்ன தகவலை நான் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் மூலம் முத்தியதென்கிறீர்களா...? வழிமொழிகிறேன் என்றால் வம்பாகிவிடும் ஐயா.

இந்த 'கலாச்சாரக் காவலாளி'களைப் பற்றி ஒரு பதிவு எழுதலாமென்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

--
உடன்பிறப்பு, (இந்தப் பெயர் யார் யாரையோ நினைவுபடுத்துகிறது. என் உடன்பிறப்புகளையல்ல)

வார்ப்புருவை மாற்றவே நினைத்திருக்கிறேன். 'மாற்றுகிறேன் பேர்வழி'என்று நட்சத்திர வாரத்தை சொதப்பி விடக்கூடாதென்பதால் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறேன்.

தமிழ்நதி said...

மயாதி,

நீங்கள் நுட்பமாக அவதானித்திருக்கிறீர்கள். பல தடவை தடுமாறியபின்னரே 'சர்ச்சைகளின் காதலி'என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் சொன்ன அதே சமாதானத்தை 'சர்ச்சைகளால் காதலிக்கப்பட்டவர்'என்ற பொருளும் வரும் என்பதை நினைத்து அதைத் தலைப்பாக வைத்தேன். பொருள் மயக்கம் தரத்தக்க தலைப்புத்தான் அது. தமிழில் நாம் எழுதினாலும், தமிழ் மிகக் கவனமாகத் தன்னை எழுதிக்கொள்கிறது.


நன்றி நந்தா,

நீங்கள் சொல்வது உண்மை. நமக்குத் தவறெனத் தோன்றுவதை ஒருவர் எழுதும்போது, அது கருத்துருவாக்கம் பெற்று உண்மை செத்துப்போகுமோ என்று அஞ்சுகிறோம். அந்தப் பதட்டத்தினால் பதில் பதிவு எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். சும்மா இருக்க விடமாட்டுதாம் இந்த மனச்சாட்சி.

மயாதி,

சுயஇன்பம் பற்றிய சரவணனின் கருத்துக்கு நீங்கள் பதிலளித்திருப்பது மகிழ்ச்சி. அதனால் எவ்வித இழப்புமில்லை என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாகத்தான் நானும் வாசித்திருக்கிறேன்.

"சுயஇன்பம் சமூகத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்ற கருத்தை வேண்டுமானால் சொல்லலாம்"

இந்தச் சமூகம் காமத்திற்கு வேறென்ன வடிகாலை, வழிகளை வைத்திருக்கிறது நண்பரே?

அருண்மொழிவர்மன்,

"மற்றும்படி, ஒரு பெண் எழுதுவதை கூட (அப்ப்டி எழுதினால்கூட ரமணிசந்திரன் பாணியில்தான் எழுதலாம்) ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகம், அவர் மரபு மீறி எழுதும்போது அதை தாங்கமுடியாமல், அவர்கள் மீது சேற்றை வாரி வீசும் ஒருசெயலாகதான் இதை பார்க்கவேண்டும்."

என்று சொல்லியிருந்தீர்கள். மேற்கண்ட ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகவே கமலாதாஸ் போன்றவர்கள் எழுதினார்கள். கருத்துச் சுதந்திரத்தின் வாயில் வழியாக அடிமைகள் தப்பித்துப் போய்விடுவார்களோ என்ற பதட்டத்தின் வெளிப்பாடாகவே ஜெயமோகன் வகையறாக்களின் எதிர்வினைகளைப் பார்க்கவேண்டியுள்ளது. நம் பெண்களையும் சொல்வதற்கில்லை.. இந்தியாவிலிருந்து வரும்போது ரமணிச்சந்திரன் புத்தகம் வாங்கிவாருங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்கே கொண்டுபோய்த் தலையை இடித்துக்கொள்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வினோதினி,

நீங்கள் வந்து கதைக்கும்போதெல்லாம் குற்றவுணர்வாக இருக்கிறது. உங்கள் புத்தகத்திற்கு இன்னமும் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் பயணத்தின்போதாவது எழுதிவிடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் மொழிபெயர்த்த கவிதையைத் தட்டச்சியிருந்தால் எனக்கு அனுப்பிவையுங்களேன் தயவுசெய்து. நன்றி.

விவேக்,

பூனைக்குட்டி விரைவில் என்னைவிட்டுப் போகிறது. வார்ப்புருவை எளிமைப்படுத்துகிறேன்.கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.

வஹ்ஹாபி,

உங்கள் வலைத்தளத்தை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன். நிறையத் தரவுகள் கிடைத்தன. நன்றி.

சாத்திரி,

'மே தாவி'களை நான் படித்திருக்கிறேன். பிடித்தும் இருந்தது. இப்போதும் அவரது புனைவுகள் பிடிக்கின்றன. அபுனைவுகளிலுள்ள அபத்தங்கள் மற்றும் அதிரடிக் கருத்துக்கள்தாம் அருட்டுகின்றன.


அய்யனார்,

'முழிபெயர்த்தால்'எப்படிப் போடுவது? நீஙகளே யோசித்துப் பாருங்கள்:) என்னால் பின்னூட்டங்களை moderate செய்ய இயலவில்லை. நீங்களும் நன்றாகவே முழி மன்னிக்கவும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உடனே ஞாபகம் வரவில்லை. அதனால் எடுத்துப் போடவில்லை அய்யனார்.

பரிந்துரைக்கு நன்றி யோகன். எழுத்துக்களைக் கடும் நிறத்தில் போட்டும் அப்பத்தான் தெரிகிறதாம். ஆனால், என் கணனியில் மிகத் துல்லியமாகத் தெரிகிறது. வேறு வழியில்லை.. வார்ப்புருவை மாற்றித்தானாக வேண்டும் போலிருக்கிறது.

அனானி நண்பரே,

அண்மையில் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டேன். இரண்டிலும் 'ஈழத்தமிழர் பேரழிவைப் பற்றி தமிழகத்து எழுத்தாளர்கள் பேசவில்லை'என்ற விசயம் பேசப்பட்டது.பேசப்பட்டது... பேசப்பட்டது. அவ்வளவுதான். பேசியவர்களை 'இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் எழுதவில்லை?'என்று கேட்டிருந்தால்...? நான் கேட்கவில்லை. கேள்விகளிலுள்ள நியாயத்தைப் பார்ப்பவர் எவருமில்லை...'என்னையா கேட்டாய்?'என்று வன்மம் வளர்ப்பார்கள். என்ன செய்வது? ச்சே...!(என்னையும் சேர்த்துத்தான் ச்சே என்கிறேன்)