5.29.2007

சொல்லாத சொல்



நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்
தொடங்குகிறது அழுத்தமான மௌனம்.
அள்ளிக்கொள்ளவியலாத
இளவேனில் நிறங்கள்
முழுவதுமாய் உள்ளிழுக்கவொண்ணா
மல்லிகை வாசனை
குழந்தையொன்றின் உள்ளங்கால்களை
எத்தனை முத்தமிட்டும் எஞ்சியிருக்கும்
அதீத அன்பினையொத்திருக்கிறது அது.

எனதொரு சொல்லின் மீதேறி
நீ இந்தக் கோடையைக் கடந்துவிடலாம்
துருவேறிய என் தனிமையின் தாள்களை
உனதொரு பாடல் திறந்துவிடலாம்

பூட்டப்பட்ட அறையினுள்
விலங்கென அலைகிறது வேட்கை

மௌனம் படபடவென்றடிக்க
மூச்சுத்திணறலுடன்
சடாரென நமது புனித அறைகளுக்குள்
பாய்ந்தோடி விடுகிறோம்
இறுக்கமான கவசங்களின் கீழ்
தட்டையாகிறது உடல்

இந்த உடலை வானத்தை நோக்கி
எய்துவிட முடியாதா அன்பே!

நீயும் நானும் பாதுகாப்பாய்
யன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறோம்
படியும் இடம்தேடி மிதந்துகொண்டிருக்கும்
வண்ண நீர்க்குமிழியை.

7 comments:

மஞ்சூர் ராசா said...

இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!

- ???????

தமிழ்நதி said...

"இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!

- ???????"
மஞ்சூர் ராசா!அவனைச் சேரவியலாத இந்த உடலை இந்தப் பூமியிலிருந்து சுழற்றியெறிந்துவிட இயலாதா என்ற இயலாமையில் அவள் அரற்றியது. 'வெட்டுவேன் கொல்'என்பதன் சாயலை நினைத்து வாசியுங்கள். கேள்வி அடையாளம் அழிந்துபோகும்.

மஞ்சூர் ராசா said...

சொல்லவந்தது புரிகிறது. கவிதையை கோர்வையை அந்த வரிகள் மாற்றுகின்றன என சொல்லவந்தேன்.

தூரன் குணா said...

தமிழ்நதி...

பூட்டிபாதுகாக்க முடியாத நீர்குமிழி மற்றும் மிதக்கவிட முடியாத வேட்கைகளின் துயரங்கள்
சூழ்ந்தவர்கள்தானே நாம்?
//
இந்த உடலை வானத்தை நோக்கிஎய்துவிட முடியாதா அன்பே!
//
எழுச்சிமிகுந்த மனோநிலையில் எழுதியிருப்பீர்கள் போல..கேள்வியாய் ஆக்கியிருக்காமல் அந்த இயலாமையை
மட்டும் குறித்திருந்தால் இன்னும் அந்த வரி நிறைய உரையாடியிருக்கும்

எத்திசையிலும் பயணிக்கும் திறமை உங்கள் கவிதைக்கிருக்கிறது....

அபிமன்யு said...

//மௌனம் படபடவென்றடிக்க
மூச்சுத்திணறலுடன்
சடாரென நமது புனித அறைகளுக்குள்
பாய்ந்தோடி விடுகிறோம்
இறுக்கமான கவசங்களின் கீழ்
தட்டையாகிறது உடல்//

தமிழ்நதி,

உங்களுடைய பெரும்பாலான கவிதைகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது வரையறுக்கப்பட்ட புனிதத்தன்மைகளுக்கெதிரானதொரு கேள்வி/அயர்ச்சி...சரிதானா?

//நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்
தொடங்குகிறது அழுத்தமான மௌனம்.
அள்ளிக்கொள்ளவியலாத
இளவேனில் நிறங்கள்
முழுவதுமாய் உள்ளிழுக்கவொண்ணா
மல்லிகை வாசனை
குழந்தையொன்றின் உள்ளங்கால்களை
எத்தனை முத்தமிட்டும் எஞ்சியிருக்கும்
அதீத அன்பினையொத்திருக்கிறது அது//

இதே சாயலில் நானும் எப்போதோ எழுதியிருக்கிறேன் என் கவிதையை... நீங்கள் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்..

காயத்ரி சித்தார்த் said...

//குழந்தையொன்றின் உள்ளங்கால்களை
எத்தனை முத்தமிட்டும் எஞ்சியிருக்கும்
அதீத அன்பினையொத்திருக்கிறது அது//

என்ன அழகான உவமை! பரவசமாய் ஒரு உணர்வு வந்தது படித்தபோது.. கலக்குறீங்க தமிழ்!

கீர்த்தனா said...

மிக அருமையான கவிதை தமிழ்நதி.